Published : 20 Jun 2023 11:35 AM
Last Updated : 20 Jun 2023 11:35 AM

மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீட்டு விதிகள் பின்பற்றப்படுவதில்லை: ராமதாஸ் குற்றச்சாட்டு

சென்னை: கலைக் கல்லூரி மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீட்டு விதிகள் பின்பற்றப்படுவதில்லை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், “ தமிழ்நாட்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கையின் போது பல கல்லூரிகளில், நிரப்பப்படாத இடங்களை நிரப்புவதில் இட ஒதுக்கீட்டு விதிகள் பின்பற்றப்படுவதில்லை என்று குற்றச்சாட்டுகள் எழுந்திருப்பது கவலையளிக்கிறது. கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கையில் சமூகநீதி சூறையாடப்படுவதை சகித்துக் கொள்ள முடியாது; அது கண்டிக்கத்தக்கது.

தமிழ்நாட்டில் அரசு கலை - அறிவியல் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் கடந்த மே 8-ஆம் நாள் முதல் மே 22-ஆம் நாள் வரை பெறப்பட்டன. அவற்றின் அடிப்படையிலான கலந்தாய்வுகள் மே 31-ஆம் நாள் முதல் ஜூன் 9-ஆம் நாள் வரை நடத்தப்பட்டன. 3 கட்ட கலந்தாய்வுகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ள நிலையில், வடக்கு மற்றும் மேற்கு மாவட்டங்களில் உள்ள அரசு கலைக் கல்லூரிகளில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 26.50% ஒதுக்கீட்டின்படியான இடங்கள் மிக அதிக அளவில் நிரப்பப்படவில்லை. காலியாக உள்ள அந்த இடங்களை நிரப்புவதற்கான நிறைவு கட்ட கலந்தாய்வு சில மாவட்டங்களில் இன்றும், பிற மாவட்டங்களில் அடுத்த சில நாட்களிலும் நடைபெறவுள்ளது. நிறைவு கட்ட கலந்தாய்வுகளில் தான் இட ஒதுக்கீட்டு விதிகள் மீறப்படும் என்ற அச்சம் எழுந்திருக்கிறது.

பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான காலியிடங்கள், முதலில் பிற்படுத்தப்பட்ட முஸ்லீம்களுக்கும் பின்னர் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் ஒதுக்கப்பட்டு மீதமிருந்தால் மட்டுமே பட்டியலினத்தவருக்கு ஒதுக்கப்பட வேண்டும். ஆனால், அந்த விதிக்கு மாறாக காலியாக உள்ள இடங்களை மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும், பட்டியலினத்தவருக்கும் சரி சமமாக பகிர்ந்து வழங்க கல்லூரிகளின் முதல்வர்கள் முடிவு செய்துள்ளனர். பல கல்லூரிகளில் நேற்று துறைத்தலைவர்கள் கூட்டங்களை நடத்தி பிற்படுத்தப்பட்டோருக்கான இடங்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கும், பட்டியலினத்தவருக்கும் பகிர்ந்தளிக்கும்படி வழிகாட்டுதல்களை முதல்வர்கள் வழங்கியுள்ளனர். இது சமூக அநீதியாகும்.

நடப்பாண்டில் மட்டும் இந்த சமூக அநீதி இழைக்கப்படவில்லை. கடந்த சில ஆண்டுகளாகவே இந்த சமூக அநீதி தொடர்கிறது. கடந்த ஆண்டு செய்யப்பட்டதைத் தான் இந்த ஆண்டு செய்கிறோம் என்று கூறி, கல்லூரி நிர்வாகங்கள் தொடர்ந்து சமூக அநீதி இழைப்பதை தமிழக அரசு அனுமதிக்கக்கூடாது.

தமிழ்நாடு அரசின் உயர்கல்வித்துறை கடந்த 14.06.2022ஆம் நாள் வெளியிட்ட 161-ஆம் எண் கொண்ட அரசாணையின் 32 மற்றும் 33-ஆவது பத்திகளில் மாணவர் சேர்க்கையின் போது இட ஒதுக்கீட்டு விதிகள் எவ்வாறு கடைபிடிக்கப்பட வேண்டும் என்பது பற்றி தெளிவான வழிகாட்டுதல்கள் வழங்கப் பட்டுள்ளன. பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் நிரப்பப்படாமல் இருந்தால், அந்த இடங்கள் முதலில் பிற்படுத்தப்பட்ட இஸ்லாமியர்கள் இருந்தால் அவர்களைக் கொண்டு நிரப்பப் பட வேண்டும்;

அதன்பிறகும் காலியிடங்கள் இருந்தால் அவை மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரைக் கொண்டு நிரப்பப்பட வேண்டும். போதிய எண்ணிக்கையில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் இல்லாத சூழலில் மட்டும் தான் அந்த இடங்கள் பட்டியலினம், பழங்குடியினரைக் கொண்டு நிரப்பப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல்,பழங்குடியினருக்கான ஒதுக்கீட்டில் காலியிடங்கள் இருந்தால் அவை முதலில் பட்டியலினத்தவர், பின்னர் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், அதன்பின் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்ற வரிசையில் நிரப்பப்பட வேண்டும் என்று தெளிவான வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, கடந்த 10-ஆம் நாள் தருமபுரி மண்டலத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் முதல்வர்களுடன் கல்லூரி கல்வி இயக்குனர் முனைவர் கோ.கீதா இணையவழியில் கலந்தாய்வு நடத்தும் போதும், அரசாணை எண் 161-இன்படி பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான காலி இடங்களை நிரப்ப வேண்டும் என்று அறிவுறுத்தினார். அதன்படி நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஒதுக்கப்பட்டு, நிரப்பப்படாத இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. நாமக்கல் அரசு கல்லூரியில் காப்பாற்றப்பட்ட சமூக நீதி, பிற கல்லூரிகளில் பலி கொடுக்கப்படுவது ஏன்? அவற்றின் முதல்வர்களுக்கு சமூகநீதியில் சிறிதும் அக்கறை இல்லையா? அல்லது அவர்கள் ஏதேனும் அச்சுறுத்தல்களுக்கு அஞ்சி சமூகநீதிக்கு எதிராக செயல்படுகிறார்களா?

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் முதல்வர்கள் அறியாமையில் செயல்படுகிறார்களா? அல்லது அச்சத்தில் செயல்படுகிறார்களா? என்பது தெரியவில்லை. எது எப்படியிருந்தாலும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஒதுக்கப்பட்டு நிரப்பப்படாத இடங்களை நிரப்புவதில் சமூக அநீதி இழைக்கப்படுவதை உயர்கல்வித்துறை அனுமதிக்கக்கூடாது. பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஒதுக்கப்பட்டு நிரப்பப்படாத இடங்கள் முதலில் பிற்படுத்தப்பட்ட முஸ்லீம்கள், பின்னர் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஒதுக்கப்பட்டு மீதமிருந்தால் மட்டுமே பிற வகுப்பினருக்கு ஒதுக்கப்படுவதை உயர்கல்வித்துறையும், தமிழக அரசும் உறுதி செய்ய வேண்டும். இது தொடர்பாக அரசு கல்லூரிகளின் முதல்வர்களுக்கு அரசு உரிய வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும். இல்லாவிட்டால் சமூகநீதியைக் காப்பதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் பாட்டாளி மக்கள் கட்சி மேற்கொள்ளும்” என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x