Published : 20 Jun 2023 09:38 AM
Last Updated : 20 Jun 2023 09:38 AM
தஞ்சாவூர்: தஞ்சாவூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செங்கிப்பட்டி அருகே மேம்பாலத்தில் பக்கவாட்டு சுவர் இன்று காலை சரிந்து விழுந்தது.
தஞ்சாவூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலை 15 ஆண்டுகளுக்கு முன்பு நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட்டது. அப்போது பல்வேறு இடங்களில் மேம்பாலம் கட்டப்பட்டதைப் போல, செங்கிப்பட்டி காவல் நிலைய சரகத்துக்கு உள்பட்ட சானூரப்பட்டி முதன்மைச் சாலையிலும் மேம்பாலம் அமைக்கப்பட்டது. இப்பகுதி தஞ்சாவூர் - திருச்சி வழித்தடம் மட்டுமல்லாமல், தெற்கே கந்தர்வகோட்டை, வடக்கே பூதலூர், திருக்காட்டுப்பள்ளி வழித்தடங்களுக்கும் முக்கியமான சந்திப்பாக உள்ளது. இந்நிலையில், சானூரப்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே மேம்பாலத்தின் தெற்கு பகுதியில் பக்கவாட்டு சுவர் இன்று காலை 6 மணி அளவில் சரிந்து விழுந்தது.
தகவலறிந்த நெடுஞ்சாலை துறையினர், காவல் துறையினர், வருவாய்த் துறையினர் உள்ளிட்டோர் நிகழ்விடத்துக்குச் சென்று பார்வையிட்டனர். இதையடுத்து, மேம்பாலத்தின் தெற்கு பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, அணுகு சாலை வழியாகத் திருப்பி விடப்பட்டது. ஆனால், திருச்சி வழித்தடத்தில் இருந்து வரக்கூடிய வாகனங்கள் மேம்பாலத்தின் வடக்குப் பகுதி வழியாக அனுமதிக்கப்பட்டு வருகிறது. இந்த வழித்தடத்திலும் விரைவில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, அணுகு சாலை வழியாகத் திருப்பி விடுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சென்னை ஐஐடியில் இருந்து வல்லுநர்கள் வந்து ஆய்வு செய்த பிறகு அவர்களுடைய ஆலோசனைகளின் அடிப்படையில், சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, விரைவில் போக்குவரத்துக்கு ஏற்பாடு செய்யப்படும் என நெடுஞ்சாலைத் துறையினர் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT