Published : 20 Jun 2023 02:56 PM
Last Updated : 20 Jun 2023 02:56 PM

சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரலை செய்ய படிப்படியாக நடவடிக்கை: உயர் நீதிமன்றத்தில் பேரவை செயலர் பதில் மனு

கோப்புப்படம்

சென்னை: சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்ய படிப்படியாக நடவடிக்கை எடுக்கப்படும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக சட்டப்பேரவைச் செயலாளர் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்யக் கோரி லோக் சத்தா கட்சி தமிழக தலைவர் ஜெகதீஸ்வரன் மற்றும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆகியோர் முறையே 2012 மற்றும் 2015ம் ஆண்டுகளில் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்குகளை தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்குகள் தொடர்பாக, தமிழ்நாடு சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் கூடுதல் பதில் மனு தாக்கல் செய்தார். அதில், சபாநாயகரின் ஒப்புதலுடன், ஆளுநர் உரை, நிதிநிலை அறிக்கை உரை உள்ளிட்ட முக்கிய சட்டப்பேரவை நிகழ்வுகள் தூர்தர்ஷன், ஆல் இந்திய ரேடியோ மூலமாக நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

மேலும், ஆளுநர் உரை, பட்ஜெட், மானிய கோரிக்கைகள் மீதான விவாதங்ளுக்கு பதில் அளிப்பது, அரசு 110 விதியின் கீழ் வெளியிடும் அறிவிப்புகள் சபாநாயகரின் ஒப்புதலுடன் முழுமையாக நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இது தவிர யூடியூப், ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளம் மூலமாகவும் வெளியிடப்படுகிறது. சபாநாயகரின் உத்தரவுப்படி, சட்டப்பேரவை அதிகாரிகள் மற்றும் செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை அதிகாரிகள், கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் மாதம், நாடாளுமன்றத்தின் இரு அவைகள் மற்றும் பல்வேறு மாநிலங்களில் சட்டமன்ற நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்ய பின்பற்றப்படும் நடைமுறைகள் ஆய்வு செய்யப்பட்டது.

அந்த ஆய்வில் கோவா, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா மற்றும் டெல்லி சட்டமன்ற நிகழ்வுகள் முழுமையாக நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. கேரளாவில் கேள்வி நேரம் மட்டும் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. ஒடிசாவில் சட்டப்பேரவை நிகழ்வுகள் எடிட் செய்யப்பட்டு அன்றைய தினம் மாலை ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

எனவே, அனைத்து அம்சங்களையும் பரிசீலித்து தமிழக சட்டப்பேரவையின் நிகழ்வுகளை படிப்படியாக நேரடி ஒளிபரப்பு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. 2022 ஜனவரி 6ம் தேதி முதல், கேள்வி நேரம் முழுவதும் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. 2023 எப்ரல் 12-ம் தேதி முதல் கவன ஈர்ப்பு தீர்மானங்கள், முக்கிய தீர்மானங்களின் விவாதங்கள் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. இது தவிர, அன்றைய தினம் நடந்த பேரவை நிகழ்வுகளை எடிட் செய்து சில மணி நேரங்களில் அனைத்து தொலைக்காட்சிகளுக்கும் வழங்கப்படுகிறது. அதில் முக்கிய தலைவர்கள், எதிர்கட்சி உள்ளிட்ட உறுப்பினர்களின் உரைகளும் இடம்பெற்றுள்ளது. சட்டமன்ற நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்வது குறித்து சபாநாயகர் தான் முடிவெடுக்க முடியும்" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

எஸ்.பி.வேலுமணி மனு: அப்போது, இந்த வழக்கில் தன்னையும் இணைக்க கோரி அதிமுக கொறடா வேலுமணி மனுதாக்கல் செய்தார். அதில், "சட்டமன்ற நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்யக்கோரிய வழக்கு கடந்தமுறை விசாரணைக்கு வந்தபோது, சட்டமன்ற செயலாளர் தரப்பில் நேரடி ஒளிபரப்பிற்கு சாத்தியமில்லை என்றும், அவை குறிப்புகள் அரசின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுவதாகவும் கூறியிருந்தார்.

சட்டமன்றத்தில் தங்கள் பிரதிநிதிகள் எப்படி செயல்படுகின்றனர் என்பதை மக்கள் பார்க்க வேண்டும். 2011 முதல் 2021 வரையிலான அதிமுக ஆட்சிக்காலத்தில், சட்டமன்றத்தில் ஆளுங்கட்சி, எதிர்கட்சி உறுப்பினர்களின் பேச்சுக்கள் பதிவு செய்யப்பட்டு எடிட் செய்யப்பட்டு தொலைக்காட்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், தற்போதைய அரசு எதிர்கட்சி உறுப்பினர்களின் கேள்விகளை மறைத்து குறிப்பிட்ட பகுதிகளை மட்டும் வழங்கி வருகிறது.

எதிர்கட்சியான அதிமுகவின் தொடர் கோரிக்கையை தொடர்ந்து சட்டப்பேரவையில் கேள்வி நேரமும், ஏப்ரல் முதல் பொது முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானங்களும் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. நாடாளுமன்றத்தைப் போன்று சட்டமன்றத்தின் அனைத்து நிகழ்வுகளையும் நேரடி ஒளிபரப்பு செய்ய எந்த தடையும் இல்லை. நேரடி ஒளிபரப்பு செய்வதால் அரசுக்கு எந்த கூடுதல் செலவீனமும் இல்லை.

மேலும், மத்திய அரசு "நேவா" என்ற செயலியை அறிமுக படுத்தியுள்ளது. அதன் மூலமாக சட்டமன்ற நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்ய முடியும். இதற்கு ஆகும் செலவில் 60% மத்திய அரசும் 40% மாநில அரசும் ஏற்றுக்கொள்வது என தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் ஒப்புதல் தெரிவித்துள்ளன. நீதிமன்ற நடவடிக்கைகளை நேரடி ஒளிபரப்பு செய்ய துவங்கி உள்ள நிலையில், சட்டமன்ற நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்யக் கோரும் இந்த வழக்கில் தன்னையும் மனுதாரராக சேர்க்க உத்தரவிட வேண்டும்" என்று கோரியுள்ளார்.

அரசுத் தரப்பு வாதம்: இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்கபுர்வாலா, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், "அரசியல் சாசன அமைப்பு சட்டத்தின்படி இந்த விவகாரத்தில், நீதிமன்றம் தலையிட முடியாது. மக்கள் எதை தெரிந்து கொள்ள வேண்டுமோ அது நேரடி ஒளிபரப்பு செய்யப்படும். நேரமில்லா நேரத்தை உடனடியாக நேரடி ஒளிபரப்பு செய்யமுடியாது. அதுகுறித்து சபாநாயகர்தான் முடிவெடுக்க வேண்டும்.

பேரவை நிகழ்ச்சிகளை நேரடி ஒளிபரப்பு செய்ய சேண்டுமென விஜயகாந்த் தாக்கல் செய்துள்ள வழக்கில் 8 வருடங்கள் கழித்து தன்னை இணைத்துக் கொள்ள அனுமதிக்க வேண்டுமென எஸ்.பி.வேலுமணி கோரியுள்ளார். எனவே அவரது மனுவை ஏற்கக்கூடாது" என்றும் வாதிட்டார்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, விசாரணை ஜூலை 26-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x