Published : 20 Jun 2023 06:06 AM
Last Updated : 20 Jun 2023 06:06 AM

ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய தனியார் நிறுவனத்துக்கு நிதிநுட்ப நகரம் கட்டுமான பணி ஒப்பந்தம் - பாஜக குற்றச்சாட்டு

சென்னை: நந்தம்பாக்கத்தில் நிதிநுட்ப நகரம் அமைப்பதற்கு, ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய தனியார் நிறுவனத்துக்கு கட்டுமானப் பணி ஒப்பந்தத்தை தமிழக அரசு அளித்திருப்பதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது.

இதுகுறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 2009-ம் ஆண்டில், கடந்த திமுக ஆட்சியில் திட்டமிடப்பட்ட நிதிநுட்ப
நகரம், தற்போது, ஒரு தனியார் கட்டுமான நிறுவனத்துக்கு ஒப்பந்தம் அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்த திட்டத்தின் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள, திமுக அரசு தேர்ந்தெடுத்துள்ள தனியார் நிறுவனம், தரக்குறைவான கட்டிடங்களைக் கட்டியதாக இதே திமுக ஆட்சியால் குற்றம்சாட்டப்பட்ட நிறுவனமாகும்.

அந்த தனியார் கட்டுமான நிறுவனத்தின் மீது புகார் வந்ததை அடுத்து, திமுக அரசு அமைத்த ஐஐடி ஆய்வுக்குழு அறிக்கையில், இந்த நிறுவனம் கட்டிய ஏழை மக்களுக்கான குடியிருப்புகளில் செய்யப்பட்டுள்ள பூச்சுவேலை, 90 சதவீதம் தரமற்றது என தெரிய வந்தது.

இதையடுத்து, இனிமேல் அரசுப் பணிகள் எதுவும் சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்துக்கு வழங்கப்படாது என தமிழக அரசு தெரிவித்தது. ஆனால் தற்போது, சென்னை நந்தம்பாக்கத்தில் ரூ.250 கோடி மதிப்பில் அமையவுள்ள நிதிநுட்ப நகரத்துக்கான கட்டுமானபணிக்கு, அதே நிறுவனத்துடன் திமுக அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.

எனவே, உடனடியாக, அந்த நிறுவனத்துக்குக் கொடுக்கப்பட்ட நிதிநுட்ப நகரம் கட்டுமான ஒப்பந்தத்தை திரும்பப்பெற வேண்டும். அந்த நிறுவனத்தின் மீதான ஆய்வறிக்கையைப் பொதுமக்கள் பார்வைக்கு வைத்து, அதன் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை புளியந்தோப்பு கே.பி.பார்க் என்ற இடத்தில் குடிசைமாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பு தரமற்றதாக கட்டப்பட்டதாக ஊழல் குற்றச்சாட்டு எழுந்த சம்பந்தப்பட்ட தனியார் கட்டுமான நிறுவனத்துக்கு, இனி எந்த அனுமதியும் வழங்கப்படாது என்று திமுக அரசு உறுதியளித்திருந்தது.

இந்நிலையில், தற்போது சென்னை நந்தம்பாக்கத்தில் 56 ஏக்கர் நிலப்பரப்பில் நிதிநுட்ப நகரம் அமைப்பதற்கான கட்டுமான ஒப்பந்தத்தை அதே நிறுவனத்துக்கு தமிழக அரசு வழங்கியுள்ளது அதிர்ச்சியளிக்கிறது. எதன் அடிப்படையில் அந்த நிறுவனத்துக்கு திமுக அரசு ஒப்பந்தத்தை மீண்டும் அளித்தது என்பதை முதல்வர் ஸ்டாலின் விளக்க வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x