Published : 20 Jun 2023 09:09 PM
Last Updated : 20 Jun 2023 09:09 PM
மதுரை: தமிழக பாஜக செயலாளர் எஸ்.ஜி.சூர்யாவுக்கு மதுரை நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது.
தமிழக பாஜக மாநிலச் செயலாளராக இருப்பவர் எஸ்.ஜி.சூர்யா. சென்னையைச் சேர்ந்தவர். இவர்மீது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குறித்தும், மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் குறித்தும் ட்விட்டரில் பொய்யான தகவல் பதிவிட்டதாக மதுரை சைபர் கிரைம் போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. இப்புகாரின் பேரில் சூர்யாவை மதுரை போலீஸார் கைது செய்தனர்.
இந்த வழக்கில் பிணை கோரி மதுரை நீதித்துறை நடுவர் மன்றத்தில் சூர்யா தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதேநேரம், சூர்யாவை 3 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க கோரி சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்கள் நீதிபதி டீலாபானு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது எஸ்.ஜி.சூர்யாவை போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வழக்கறிஞர் ஆஜராகி, சூர்யாவின் பதிவு இரு சமூகத்தினரிடையே பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் இருந்தது. இதனால் அவருக்கு பிணை வழங்கக்கூடாது. அவரை போலீஸ் காவலுக்கு அனுப்ப வேண்டும் என வாதிட்டார்.
எனினும், விசாரணை முடிவில் 30 நாட்கள் தினமும் காலையில் மதுரை சைபர் கிரைம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்கிற நிபந்தனையுடன் எஸ்.ஜி.சூர்யாவுக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி டீலாபானு உத்தரவிட்டார். மேலும், போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கக்கோரிய மனு தள்ளுபடி செய்தும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.
இதனிடையே, எஸ்.ஜி.சூர்யாவை பாஜக அமைப்புச் செயலாளர் கேசவவிநாயகம் நீதிமன்ற வளாகத்தில் சந்தித்து பேசினார். முன்னதாக, வழக்கு விசாரணை முடிந்து போலீஸ் வாகனத்தில் ஏறும்போது, ‘ஆளும் கட்சிக்கு நாளைக்கு இருக்கிறது, நாளை கிழித்து தொங்கவிடுவேன்’ என சூர்யா தெரிவித்தபடி சென்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT