Published : 06 Oct 2017 05:28 PM
Last Updated : 06 Oct 2017 05:28 PM
குன்னூரில் மகளுக்கு கல்விக் கடன் தர மறுத்து, வங்கி தரப்பு ஐந்து மாத காலமாக அலைக்கழித்ததாக கூறி பெற்றோர் வங்கி முன் டீசல் ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் கம்பிசோலை சானிடோரியம் பகுதியில் வசித்து வருபவர் எட்வின். அவரது மனைவி சோபியா. எட்வின் இப்பகுதியில் ஆட்டோ ஓட்டுநராக உள்ளார். இவர்களது மகள் புஷ்பசாலினி தனியார் பள்ளியில் ஹோட்டல் மேலாண்மை படித்து வருகிறார்.
இவரது கல்விக் கடனுக்காக எட்வின், குன்னூர் பேரக்ஸ் பகுதியில் உள்ள சிண்டிகேட் வங்கியில் ரூ.2 லட்சம் கல்விக் கடன் கேட்டு விண்ணப்பித்துள்ளார்.
ஐந்து மாத காலமாக அலைக்கழித்த பின் வங்கித் தரப்பு கடன் இல்லை என்று கூறியுள்ளது. இதனைத் தொடர்ந்து எட்வின் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளார். இதனிடையே கல்வி நிறுவனத்தில் இருந்து கட்டணம் கட்ட தொடர்ந்து அழுத்தம் கொடுத்ததால் எட்வின் மற்றும் சோபியா மன உளைச்சலுக்கு உள்ளாகினர்.
இந்நிலையில், இன்று (வெள்ளிக்கிழமை) இருவரும் பேரக்ஸ் பகுதியில் உள்ள சிண்டிகேட் முன் டீசல் ஊற்றி தற்கொலைக்கு முயன்றனர்.
இப்பகுதி ராணுவ முகாம் உள்ள பகுதி என்பதால் காவலில் ஈடுபட்டிருந்த ராணுவத்தினர் மற்றும் காவல் துறையினர் ஓடி வந்து இருவரையும் தடுத்து நிறுத்தி, வங்கிக்குள் அழைத்து சென்றனர்.
இதுகுறித்து எட்வின் மற்றும் சோபியா கூறும் போது, ''எங்கள் மகள் கல்விக் கடன் உதவிக்காக பேரக்ஸ் சிண்டிகேட் வங்கியில் உரிய ஆவணங்கள் கொடுத்தும், வங்கி மேலாளர் மேலும் பல்வேறு ஆவணங்கள் கேட்டார். அவற்றையும் கொடுத்தோம்.
இருந்தும் கல்விக் கடனுதவி வழங்காமல் ரூ.20 ஆயிரம் லஞ்சம் கேட்டார். லஞ்சம் கொடுக்க முடியவில்லை. இதனால், கோவையில் உள்ள தலைமை வங்கி அலுவலகத்துக்கு சென்று அங்கிருந்து கடிதம் வாங்கி வரவேண்டும் என கூறினார். மகளையும் அழைத்துக் கொண்டு கோவை தலைமை அலுவலகத்துக்குச் சென்று காலை முதல் மாலை வரையிலும் காத்திருந்தோம். அவர்கள் சரியான பதில் அளிக்காததைத் தொடர்ந்து மீண்டும் குன்னூருக்கு வந்தோம்.
5 மாதங்களாகக் கடனுதவி வழங்காமல் அலைக்கழிக்கப்பட்டோம். அத்துடன் மாவட்ட ஆட்சியரிடம் இரண்டு தடவை முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. மகளின் படிப்பு வீணாகிறது என்று மனமுடைந்த நாங்கள் இன்று சிண்டிகேட் வங்கியின் முன்பு தீக்குளிக்கும் முயற்சியில் ஈடுபட்டோம்'' என்றனர்.
இதையடுத்து காவல்துறையினர் வங்கி மேலாளர் கார்த்திகேயன், எட்வின் மற்றும் சோபியாவை வெலிங்டன் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ராணுவப் பகுதியில் மகளுக்காகப் பெற்றோர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT