Published : 21 Jun 2023 06:03 AM
Last Updated : 21 Jun 2023 06:03 AM

சார்பதிவாளர் அலுவலகங்களில் சர்வர் முடக்கத்தால் பணி பாதிப்பு

சென்னை: மின்சார பிரச்சினை காரணமாக பத்திரப் பதிவு சர்வர் முடங்கியதால், தமிழகம் முழுவதும் சார்பதிவாளர் அலுவலகங்களில் நேற்று பிற்பகல் 3 மணி வரை பதிவு பணிகள் பாதிக்கப்பட்டன.

தமிழகத்தில் சார்பதிவாளர் அலுவலகங்கள் அனைத்திலும் ஸ்டார் 2.0 மென்பொருள் தற்போது பயன்படுத்தப்பட்டு, பத்திரப்பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சார்பதிவாளர் அலுவலகங்களில் பத்திரப் பதிவு செய்யப்பட்டாலும், அவற்றின் பதிவுக்கான பிரதான சர்வர், சென்னை சாந்தோமில் உள்ள பதிவுத்துறை தலைவர் அலுவலகத்தில் உள்ளது. இந்நிலையில், நேற்று பதிவுத்துறை தலைவர் அலுவலகத்தில் மின் இணைப்பில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக சர்வர் முடங்கியது.

இதனால், தமிழகம் முழுவதும் உள்ள 575-க்கும் மேற்பட்ட சார்பதிவாளர் அலுவலகங்களில் பதிவுப்பணிகள் பாதிக்கப்பட்டன. மாலை 3 மணிக்குப் பின்னர் சர்வர் பிரச்சினை சரி செய்யப்பட்டதால், பதிவுப்பணிகள் தொடர்ந்து நடைபெற்றன. சில இடங்களில் பெறப்பட்ட டோக்கன்களில் 50 சதவீதம் பத்திரப்பதிவு நேற்று நடைபெற்றது. மீதமுள்ளவை இன்று நடைபெறும் என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து பதிவாளர்களிடம் கேட்டபோது, “வழக்கமாக டோக்கன் அதிகம் வழங்கப்பட்ட நாட்களில் மாலை நேரங்களில் பதிவுப் பணிகள் விரைவாக மேற்கொள்ள முடியாதபடி, இணையதள இணைப்பில் பிரச்சினைகள் ஏற்படும். அதன்பின் சரியாகும். ஆனால் இன்று சர்வர் பிரச்சினையால் பணிகள் பாதிக்கப்பட்டன. குறைந்த அளவே மக்கள் வந்திருந்ததால் பெரிய அளவில் பிரச்சினை இல்லை” என்றனர்.

பதிவுத் துறை தரப்பில் கேட்டபோது, “விரைவில் ஸ்டார் 3.0 மென்பொருள் அறிமுகமாக உள்ளது.அப்போது அனைத்து சிக்கல்களுக்கும் தீர்வு ஏற்படும்” என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x