Published : 20 Jun 2023 12:06 PM
Last Updated : 20 Jun 2023 12:06 PM
சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நாளை அதிகாலை இதய அறுவை சிகிச்சை நடக்க இருப்பதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை சைதாப்பேட்டையில் மழை பாதிப்புகளைப் பார்வையிட்ட மா. சுப்ரமணியன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: "சென்னையில் 1950ம் ஆண்டுக்குப் பிறகு ஜூன் மாதத்தில் 2வது முறையாக அதிகபட்ச மழை பதிவாகி இருக்கிறது. இதற்கு முன் 1996ம் ஆண்டு ஜூன் மாதம் 28 செ.மீ. மழை பதிவாகி இருந்தது. நேற்று முன்தினம் 16 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஜூன் மாதத்தில் பெய்த அதிகபட்ச மழை இதுவாகும்.
எனினும், இந்த மழை காரணமாக சென்னையில் பெரிய அளவில் மழை நீர் பாதிப்பு இல்லை. சென்னையில் மழைநீர் வடிவதற்கான கால்வாய்கள் அமைக்கும் பணிகள் அதிக அளவில் மேற்கொள்ளப்பட்டதே இதற்குக் காரணம். மழைநீர் வடிகால்வாய்களை அமைக்கும் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு மட்டும் ரூ. 700 கோடி மதிப்பீட்டில் 200 கி.மீ தொலைவுக்கு புதிய மழைநீர் வடிகால்வாய் கட்டப்பட்டது. கொசஸ்தலை ஆறு பாயும் பகுதிகளில் 1,120 கி.மீ. தொலைவுக்கு ரூ. 4,900 கோடி செலவில் வடிநீர் கால்வாய்கள் கட்டப்பட்டுள்ளன. இதில், 50 சதவீத பணிகள் முடிந்துள்ளன.
330 ஆண்டுகள் பழமைவாய்ந்த சென்னை மாநகர வரலாற்றில் மழைநீர் வடிவதற்கான கால்வாய்கள் மிகப் பெரிய அளவில் கட்டப்படுவது இதுவே முதல்முறை. இத்தகைய பணிகள் காரணமாகவே, தற்போது அதிக மழை பெய்த போதும் சென்னையில் உள்ள சுரங்கப் பாதைகளில் நீர் தேங்கவில்லை. இந்த மழை காரணமாக சென்னையில் 26 இடங்களில் மட்டுமே மரங்கள் முறிந்தன. அவை உடனுக்குடன் அகற்றப்பட்டுள்ளன. மழை பாதிப்பை கருத்தில் கொண்டு சென்னையில் குடிசைகள் நிறைந்த பகுதிகளில் மருத்துவ முகாம்களை ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டது. அதன்பேரில் இன்று 90 இடங்களில் மருத்துவ முகாம்கள் நடக்கின்றன.
அமைச்சர் செந்தில் பாலாஜியின் இதய ரத்த நாளங்கள் 3ல் அடைப்புகள் இருந்துள்ளன. சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டதை அடுத்தே அவை கண்டுபிடிக்கப்பட்டன. இதையடுத்து அவர் காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு பிலட் தின்னர் சிகிச்சை அளிக்கப்பட்டது. அதற்காக அளிக்கப்பட்ட மருந்து நிறுத்தப்பட்டு 5, 6 நாட்கள் கழித்துத்தான் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். இல்லாவிட்டால், ரத்தக் கசிவு ஏற்பட்டுவிடும். எனவே, அறுவை சிகிச்சையை மருத்துவர்கள் தள்ளி வைத்தார்கள். அந்த ரத்தக் கசிவு பிரச்சினை இனி வராது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால், செந்தில் பாலாஜிக்கு நாளை அதிகாலை அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் திட்டமிட்டிருக்கிறார்கள்.
செந்தில் பாலாஜிக்கு அளிக்கப்படும் மருத்துவ சிகிச்சை தொடர்பாக அரசு சார்பில் தனி குழு ஏதும் அமைக்கப்படவில்லை. அதேநேரத்தில், காவிரி மருத்துவமனையோடு தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம். அறுவை சிகிச்சை பெறுவதற்கு ஏற்ற உடல் தகுதியினை செந்தில் பாலாஜி பெற்றிருப்பதாக மருத்துவர்கள் நேற்றிரவு தெரிவித்திருக்கிறார்கள்.
செந்தில் பாலாஜி நாடகமாடுவதாக அமலாக்கத்துறை தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்திருப்பதாக நீங்கள்(செய்தியாளர்) கூறுகிறீர்கள். இந்த விவகாரத்தை மனிதாபிமான முறையில் அணுக வேண்டும். செந்தில் பாலாஜிக்கு இதயத்தில் கிரிட்டிக்கல் பிளாக்ஸ் இருப்பது தெரியாமலேயே அவர் இருந்திருக்கிறார். ஓமந்தூரார் மருத்துவமனையில் அது கண்டறியப்பட்டது. அதன்பிறகு, செந்தில் பாலாஜியின் குடும்ப மருத்துவர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க செகண்ட் ஒப்பீனியன் வழங்க அப்பல்லோ மருத்துவமனையின் புகழ்பெற்ற மருத்துவர் செங்கோட்டுவேல் வந்து பார்வையிட்டு உறுதி செய்திருக்கிறார். அதன்பிறகு அமலாக்கத்துறை, இஎஸ்ஐ மருத்துவர்களைக் கொண்டு ஆராய்ந்தார்கள். அவர்களும், ரத்த நாளங்களில் 3 அடைப்புகள் இருப்பது உண்மை என்பதையும், அறுவை சிகிச்சை தேவை என்பதையும் உறுதிப்படுத்தி இருக்கிறார்கள்.
தமிழகத்தில் சுமார் 20 ஆயிரம் அரசு மருத்துவர்கள் இருக்கிறார்கள். இஎஸ்ஐ மருத்துவமனைகளில் இந்தியா முழுவதும் லட்சக்கணக்கில் மருத்துவர்கள் இருப்பார்கள். இந்த ஒட்டுமொத்த மருத்துவர்களின் நேர்மைத்தனத்தை சந்தேகிப்பது போன்றது அமலாக்கத்துறையின் கருத்து. நாளைக்கு அறுவை சிகிச்சை செய்த பிறகு அவர்கள் என்ன செய்வார்கள் என்பது தெரியவில்லை. ஒருவர் தன் மீதான குற்றச்சாட்டுக்களில் இருந்து தன்னை காப்பாற்றிக் கொள்ள ஓபன் ஹார்ட் சர்ஜரி செய்து கொள்வாரா என தெரியவில்லை. இது குறித்து அமலாக்கத்துறைதான் விளக்கம் அளிக்க வேண்டும்." இவ்வாறு அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT