Published : 07 Jul 2014 08:29 AM
Last Updated : 07 Jul 2014 08:29 AM

பொறியியல் பொது கவுன்சலிங் இன்று தொடங்குகிறது: ஆகஸ்ட் 4-ம் தேதி முடிவடையும்

உச்ச நீதிமன்ற உத்தரவு காரணமாக தள்ளிவைக்கப்பட்டிருந்த பொறியியல் பொது கவுன்சலிங் இன்று (திங்கள்கிழமை) தொடங்கி ஆகஸ்ட் 4-ம் தேதி முடிவடைகிறது.

இந்த ஆண்டு பொறியியல் படிப்பில் சேர ஒரு லட்சத்து 73 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் விண்ணப்பித்துள்ளனர். விளையாட்டு வீரர்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட சிறப்பு பிரிவினருக்கான கவுன்சலிங் ஜூன் 23-ம் தேதி ஆரம்பித்து 25-ம் தேதி முடிவடைந்த நிலையில், பொது கவுன்சலிங் (அகடமிக்) 27-ம் தேதி தொடங்குவதாக இருந்தது.

திடீர் தள்ளிவைப்பு

இதற்காக மாணவர்களுக்கு அழைப்புக் கடிதம் அனுப்புவது, 3 நாட்களுக்கு முன்னர் எஸ்.எம்.எஸ். மூலம் தகவல் தெரிவிப்பது உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளையும் அண்ணா பல்கலைக்கழகம் செய்துவிட்ட நிலையில், அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ) அங்கீகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு காரணமாக பொது கவுன்சலிங் தேதி குறிப்பிடப்படாமல் திடீரென தள்ளிவைக்கப்பட்டது.

இந்த நிலையில், பொது கவுன்சலிங் ஜூலை 7-ம் தேதி தொடங்கும் என்று அண்ணா பல்கலைக்கழகம் ஜூலை 2-ம் தேதி அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி பொது கவுன்சலிங் இன்று (திங்கள்கிழமை) தொடங்குகிறது.

இது தொடர்பாக தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் பேராசிரியர் வி.ரைமன்ட் உத்தரியராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

4-ம் தேதி முடிவடையும்

பொது கவுன்சலிங் (அகடமிக்) ஜூலை 7-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 4-ம் தேதி முடிவடையும். அதேபோல், தொழிற்கல்வி மாணவர்களுக்கான கவுன்சலிங் ஜூலை 9-ம் தேதி ஆரம்பித்து 18-ல் நிறைவடையும். பொது கவுன்சலிங் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள தேர்வு மையத்திலும், தொழிற்கல்வி மாணவர்களுக்கான கவுன்சலிங் ராமானுஜன் கணினி மையத்திலும் நடை பெறும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x