Published : 23 Oct 2017 06:54 PM
Last Updated : 23 Oct 2017 06:54 PM
'தி இந்து' செய்தியையும், பொதுமக்கள் கோரிக்கையையும் காவல்துறை பொருட்படுத்தியிருந்தால் இப்படியொரு சம்பவமே நடந்திருக்காது என பொதுமக்களை பேச வைத்திருக்கிறது ருஷ்வான் என்ற இளம்பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம். தற்போதைய சம்பவத்திற்குள் செல்லும் முன் ஒரு சின்ன பிளாஷ் பேக்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்திலிருந்து 9 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது கல்லாறு அரசு தோட்டக்கலைத் துறைக்கு சொந்தமான பழப்பண்ணை. அரிய மூலிகை வகைகளும், பட்டர் ப்ரூட் உள்பட அபூர்வ பழ வகைகளும், மங்குஸ்தான் எனப்படும் அதிசய மர வகைகளும் வளர்க்கப்பட்டு வருகின்றன. இயற்கை எழில் கொஞ்சும் வனப் பகுதியாக இருப்பதால் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் இங்கே வருவதுண்டு.
ஆங்கிலேயர் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த பழப் பண்ணைக்கு வி.வி.கிரி, நேரு, இந்திரா காந்தி உள்ளிட்ட பல தேசிய தலைவர்கள் வந்து சென்றுள்ளனர்.
இந்த பழப் பண்ணை 2009-ம் ஆண்டு ஏற்பட்ட நிலச்சரிவில் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதில் பாதிக்கப்படாது இருந்த கட்டிடத்தில் மட்டும் தற்போது பழப் பண்ணை அலுவலகம் செயல்படுகிறது. இந்த பழப் பண்ணையை புனரமைக்க போதுமான நிதியை அரசு ஒதுக்கீடு செய்யாதாதால் தற்போது வெறிச்சோடிக் கிடக்கிறது. இதை சாதகமாகப் பயன்படுத்தி காதல் ஜோடிகள் இந்த பழப் பண்ணையை சுற்றியுள்ள வனப் பகுதிகளுக்குள் ஒதுங்குகின்றனர்.
அவர்களை சாலையிலிருந்தே கண்காணித்து பின்தொடர்ந்து செல்லும் சமூக விரோதிகள் சிலர், காதலர்களிடம் உள்ள பணம் நகையை பறித்துக் கொண்டு, காதலியை பாலியல் பலாத்காரம் செய்வதாக, 'கல்லாறில் கதறும் காதலர்கள்!' என்ற தலைப்பிலான செய்தி 17 ஜூலை 2014 தேதியிட்ட 'தி இந்து'வில் வெளியானது. அந்த செய்தி வெளியாவதற்கு சில மாதங்களுக்கு முன்பு கடுமையாகப் பாதிக்கப்பட்ட ஒரு காதல் ஜோடியை கல்லாறு சுற்றுப்புற மக்கள் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர்.போலீஸார் விசாரித்து விட்டு பெண்ணின் எதிர்கால வாழ்க்கை கருதி சம்பந்தப்பட்ட கும்பல் மீது வேறு வழக்கைப் பதிவு செய்துவிட்டு காதல் ஜோடியை பத்திரமாக விடுவித்தனர்.
இதன் உச்சகட்டமாக ஒரு செவ்வாய்க்கிழமை ஒரு காதல் ஜோடியை 5 பேர் கொண்ட கும்பல் மடக்கி, காதலியிடம் இருந்த ஐந்து பவுன் நகையை பறித்தது. அப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்யவும் முற்பட்டது. அந்தப் பெண் அலறித்துடிக்க, அந்தப் பகுதியை சுற்றிப் பார்க்க வந்த இருவர் அதிர்ச்சியடைந்து ஆட்களைத் திரட்டி காதலர்களை காப்பாற்றி அந்த கும்பலை துரத்தியது. அதில் ஒருவன் மட்டும் அகப்பட மற்றவர்கள் தப்பினர். மீட்கப்பட்ட பெண்ணை அவர் வீட்டில் விட்டதோடு, அப்பெண்ணின் எதிர்காலம் கருதி அந்த வழக்கை கொள்ளை வழக்காக மாற்றி பிடிபட்ட ஒருவனை வைத்து மீதியிருக்கும் 4 பேரை தேடிப் பிடித்து சிறையில் அடைத்தது போலீஸ்.
இந்த விவகாரத்தில் தொடர் சமூக விரோத சம்பவங்களை கட்டுப்படுத்த போலீஸார் 24 மணி நேரமும் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும். காதலர்களை உள்ளே அனுமதிக்கலாகாது என 'திஇந்து'வில் செய்தியாக வெளியானது. அதைத் தொடர்ந்து இந்தப் பகுதிக்கு காலை இரவு தனித்தனியாக பாதுகாப்பு போலீஸார் போடப்பட்டனர். அதுவும் 'தி இந்து'வில் செய்தியாக வெளியானது. 'காதலர்கள் கல்லாறு பழப் பண்ணைக்கு போவதை தடுக்க சோதனைச்சாவடி ஏற்படுத்த வேண்டும்!' என்றும் அப்போது சுட்டிக்காட்டப்பட்டது.
ஆனால் அப்படி சோதனைச்சாவடியும் போடவில்லை. பெயரளவுக்கு மூன்று மாதங்களுக்கு மட்டுமே போலீஸார் இங்கு வந்தனர். பிறகு அதை மறந்தே விட்டனர். இதன் விளைவு. தொடர்ந்து காதலர்கள் வருகை; புதிய சமூக விரோதிகளின் வருகை, நகைபறிப்பு, பாலியல் துன்புறுத்தல், பெண்ணின் எதிர்காலம் கருதி புகார் இல்லாமல் போவது தொடர்ந்தது.
இதன் உச்சகட்டமாகவே தற்போது ருஸ்வான் என்ற பெண் கொலை செய்யப்பட்டுள்ளார். ருஸ்வான் கோவை சாய்பாபா காலனியை சேர்ந்த ஐதர் அலி என்பவரது மகள். 21 வயதாகும் இவர் ஏற்கெனவே திருமணமாகி விவாகரத்து செய்துள்ளார். பி.எஸ்.சி பட்டதாரியான ருஸ்வான் கடந்த 16-ம் தேதி வீட்டை விட்டுச் சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை.
ருஸ்வான் குறித்து அவரது பெற்றோர் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் விசாரித்த பின்னர் கடந்த 21-ம் தேதி சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் தனது மகளை காணவில்லை என புகார் அளித்தனர். இதனையடுத்து கோவை சரவணம்பட்டியை சேர்ந்த ருஸ்வானின் கல்லூரி கால காதலனான பிரசாந்தைப் பிடித்து போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர்.
ஜ.டி. ஊழியரான பிரசாந்த் மற்றும் அவரது நண்பர்களிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரனையில் கடந்த 16-ம் தேதி ருஸ்வானை பிரசாந்த் மேட்டுப்பாளையத்தில் உள்ள கல்லாறு அரசு பழப் பண்ணைக்கு பின்புறமுள்ள தடை செய்யப்பட்டுள்ள காப்புக்காட்டு பகுதிக்குள் அழைத்துச் சென்றது தெரிய வந்தது. இதனை அடுத்து 23-ம் தேதி (இன்று) காலை பிரசாந்த் தெரிவித்த தகவல் படி பிரசாத்தை கல்லாறு வனப்பகுதிக்குள் அழைத்து சென்ற போலீஸார் அங்குள்ள மலைப்பகுதியில் ருஸ்வானின் உடலை அழுகிய நிலையில் கண்டுபிடித்தனர்.
நிர்வாண நிலையில் கிடந்த ருஸ்வானின் உடலில் காயங்கள் காணப்பட்டதால் இவர் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதன் காரணமாக போலீஸ் காவலில் உள்ள பிரசாந்திடம் மேலும் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
காவல்துறை விசாரணையில் பிரசாத், தானும் ருஸ்வானும் தனிமையைத் தேடி மலை மீது உள்ள காட்டுப் பகுதிக்கு சென்றதாகவும் அங்கு அவர் மேலே இருந்து தவறி விழுந்து இறந்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார், ஆனால் ருஸ்வான் உடலில் உடைகள் இல்லாததும் காயங்கள் இருப்பதும் அவரது தங்க கம்மல், செயின் மற்றும் வாட்ச் போன்றவை உடலின் அருகே புதைக்கப்பட்டுள்ளதும் சந்தேகத்தை அதிகப்படுத்தியிருக்கிறது. அதை முன்வைத்து இது கொலையாகத்தான் இருக்க இயலும் என்ற கோணத்தில் தனிப்படை போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ருஸ்வானின் உடல் கோவை அரசு பொது மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில் அங்கு நடத்தப்பட உள்ள உடற்கூறு ஆய்வில் ருஸ்வான் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு கல்லால் அடித்து கொல்லப்பட்டாரா? அது எப்படி நடந்தது? என தெரிய வரும் என்றும் போலீஸார் தெரிவிக்கின்றனர்.
கல்லாறு பகுதி பொதுமக்களோ, ''ஏற்கெனவே நடந்த சம்பவங்கள் 'தி இந்து' மூன்றாண்டுகளுக்கு முன்பு வெளியிட்ட செய்திகள் அடிப்படையில் இங்கே ஒரு நிரந்தர சோதனைச்சாவடி, பாதுகாப்புக்கு போலீஸார் போட்டிருந்தால் இப்படி நடந்திருக்காது. இனியாவது போலீஸ் விழித்துக் கொள்ள வேண்டும்!'' என கோரிக்கை வைக்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT