Published : 19 Jun 2023 11:59 PM
Last Updated : 19 Jun 2023 11:59 PM

சென்னையில் வெளுத்துவாங்கும் கனமழை - அடுத்த 3 மணிநேரத்துக்கு விட்டுவிட்டு பெய்ய வாய்ப்பு

சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நள்ளிரவில் கனமழை பெய்து வருகிறது. எழும்பூர், அண்ணாசாலை, கிண்டி உள்ளிட்ட சென்னையின் முக்கிய பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்துவருகிறது. அரைமணி நேரத்துக்கும் மேலாக கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.

இதனிடையே, அடுத்த 3 மணி நேரத்துக்குள்ளாக செங்கல்பட்டு, மயிலாப்பூர், பெரம்பூர், புரசைவாக்கம், திருக்கழுகுன்றம், திருவொற்றியூர், தண்டையார்பேட்டை, உத்திரமேரூர், செய்யூர், எழும்பூர், கிண்டி, மாம்பலம் பகுதிகளில் லேசான மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதேபோல் தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மாவட்டங்களிலும் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அடுத்த மூன்று மணி நேரத்தில் திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிதமான இடி அல்லது மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் அறிவித்துள்ளது.

வானிலை முன்னறிவிப்பு: செவ்வாய்க்கிழமை (ஜூன் 20) வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். செங்கல்பட்டு, காஞ்சிபுரம், இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

21-ம் தேதி தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 22 மற்றும் 23ம் தேதி தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். இடி மின்னலுடன் கூடிய மிதமான / கன மழை பெய்யக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x