Published : 20 Jun 2023 11:54 AM
Last Updated : 20 Jun 2023 11:54 AM
கோவை: கோவை மாநகரில் சிக்னலில் வாகனங்கள் காத்திருப்பதை தவிர்க்க, மாநகர காவல்துறை அறிமுகப்படுத்திய திட்டத்தால் வாகனங்கள் நெரிசலின்றி சீராக சென்று வருகின்றன. காவல் ஆணையரின் இத்திட்டத்துக்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
பெருகி வரும் வாகனங்களின் எண்ணிக்கை காரணமாக, கோவை மாநகரில் பிரதான சாலைகளில் போக்குவரத்து நெரிசல் தவிர்க்க முடியாததாகிவிட்டது. எந்த சாலைகளை பார்த்தாலும் வாகனங்கள் நெருக்கியடித்தபடி செல்லும் நிலையே காணப்படுகிறது.
அவிநாசி சாலை, பாலக்காடு சாலை, பொள்ளாச்சி சாலை, திருச்சி சாலை, மேட்டுப்பாளையம் சாலை, சத்தி சாலை ஆகிய பிரதான சாலைகள் மட்டுமின்றி, உட்புறப் பகுதிகளை இணைக்கும் சாலைகளிலும் நெரிசல் நிலவுகிறது. சாலை சந்திப்புகளில் அமைக்கப்பட்டுள்ள போக்குவரத்து சிக்னல்களில், சிவப்பு விளக்கு ஒளிரும்போது வாகனங்கள் காத்திருந்து செல்லும் நிலை உள்ளது.
30 விநாடிகள் முதல் 90 விநாடிகள் வரை காத்திருக்க வேண்டும். இதனால் சிலசமயம் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்களும் கூட விரைந்து செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. இதை தவிர்க்க ‘யு டர்ன்’ திட்டத்தை போலீஸார் செயல்படுத்தி வருகின்றனர்.
மாநகர போலீஸார் கூறும்போது,‘‘முக்கிய சாலைகளில் நெரிசல்,சிக்னல்களில் காத்திருப்பை குறைக்க நெடுஞ்சாலைத் துறையினருடன் கள ஆய்வு நடத்தப்பட்டு, சாலைக்கு ஏற்ப ‘யு டர்ன்’ அல்லது ‘ரவுண்டானா’ திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ‘யு டர்ன்’திட்டம் என்றால் சிக்னல்கள் மூடப்பட்டுவிடும்.
அதற்கு 100 மீட்டர் முன்பும், பின்பும் வாகனங்கள் திரும்ப தடுப்புக் கற்களை அகற்றி இடைவெளி ஏற்படுத்தப்படும். இந்த இடைவெளி வழியாக வாகனங்கள் ‘யு டர்ன்’ செய்து வேண்டிய இடங்களுக்கு செல்லலாம். ‘ரவுண்டானா’ திட்டமும் இதே முறை தான். சிக்னல்களை அகற்றிவிட்டு அங்கு தடுப்புக் கற்களை அமைத்து ரவுண்டானா ஏற்படுத்தப்பட்டு வாகனங்கள் செல்ல வழிவகை செய்யப்படும். இதனால் வாகனங்களை நிறுத்த வேண்டியதே இல்லை. சென்றுகொண்டே இருக்கலாம்.
அவிநாசி சாலையில் உப்பிலிபாளையம் சந்திப்பு, லட்சுமி மில் சந்திப்பு, அண்ணா சிலை சந்திப்பு, எஸ்.ஓ பங்க் சந்திப்பு, திருச்சி சாலையில் சிங்காநல்லூர் சந்திப்பு உள்ளிட்ட இடங்களில் இந்த ‘யு டர்ன்’ திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கிக்கானி பள்ளி சந்திப்பு, சிந்தாமணி சந்திப்பு, சுங்கம் சந்திப்பு, சுங்கம் - உக்கடம் பைபாஸ் சாலையில் வின்சென்ட் சாலை பிரிவு, லாலி சாலை சிக்னல் சந்திப்பு உள்ளிட்ட இடங்களில் ரவுண்டானா திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது’’ என்றனர்.
மாநகர காவல்துறையின் போக்குவரத்து துணை ஆணையர் மதிவாணன் கூறும்போது,‘‘இருக்கும் இடத்தில் உள்ள வசதியை பயன்படுத்தி வாகனங்கள் காத்திருக்கா மலும், நெரிசலின்றி செல்லவும் இத்திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம். இது பயன் அளித்தால் நிரந்தரமாக்கப்படும்’’ என்றார்.
மாநகர காவல் ஆணையர் வே.பாலகிருஷ்ணன் கூறும்போது,‘‘புதிய முயற்சியாக பல இடங்களில் சிக்னல்களை அகற்றிவிட்டு ‘யு டர்ன்’ போட்டு செல்லவும், ரவுண்டானா முறையில் செல்லவும் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. மக்கள் காலதாமதம் இல்லாமல் சாலையில் பயணிப்பதற்கு வழிவகை செய்து வருகிறோம்.
மாநகரில் கடந்தாண்டுடன் ஒப்பிடும் போது, நடப்பாண்டு 10 சதவீதத்துக்கு மேல் விபத்துகள் குறைந்துள்ளன. இந்த பிரத்யேக திட்டத்துக்கு வரவேற்பு உள்ளது.சிக்னல்களில் காத்திருக்கும் நேரம் குறைந்துள்ளது. தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். இத்திட்டம் நடைமுறைப் படுத்தப்படுவதால் சிக்னல் அமைக்க சாலை பாதுகாப்பு திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதி, பாதசாரிகள் சாலையை கடக்க கட்டமைப்பு ஏற்படுத்த பயன்படுத்தப்படும்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT