Published : 20 Jun 2023 06:25 AM
Last Updated : 20 Jun 2023 06:25 AM
ஓசூர்: சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, ஓசூர் அருகே காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, 163-வது நாளில் போராட்டத்தை விவசாயிகள் கைவிட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உத்தனப்பள்ளி, அயர்னப்பள்ளி, நாகமங்கலம் ஆகிய ஊராட்சிகளில் 5-வது சிப்காட் அமைக்க விளை நிலங்களைக் கையகப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, விவசாயிகள் உத்தனப்பள்ளி வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன்பு காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். விவசாயிகளுக்கு ஆதரவாக பல்வேறு அமைப்பினர் ஆதரவு தெரிவித்து வந்தனர்.
போராட்டத்தைக் கைவிடக்கோரி, விவசாயிகளிடம், வருவாய்த்துறையினர் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்தினர். ‘விளை நிலத்தில் சிப்காட் அமைக்க மாட்டோம்’ என வருவாய்த் துறையினர் எழுத்துபூர்வமாக எழுதித்தர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதற்கு வருவாய்த் துறையினர் நடவடிக்கை எடுக்காததால், போராட்டம் தொடர்ந்தது.
இந்நிலையில், நேற்று 163-வது நாளாகக் காத்திருப்புப் போராட்டம் நடந்தது. அப்போது, ஓசூர் எம்எல்ஏ ஒய்.பிரகாஷ் (திமுக) மேயர் சத்யா, வட்டாட்சியர்கள் பன்னீர்செல்வி, (சிப்காட்) கிருஷ்ணமூர்த்தி, டிஎஸ்பி முரளி ஆகியோர் மீண்டும் விவசாயிகளிடம் பேச்சு நடத்தினர். விவசாயிகளின் கோரிக்கையை அரசின் கவனத்துக்குக் கொண்டு சென்று நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து, போராட்டத்தைக் கைவிடுவதாக விவசாயிகள் அறிவித்தனர். தொடர்ந்து, எம்எல்ஏ, மேயர் மற்றும் வட்டாட்சியர் ஆகியோர் விவசாயிகளுக்குப் பழரசம் வழங்கி போராட்டத்தை நிறைவு செய்தனர்.
இதுதொடர்பாக எம்எல்ஏ பிரகாஷ் கூறியதாவது: தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்துக்கு ஏற்கெனவே கொடுக்கப்பட்ட இடத்தில் சிப்காட் அமைக்க வேண்டும். தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் இடையே உள்ள விவசாய நிலத்துக்குப் பதில் மாற்று இடம் வழங்க வேண்டும், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்பப் பெற வேண்டும். நெருப்புகுட்டை அருகே 19 ஏக்கர் விளை நிலங்களை கையகப்படுத்தும் முயற்சியை கைவிட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். இக்கோரிக்கையை
முதல்வர் ஸ்டாலின் கவனத்துக்கு கொண்டு சென்று தீர்வு காண்போம். இவ்வாறு அவர் கூறினார்.
இதுதொடர்பாக விவசாயிகள் கூறியதாவது: விளை நிலத்தில் சிப்காட அமைக்க மாட்டோம் என உறுதியளித்ததையடுத்து, போராட்டத்தைக் கைவிட்டுள்ளோம். மீண்டும் சிப்காட் அமைக்க விளை நிலங்களைக் கையகப்படுத்தும் முயற்சி நடந்தால் மீண்டும் போராட்டம் தொடரும் என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT