Published : 21 Jun 2023 06:19 AM
Last Updated : 21 Jun 2023 06:19 AM
தஞ்சாவூர்: தஞ்சாவூர்- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செங்கிப்பட்டியில் உள்ள மேம்பாலத்தில் பக்கவாட்டு சுவரின் ஒரு பகுதி இடிந்து சேதமடைந்தது. இதனால், அந்த மேம்பாலத்தின் மீது போக்குவரத்து முழுமையாக நிறுத்தப்பட்டு, அணுகுசாலைகள் வழியாக வாகனங்கள் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. சேதமடைந்த பாலத்தை ஆட்சியர், என்ஐடி பேராசிரியர்கள் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்.
தஞ்சாவூர்- திருச்சி தேசிய நெடுஞ்சாலை 15 ஆண்டுகளுக்கு முன்பு நான்குவழிச் சாலையாக மேம்படுத்தப்பட்டது. அப்போது, செங்கிப்பட்டியில் இருபுறமும் அணுகுசாலைகளுடன் கூடிய மேம்பாலம் கட்டப்பட்டது.
இந்த நிலையில், தஞ்சாவூர்- திருச்சி வழித்தடத்தில் செங்கிப்பட்டி மேம்பாலத்தின் பக்கவாட்டு சிமென்ட் சுவர் அடுக்குகளில், நேற்று காலை 60 அடி நீளம், 30 அடி அகலம் அளவுக்கு இடிந்து விழுந்து, மண் சரிவு ஏற்பட்டது. தகவலறிந்த நெடுஞ்சாலை, காவல் மற்றும் வருவாய்த் துறை அலுவலர்கள் அங்கு சென்று மேம்பாலத்தில் நேரிட்ட சேதத்தைப் பார்வையிட்டனர். தொடர்ந்து, மேம்பாலம் வழியாக போக்குவரத்து உடனடியாக நிறுத்தப்பட்டு, இருபுறமும் உள்ள அணுகுசாலைகள் வழியாக வாகனங்கள் செல்ல அறிவுறுத்தப்பட்டது.
இதனிடையே, மேம்பாலத்தில் சேதம் ஏற்பட்டதைக் கண்டித்தும், சேதத்தை உடனடியாகச் சீரமைக்க வலியுறுத்தியும் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலர் என்.வி.கண்ணன் தலைமையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் அணுகுசாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது, சேதத்தைப் பார்வையிட அங்கு வந்த மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப், மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, மறியலைக் கைவிடச் செய்தார். தொடர்ந்து, மேம்பாலத்தில் சேதம் அடைந்த பகுதியைப் பார்வையிட்டு, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
பின்னர், தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணைய திட்ட இயக்குநர் கணேஷ்குமார் தலைமையிலான பொறியாளர்கள் மற்றும் திருச்சி தேசிய தொழில்நுட்பக் கல்லூரி பேராசிரியர்கள் பாஸ்கரன், முத்துக்குமரன் உள்ளிட்டோர் மேம்பாலத்தில் சேதமடைந்த பகுதியை ஆய்வு செய்தனர்.
பாலத்தைச் சீரமைக்க முடியுமா அல்லது புதுப்பித்து கட்ட வேண்டுமா என்பது குறித்து முழு ஆய்வுக்குப் பிறகு தெரிவிக்கப்படும் என பொறியாளர்கள் கூறினர்.
தஞ்சாவூர்- திருச்சி இடையே தேசிய நெடுஞ்சாலைப் பணிகள் கடந்த 2003-ம் ஆண்டில் தொடங்கி, 2008-ம் ஆண்டு நிறைவு பெற்று, அதே ஆண்டில் போக்குவரத்துக்கு திறந்துவிடப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT