Published : 20 Jun 2023 05:54 AM
Last Updated : 20 Jun 2023 05:54 AM
சென்னை: தமிழகத்தில் இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்களுக்கான சாலை வரியை 5 சதவீதம் வரை உயர்த்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
தமிழக அரசின் வருவாயில் வணிக வரி, பதிவுத் துறை, டாஸ்மாக் ஆகிய துறைகளுடன் போக்குவரத்துத் துறையும் கணிசமான பங்கை வகிக்கிறது. வாகனப்பதிவு, சாலை வரி உள்ளிட்டவை மூலம் வருவாய் கிடைத்து வருகிறது. கடைசியாக, கடந்த 2008-ல் இருசக்கர வாகனங்களுக்கும், 2010-ல் கார்களுக்குமான வரி உயர்த்தப்பட்டது. அதன்படி, இரு
சக்கர வாகனத்தின் விலையில் 8 சதவீதம், கார்களுக்கு ரூ.10 லட்சத்துக்குள் விலை இருந்தால் 10 சதவீதம், ரூ.11 லட்சத்துக்கும் அதிகமான மதிப்புள்ள கார்களுக்கு 15 சதவீதம் சாலை வரி வசூலிக்கப்பட்டு வருகிறது.
நிதிநிலை அறிக்கை: இந்நிலையில், நிதியமைச்சராக பழனிவேல் தியாகராஜன் இருந்தபோது, 2021-ல் தமிழக நிதிநிலை குறித்து வெளியிட்ட அறிக்கையில் வாகனங்களின் சாலை வரி உயர்வு தொடர்பாக தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, போக்குவரத்து ஆணையரகம் சார்பில், வாகனங்களின் சாலை வரியை உயர்த்துவது தொடர்பான கருத்துரு தமிழக அரசுக்கு கடந்தாண்டு அனுப்பப்பட்டது. அதைத்தொடர்ந்து, தற்போது சாலை வரியை உயர்த்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகக் கூறப்படுகிறது. இதன்படி, வாகனங்களைப் பொறுத்து 2 முதல் 5 சதவீதம் வரை சாலை வரி உயரக் கூடும் எனக் கூறப்படுகிறது.
எத்தனை சதவீதம்?: குறிப்பாக, இரு சக்கர வாகனங்களின் விலை ரூ.1 லட்சம் வரை இருந்தால் 10 சதவீதமும், அதற்கு மேல் இருந்தால் 12 சதவீதமும், கார்களில் ரூ.5 லட்சம் வரை 12 சதவீதம், ரூ.5 லட்சம் முதல் 10 லட்சம் வரை 13 சதவீதம், ரூ.10 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை 15 சதவீதம், ரூ.20 லட்சத்துக்கு மேல் இருந்தால் 20 சதவீதம் வரையும் வரி விதிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
போக்குவரத்துத் துறை அதிகாரிகளுடன் சமீபத்தில் தலைமைச் செயலர் இதுகுறித்து விவாதித்துள்ளதாகவும், விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் எனவும் தெரிகிறது. சாலை வரி உயர்வால், வாகனங்களின் விலையிலும் கணிசமான உயர்வு இருக்கும். சாலை வரி உயர்வு குறித்து போக்குவரத்துத் துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘கடந்தாண்டு அனுப்பிய பரிந்துரை இது. வரி உயர்வு கொள்கை முடிவு என்பதால், முதல்வர் இதுகுறித்து முடிவு எடுத்து அறிவிப்பார்’’ என்றார்.
அன்புமணி வலியுறுத்தல்: இதற்கிடையே சாலை வரியை உயர்த்தும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நேற்று அவர் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் இருசக்கர மற்றும் கார்களுக்கான சாலை வரியை உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சாலைவரி உயர்வால் இரு சக்கர வாகனங்களின் விலை ரூ.16 ஆயிரம் வரையிலும், கார்களின் விலை லட்சக்கணக்கிலும் உயரும். இந்த வரி உயர்வு ஏழை மற்றும் நடுத்தர மக்களை கடுமையாகப் பாதிக்கும்.
இரு சக்கர வாகனங்கள் தவிர மீதமுள்ள அனைத்து வாகனங்களுக்கும் சுங்கக்கட்டணம் என்ற பெயரில் மிக அதிக தொகை வசூலிக்கப்படும் நிலையில், சாலை வரி ரத்து செய்யப்பட வேண்டுமே தவிர, உயர்த்தப்படக் கூடாது. சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் நோக்குடன் ஒரு குடும்பத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட கார்கள் பயன்படுத்தப்பட்டால், இரண்டாவது காருக்கு அதன் மொத்த விலையில் 50 சதவீதம், மூன்றாவது காருக்கு 60 சதவீதம் என்ற அளவில்கூட சுற்றுச்சூழல் பாதுகாப்பு வரி என்ற பெயரில் வசூலிப்பதில் தவறு இல்லை. ஆனால், இன்றியமையாத் தேவைக்காகவும், பிழைப்புக்காகவும் வாங்கப்படும் கார்களுக்கு சாலைவரியை உயர்த்துவது அநீதி ஆகும். எனவே,வாகனங்களுக்கு சாலைவரியை உயர்த்தும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT