Published : 20 Jun 2023 05:07 PM
Last Updated : 20 Jun 2023 05:07 PM
மதுரை: கால்நடைகளிடம் இருந்து ‘புருசெல்லா’ நோய் மனிதர்களுக்கு பரவும் என்பதால், கால்நடைகளைக் காக்கும் வகையில் தேசிய நோய்த் தடுப்பு திட்டத்தில் 2-வது சுற்று தடுப்பூசி செலுத்தும் பணி கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் மதுரை மாவட்டத்தில் நடந்து வருகிறது.
கால்நடைகளிலிருந்து மனிதர்களுக்கு பரவும் புருசெல்லா எனும் நுண்ணுயிர் கிருமியால் புருசெல்லா நோய் (கன்று வீச்சு) ஏற்படுகிறது. புருசெல்லா நோயால் உலகம் முழுவதும் ஆண்டுதோறும் சுமார் 5 லட்சம் பேர் பாதிக்கப்படுகின்றனர். இந்நோய் மனிதர்களின் மூட்டு மற்றும் நரம்பு மண்டலத்தை பாதித்து உயிரிழப்புகளை ஏற்படுத்தும்.
புருசெல்லா நோய் பாதித்த கால்நடைகள் உணவு உட்கொள்ளாமல் இருக்கும், பால் உற்பத்தி குறையும், சினை பிடிக்காமல் இருக்கும், கன்று வீச்சு மற்றும் விரை வீக்கமாக காணப்படும். எனவே, இதன் மூலம் ஏற்படும் பொருளாதார இழப்பை தவிர்க்க 4 முதல் 8 மாத வயதுடைய பசு, எருமை கன்றுகளுக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
தடுப்பூசி செலுத்தும்போது தகுந்த பாதுகாப்பு முறைகளை பின்பற்றி தடுப்பூசி செலுத்தப்படுகிறது. ஒருமுறை தடுப்பூசி செலுத்தினால் ஆயுள் முழுவதும் கால்நடைகளை புருசெல்லா நோயிலிருந்து காப்பதோடு, மனிதர்களுக்கு பரவுவதையும் முற்றிலும் தடுக்கலாம்.
அதனையொட்டி தகுதியான கன்றுகளுக்கு விளாச்சேரி கால்நடை மருந்தகத்தில் கால்நடை உதவி மருத்துவர் சிவக்குமார் தலைமையில் ஆய்வாளர்கள் தமிழ்செல்வி, செந்தாமரை ஆகியோர் தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டனர். மாவட்டம் முழுவதும் 200-க்கும் மேற்பட்ட கன்றுகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT