Published : 31 Oct 2017 08:49 AM
Last Updated : 31 Oct 2017 08:49 AM
தமிழகத்தில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய குட்கா ஊழல் வழக்கில் முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட குட்கா - பான் மசாலா தயாரிப்பாளரிடமிருந்து சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) புலனாய்வுப் பிரிவினர் ரூ.9 கோடியை உற்பத்தி (கலால்-எக்சைஸ்) வரியாக வசூலித்திருக்கின்றனர். தமிழகத்தில் வரி ஏய்ப்பு செய்ததாக குட்கா-பான்மசாலா தயாரிப்பாளர் ஒருவர் மீது வழக்கு பதிவு செய்த ஜிஎஸ்டி புலனாய்வுப் பிரிவினர் பிற மத்திய முகமைகளுடன் இணைந்து இந்த ஊழலின் சில அம்சங்கள் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தினர்.
இந்தத் தகவலை ‘தி இந்து’விடம் பகிர்ந்துகொண்ட சுங்கம்-உற்பத்தி வரித்துறை ஊழல் கண்காணிப்பு தலைமை இயக்குநரகத்தைச் சேர்ந்த மூத்த அதிகாரி, வரி விதிப்பின் எந்தப் பிரிவின் கீழ் இதை அந்த தயாரிப்பாளர் செலுத்தினார் என்ற கேள்விகளுக்குப் பதில் அளிக்கவில்லை. இதுகுறித்து அவர் மேலும் கூறும்போது, “குறிப்பிட்ட அந்த குட்கா உற்பத்தியாளர் தானாகவே முன்வந்து ரூ.9 கோடியை உற்பத்தி வரியாகச் செலுத்தியிருக்கிறார். இறுதியாக செலுத்த வேண்டிய தீர்வை எவ்வளவு என்பது புலனாய்வுத் துறையின் விசாரணைக்குப் பிறகே தெரியவரும்.
மத்திய உற்பத்தி வரித்துறை அதிகாரிகள் இந்த ஊழலில் சம்பந்தப்பட்டிருப்பதாக வந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் சில அதிகாரிகள் அடையாளம் காணப்பட்டு அவர்களிடம் விளக்கம் கேட்கப்பட்டிருக்கிறது. இதில் தொடர்பிருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில் அதிகாரிகள் இடமாற்றம்கூட செய்யப்பட்டுள்ளனர்.
போதுமான சாட்சியங்கள் அல்லது ஆவணங்கள் கிடைத்த பிறகு ஊழல் தடுப்பு சட்டத்தின்கீழ் மேல் நடவடிக்கை எடுக்க மத்திய புலனாய்வுப் பிரிவுக்கு (சிபிஐ) இந்த வழக்கு பரிந்துரைக்கப்படும். போதிய ஆவணங்கள் கிடைக்காவிட்டால், இத்துறையின் ஒழுங்கு கட்டுப்பாட்டு சட்டத்தின் கீழ் அந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ்நாட்டில் பான் மசாலா தயாரிக்கப்பட்டது, விற்கப்பட்டது என்பது உறுதியாகியிருக்கிறது” என்றும் அந்த அதிகாரி கூறினார்.
வருமான வரித்துறையிடமிருந்து தமிழக தலைமைச் செயலாளருக்கு வந்த ரகசிய ஆவணத்தை மேற்கோள் காட்டி, குட்கா ஊழலை கடந்த ஜூன் மாதம் ‘தி இந்து’ நாளிதழ்தான் முதலில் அம்பலப்படுத்தியது. சென்னையில் குட்காவை தயாரிக்கவும், விற்கவும் மாநில அமைச்சர், ஐபிஎஸ் அந்தஸ்தில் உள்ள 3 காவல் துறை அதிகாரிகள், மத்திய, மாநில அதிகாரிகள் ஆகியோருக்கு தரப்பட்ட லஞ்சம் தொடர்பான விவரங்கள் அந்த ஆவணத்தில் இருந்தன.
வருமான வரித் துறையிடமிருந்து அப்படி எந்த ஆவணமும் தங்களுக்கு வரவில்லை என்று தமிழக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை, இந்த குற்றச்சாட்டுகள் குறித்தும், மாயமாகிவிட்ட அந்த ஆவணம் குறித்தும் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு ஆணையம் (டிவிஏசி) தனியாக ஒரு ஆணையரை நியமித்து விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
விசாரணையில் தேக்கநிலை ஏன்?
