Last Updated : 21 Oct, 2017 09:04 AM

 

Published : 21 Oct 2017 09:04 AM
Last Updated : 21 Oct 2017 09:04 AM

பூச்சிக்கொல்லி பயன்பாட்டால் கொசு உற்பத்தி அதிகரிப்பு: வெகுவாக அழிந்துவரும் தவளை, தட்டான் இனங்கள் - பூச்சியியல் வல்லுநர்கள் எச்சரிக்கை

அதிகப்படியான பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்துவதால் தவளை மற்றும் தட்டான் இனங்கள் அழிந்து, கொசு உற்பத்தி அதிகரித்து வருவதாக பூச்சியியல் வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

நன்னீரில் உற்பத்தியாகும் ஏடிஸ் கொசுக்கள்தான் டெங்கு கிருமியை பரப்புகின்றன. கொசு உற்பத்தியை கட்டுப்படுத்த சுகாதார துறையினர் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.

இது தொடர்பாக வேளாண் பூச்சியியல் வல்லுநர் பூச்சி செல்வம், ‘தி இந்து’விடம் கூறியதாவது:

கொசு உற்பத்தியை கட்டுப்படுத்துவதில் தவளை மற்றும் தட்டான்களுக்கு பெரும் பங்கு உண்டு. இவை இரண்டும் கொசுவைப் போன்றே நீர்நிலைகளில் முட்டையிடக் கூடியவை. தவளைக்கு முந்தைய நிலையான தலபிரட்டைக்கும் தட்டானுக்கு முந்தைய நிலையான புழுவுக்கும் கொசுவின் முட்டையில் இருந்து உருவாகும் கொசு புழுக்களே முக்கிய உணவாகும். தவளையும் தட்டானும் அதிகளவு இருக்கும் இடங்களில் கொசு உற்பத்தி பெரியளவில் இருக்காது.

பயிர் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் விவசாயிகள் பூச்சிக்கொல்லிகளை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். இந்த பூச்சிக்கொல்லிகளை வயல்களில் தெளிக்கும்போது வயலில் தேங்கி இருக்கும் தண்ணீரிலும் கலந்துவிடுகின்றன. இதனால், தவளை மற்றும் தட்டான் இனங்கள் வேகமாக அழிந்து வருகின்றன. பல இடங்களில் இவற்றை பார்ப்பதே அரிதாகிவிட்டது. இதனால், கொசு புழுக்கள் வளர்ந்து கொசு உற்பத்தி அதிகரித்து வருகிறது. எனவே கொசு உற்பத்தியை கட்டுப்படுத்தவும் தவளை, தட்டான்களை காக்கவும் பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்துவதை குறைத்துக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மதுரையைச் சேர்ந்த பூச்சியியல் வல்லுநர் ஒருவர் கூறியதாவது:

தமிழகத்தில் டிராக்னோஃபிளை, டேம்செல்ஃபிளை என இரண்டு வகை தட்டான்கள் உள்ளன. இவை வயல்களில் இருக்கும் சிறிய வகை பூச்சிகளை உணவாக உட்கொண்டு உயிர்வாழ்கின்றன. பயிரை தாக்கும் பூச்சிகளை உண்டு விவசாயத்துக்கு நன்மை பயக்கும் தட்டான்கள், பூச்சிக்கொல்லி பயன்பாட்டால் தற்போது அழிந்து வருகின்றன. இதனால், கொசு உற்பத்தியும் கட்டுக்கடங்காமல் அதிகரித்து வருகிறது.

ரசாயனப் பூச்சிக்கொல்லிக்கு பதிலாக இனக்கவர்ச்சி பொறி, விளக்கு பொறி போன்ற கருவிகளை விவசாயிகள் பயன்படுத்த வேண்டும். இனக்கவர்ச்சி பொறியில் செயற்கை முறையில் பூச்சிகளின் இனக்கவர்ச்சியை தூண்டும் வாயுக்கள் வெளியாகும்.

இதனால், கவரப்படும் பூச்சிகள் பொறியில் சிக்கி இறந்துவிடும். அதேபோல, சூரிய விளக்கு வெளிச்சத்தால் பூச்சிகளை கவர்ந்து அழிப்பதற்கு விளக்கு பொறி பயன்படுத்தப்படுகிறது. இந்த கருவிகள் அரசு சார்பில் வேளாண் துறைகளில் மானிய விலையில் வழங்கப்படுகின்றன. இவற்றை விவசாயிகள் அதிகம் பயன்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x