Published : 20 Jun 2023 04:05 AM
Last Updated : 20 Jun 2023 04:05 AM

ஒதுங்கிய பழனிவேல் தியாகராஜன், களம் இறங்கிய பி.மூர்த்தி - சுதந்திரமாக செயல்பட முடியாமல் தவிக்கும் மதுரை மேயர்

மதுரை: மதுரை மாநகராட்சி நிர்வாகத்தில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஒதுங்கியதால் அமைச்சர் பி.மூர்த்தி, மாவட்டச் செயலாளர் தளபதி ஆகியோர் செல்வாக்கு பெற தொடங்கியுள்ளனர்.

2-வது முறை எம்எல்ஏ ஆன பழனிவேல் தியாகராஜன், திமுக ஆட்சியில் நிதித்துறை அமைச்சர் ஆனதும், மதுரை மாவட்ட திமுகவில் தவிர்க்க முடியாத சக்தியானார். உள்ளாட்சித் தேர்தலில் மதுரை மாநகராட்சி மேயர் பதவிக்கு அமைச்சர் பி.மூர்த்தி, மாநகர் செயலாளர் தளபதி, முன்னாள் அமைச்சர் பொன் முத்துராமலிங்கம் போன்றோர் தங்கள் ஆதரவாளர்களை கொண்டு வர முயற்சி செய்தனர்.

அப்போது, அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கை காட்டிய இந்திராணியை கட்சித்தலைமை மேயராக்கியது. அதன்பிறகு மாநகராட்சி பொறுப்பு களுக்கு யாரைக் கொண்டு வருவது, நலத்திட்டங்கள் என ஒவ்வொன்றும் பழனிவேல் தியாகராஜன் மற்றும் அவரது ஆதரவாளர்களின் கண் அசைவிலேயே நடந்தது. அவரது ஒப்புதல் இன்றி மேயர், அதிகாரிகள் செயல்பட தயங்கினர்.

பழனிவேல் தியாகராஜன் அலுவலகத்தில் பணிபுரிந்த ஒரு பெண்தான், மேயரின் நிழல் போல அவரது உதவியாளராக தொடர்ந்தார். முதல்வர், அவரது மருமகனுடன் பழனிவேல் தியாகராஜன் நெருக்கம் காட்டியதால், அமைச்சர் பி.மூர்த்தி மாநகராட்சி விவகாரங்களில் தலையிடத் தயங்கியதாக கூறப்பட்டது.

நிதி அமைச்சராக இருந்தவரையில் கட்சி, ஆட்சியில் பழனிவேல் தியாகராஜன் செல்வாக்குடன் இருந்தார். இந்நிலையில் மதுரை மாநகர் திமுக தேர்தல் முதலே, அமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு பின்னடைவு ஏற்படத் தொடங்கியது. அவர் எதிர்பார்த்த நபரை மாவட்டச் செயலாளராக்க முடியவில்லை.

மீண்டும், மாநகர் செயலாளராக தளபதியே பொறுப்புக்கு வந்தார். அதனால், அமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கும், மாநகர் திமுக முக்கிய நிர்வாகிகளுக்கும் இடையே உட்கட்சி பூசல் ஏற்பட்டது. வெளிப்படையாக மாநகர் கட்சி நிர்வாகிகளை, பழனிவேல் தியாகராஜன் விமர்சிக்கவும் செய்தார். பதிலுக்கு தளபதி ஆதரவு திமுக கவுன்சிலர்கள், மாநகராட்சி கூட்டங்களில் மேயர் இந்திராணியை, விமர்சனம் செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது கட்சித் தலைமை இரு தரப்பையும் சமாதானம் செய்ததோடு, மேயரை விமர்சித்தவர்களை கண்டித்ததாக கூறப்படுகிறது. இந்த சூழலில் நிதி அமைச்சர் பொறுப்பில் இருந்து பழனிவேல் தியாகராஜன் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக மாற்றப்பட்டார். அதன்பிறகு, பழனிவேல் தியாகராஜன் கட்சி விவகாரங்களில் மட்டுமில்லாது, மாநகராட்சி நிர்வாகத்திலும் தலையிடுவதை தவிர்த்து வருகிறார்.

இந்த சந்தர்ப் பத்தை பயன்படுத்தி கொண்டு தளபதி, மாநகராட்சி விவகாரத்தில் மட்டு மில்லாது, ஒப்பந்த விவகாரங்களிலும் தலையிடத் தொடங்கி உள்ளார். அமைச்சர் மூர்த்தி, மாவட்டச் செயலாளர் தளபதி ஆகியோரை மீறி செயல்பட முடியாது என்பதால், மேயர் தனக்கான பணிகளை மட்டுமே கவனித்து வருகிறார்.

மாநகராட்சி ஒப்பந்தம் உள்ளிட்ட விவகாரங்களில் தலையிடுவ தில்லை. இந்நிலையில் அமைச்சர் மூர்த்தி இதில் தலையிட தொடங்கியுள்ளார். இந்நிலையில் மேயர், மாநகராட்சி அதிகாரி களை அழைத்து புறநகர் விரிவாக்கப் பகுதி வார்டுகளில் நடக்கும் பாதாள சாக்கடை, குடிநீர் திட்டப்பணிகளை வேகப்படுத்துவது பற்றி அமைச்சர் மூர்த்தி நேற்று ஆய்வு நடத்தினார். இதுவரை மாநகராட்சியில் இது போன்ற ஆய்வுக் கூட்டங்களை பழனிவேல்ராஜன் மட்டுமே நடத்தியது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து மேயர் தரப்பினரிடம் விசாரித்தபோது, கிழக்குத் தொகுதிக்குட்பட்ட வார்டுகள் என்பதால், அமைச்சர் மூர்த்தியே மாநகராட்சி ஆய்வுக் கூட்டத்தை நடத்தினார் என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x