சட்ட விரோத குட்கா - பான் மசாலா வியாபாரத்திற்கென நடந்த பணப் பரிமாற்றங்கள் தொடர்பாக வருமான வரித் துறையினர் தங்கள் சோதனையில் பல ஆதாரங்களைக் கைப்பற்றினர். அந்த ஆதாரங்களின் அதிகாரபூர்வமான நகல்களை தமிழக அரசின் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவிடம் மேல் நடவடிக்கைக்காக பகிர்ந்துகொண்டனர். ஆனால், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவினர் இந்த ஆதாரங்களின் உண்மைத் தன்மையை உறுதி செய்வதற்காகவும், வருமான வரித்துறை கைப்பற்றிய ‘பென் டிரைவ்’ அல்லது ‘ஹார்டு டிஸ்க்’ போன்றவற்றில் பதிவான தரவுகளை மாற்றிவிட முடியும் என்பதால் மூல ஆவணங்களை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கேட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
ஊழல் தொடர்பாக வருமான வரித்துறை அளித்த நகல்கள் போதிய சான்று அல்ல என்று கருதிய ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு ஆணையம், இந்தத் தகவல்கள் அடங்கிய மூல ஆவணம் வேண்டும் என்று வற்புறுத்தியதால் விசாரணையில் தேக்கநிலை ஏற்பட்டது. இந்த வழக்கில் மேற்கொண்டு விசாரணை நடத்துவதற்கு முன்னால் மூல தடயங்கள் பாதுகாப்பாக இருப்பதைத் தாங்கள் உறுதி செய்துகொள்ள வேண்டும் என்று ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு ஆணையம் தெரிவித்தது. அந்த ஆவணத்தில் உள்ளவற்றை உறுதி செய்யும் சான்றுரையின் நகல்களை ஏற்கெனவே கொடுத்துவிட்டதாகவும், குறிப்பாக ஆணை பிறப்பிக்கப்படாமல் தங்களால் மூல ஆவணத்தைப் பகிர்ந்துகொள்ள முடியாது என்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் பதிலுக்குக் கூறிவிட்டனர்.
“டிஜிட்டல் வடிவங்களில் இருக்கும் ஆவணங்கள் அழிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. எனவே ஆதாரங்கள் உண்மையானவையா என்ற சந்தேகம் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டியிருக்கிறது. தகவல்கள் அடங்கிய ஆவணங்களைப் பகிர்ந்துகொள்ள வருமான வரித் துறையினர் விரும்பாவிட்டால், நாங்கள் நீதிமன்றத்தை நாட வேண்டி இருக்கும்” என்று ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரக அதிகாரி தெரிவிக்கிறார்.
குட்கா தொடர்பான பணப் பரிமாற்றங்கள் தொடர்பாக மேல் மட்டம் வரை குற்றச்சாட்டுகள் எழுந்தபோதும், காவல் துறை உள்ளிட்ட இடைநிலை அதிகாரிகள் மீது மட்டுமே வழக்கு பதிவு செய்திருந்தது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு ஆணையம். ஆனால், குட்கா வியாபாரி ரூ.9 கோடி கலால் வரி செலுத்தி இருப்பதாகத் தகவல்கள் வெளியாகும் நிலையில், வருமான வரித்துறையின் அப்போதைய முதன்மை (விசாரணை) இயக்குநர் பி.ஆர்.பாலகிருஷ்ணன் தாங்கள் கேட்ட கேள்விக்கு அளித்த பதில்களில் சிலவற்றின் மீது இப்போது கவனம் செலுத்தி வருவதாக விசாரணை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதையொட்டி, இதேபோன்ற வினாத் தொகுப்புகள் அப்போதைய தலைமைச் செயலாளர் பி.எஸ்.ராமமோகன ராவ் மற்றும் அப்போதைய காவல் துறை இயக்குநர் அசோக் குமார் ஆகியோருக்கும் அனுப்பப்பட்டிருப்பதாக அந்த அதிகாரிகள் கூறுகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT