Published : 20 Jun 2023 06:19 AM
Last Updated : 20 Jun 2023 06:19 AM

ஸ்டார்ட் அப் தொடங்குவதில் இந்தியா முதலிடம் - மத்திய இணை அமைச்சர் வி.கே.சிங் பெருமிதம்

திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் நேற்று நடந்த 17-வது பட்டமளிப்பு விழாவில் மாணவி ஒருவருக்கு பட்டம் வழங்கிய ஆளுநர் ஆர்.என்.ரவி. அருகில்,‌‌ மத்திய இணை அமைச்சர் வி.கே.சிங், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, பல்கலைக்கழக துணைவேந்தர் ஆறுமுகம் உள்ளிட்டோர். படம்: வி.எம்.மணிநாதன்

வேலூர்: மற்ற நாடுகளைவிட ஸ்டார்ட் அப் தொழில்கள் தொடங்குவதில் இந்தியா முதலிடத்தில் உள்ளது என திருவள்ளுவர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் மத்திய இணை அமைச்சர் வி.கே.சிங் தெரிவித்தார்.

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த சேர்க்காட்டில் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் உள்ளது. பல்கலைக் கழகத்தின் 17-வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவுக்கு தமிழக ஆளுநரும், பல்கலைக்கழக வேந்தருமான ஆர்.என்.ரவி தலைமை தாங்கி 417 முனைவர் பட்டங்களையும், இளங்கலையில் சிறப்பிடம் பிடித்த 70 பேர், முதுகலையில் 77 பேருக்கு பட்டங்களை வழங்கினார். பல்கலைக்கழக துணை வேந்தர் ஆறுமுகம் வரவேற்புரை நிகழ்த்தியதுடன் ஆண்டறிக்கையை வாசித்தார்.

தொடர்ந்து, மத்திய நெடுஞ்சாலைகள் மற்றும் சிவில் விமான போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் வி.கே.சிங் முதன்மை விருந்தினராக பங்கேற்று பேசும்போது, 'மாணவர்கள் தங்கள் இலக்கை அடைய கடுமையாக உழைக்க வேண்டும். மாணவர்கள் தொழில் முனைவோர்களாக மாறும்போது வாழ்க்கை பிரகாசிக்கும்.

மத்திய அரசு பெண்களின் கல்வி முன்னேற்றத்துக்கு அதிகளவில் முக்கியத்துவம் அளித்து வருகிறது. நாட்டின் வளர்ச்சி இளைஞர்களை நம்பியுள்ளது. இந்தியா மற்ற நாடுகளைவிட ஸ்டார்ட் அப் தொழில்கள் தொடங்குவதில் முதலிடத்தில் உள்ளது. 132 நாடுகளைச் சேர்ந்தவர்கள் இந்தியாவில் 61 வகையான தொழில்களில் 1,031 நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளனர். இவற்றின் மூலம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது. கரோனா காலத்துக்கு பின்னர் இந்தியாவின் பொருளாதாரம் 6 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. படித்த இளைஞர்கள் அனைவரும் அரசு வேலையை நம்பி இருக்கக்கூடாது. சுயதொழில் தொடங்க முன்வர வேண்டும்' என்றார்.

பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா மூலம் மொத்தம் 1 லட்சத்து 13 ஆயிரத்து 275 மாணவ, மாணவிகள் பட்டம் பெற்றனர். விழாவில், உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, பதிவாளர் (பொறுப்பு) விஜயராகவன், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் (பொறுப்பு) சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x