Published : 20 Jun 2023 05:06 AM
Last Updated : 20 Jun 2023 05:06 AM

பதிவின்றி முகாமில் தங்கியுள்ள 258 இலங்கை தமிழர் நிலை என்ன? - மத்திய அரசின் முடிவுக்காக காத்திருக்கும் தமிழக அரசு

தனுஷ்கோடி அரிச்சல்முனையிலிருந்து அழைத்துச் செல்லப்படும் இலங்கை தமிழர்கள்.

ராமேசுவரம்: உலக அகதிகள் தினம் இன்று கடைப்பிடிக்கப்படும் இந்த வேளையில் சொந்த மண்ணைவிட்டு வெளியேறி பிற நாடுகளில் தஞ்சமடைந்துள்ளோரின் எண்ணிக்கை, முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்து வருகிறது.

உலகம் முழுவதும் சுமார் 8 கோடிபேர் அகதிகளாக இருப்பதாகவும், போர்ச்சூழல் மற்றும் பாதுகாப்பின்மை காரணமாக தினமும் சராசரியாக சொந்த நாட்டைவிட்டு வெளியேறுவோரின் எண்ணிக்கை 28,300 என்கிறது ஐநா சபை. "எல்லாச் செயலும் கணக்கிடப்படுகிறது. எல்லோருடைய உயிரும் மதிப்புமிக்கவை" என்பது ஐ.நா.வின்
அகதிகள் தின முழக்கமாகும்.

இந்தியாவில் வங்கதேசம், திபெத், இலங்கை, மியான்மர் என பல்வேறு நாட்டு அகதிகள் வந்து தங்கிஉள்ளனர். இலங்கையில் 1983-ல் ஏற்பட்ட உள்நாட்டு போரால்
தமிழர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி அகதிகளாக உலகம் முழுவதும் புலம் பெயர்ந்தனர். தமிழகத்துக்கு 3 லட்சத்து 4 ஆயிரத்து 269 அகதிகள் வந்திருந்தனர். இதில் சுமார் 2 லட்சத்து 12 ஆயிரம் பேர் இலங்கைக்கு திரும்பிச் சென்றுள்ளனர். தற்போதைய நிலவரப்படி தமிழகத்தில் 1 லட்சத்து 2 ஆயிரம் பேர் 108 மறுவாழ்வு முகாம்களிலும், வெளியிலும் தங்கியுள்ளனர்.

அகதிகளின் குடும்பத் தலைவருக்கு ரூ.1,500, 12 வயதுக்கு மேல் ரூ.1000, 12 வயதுக்கு கீழ் ரூ.500 என மாதாந்திர உதவித்தொகை, கல்வி உதவி, வீடு, மின்சாரம், குடும்பத்துக்கு மாதம் 20 கிலோ இலவச அரிசி, மானிய விலையில் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்படுகின்றன. வெளியே கூலி வேலைக்குச் சென்றுவிட்டு மாலையில் முகாம்களுக்கு திரும்ப அனுமதிக்கப்படுகின்றனர்.

2012-ம் ஆண்டின் இறுதியில் இலங்கையில் இருந்து அகதிகளாக வருவோர், கைதுசெய்யப்பட்டு பாஸ்போர்ட் ஆவணச் சட்டத்தின் கீழும், சட்ட விரோதமாக வந்ததாகவும் வழக்குப் பதிந்து சிறைகளிலும், சிறப்பு முகாம்களிலும் அடைக்கப்பட்டு வந்தனர்.

2022-ல் இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் அங்கிருந்து இதுவரை சுமார் 60 குடும்பங்களைச் சேர்ந்த 258 இலங்கை தமிழர்கள் அகதிகளாக தனுஷ்கோடி வந்தனர். இவர்களை கைது செய்யாமல் மனிதாபிமான அடிப்படையில் மண்டபம் முகாமில் தற்காலிகமாக தமிழக அரசு தங்க வைத்துள்ளது. மேலும் இவர்களுக்கு தங்குமிடமும் 3 வேளை உணவு மட்டுமே வழங்கப்படுகிறது.

இலங்கை பொருளாதார நெருக்கடியால் அகதிகளாக வந்துள்ளவர்களை எப்படிக் கருதலாம் என்பது குறித்த மத்திய அரசின் முடிவுக்காக கடந்த 15 மாதங்களாக தமிழக
அரசு காத்திருக்கிறது. ஏற்கெனவே தமிழக முகாம்களில் வசிப்போருக்கு வழங்கப்படும் சலுகைகளைப் போன்று, 258 பேருக்கும் புகலிடம் வழங்குவதற்கான சிறப்பு ஏற்பாடுகளை வழங்க அனுமதிக்க வேண்டும் என தமிழக அரசு கோரிக்கை வைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x