Published : 20 Jun 2023 12:25 AM
Last Updated : 20 Jun 2023 12:25 AM
புதுச்சேரி: “ஒற்றுமையாக இருந்தால் கர்நாடகத்தைப் போல் வெல்லலாம்” என்று புதுச்சேரி காங்கிரஸாருக்கு கர்நாடக அமைச்சர் தினேஷ் குண்டுராவ் யோசனை தெரிவித்தார்.
புதுவை மாநில காங்கிரஸ் தலைவராக வைத்திலிங்கம் எம்பி அகில இந்திய தலைமையால் நியமிக்கப்பட்டுள்ளார். புதிய தலைவராக நியமிக்கப்பட்ட வைத்திலிங்கம் எம்பி இன்று மாலை மாநிலத்தலைவராக வைசியாள் வீதியில் உள்ள காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் பொறுப்பேற்றார். இந்நிகழ்வில் புதுச்சேரி பொறுப்பாளரும், கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சருமான தினேஷ் குண்டுராவ், முன்னாள் முதல்வர் நாராயணசாமி, முன்னாள் அமைச்சர்கள், நிர்வாகிகள், பங்கேற்றனர். அதையடுத்து ஜெயராம் திருமண மண்டபத்தில் ராகுல்காந்தி பிறந்தநாளையொட்டி பிரமாண்ட கேக் வெட்டப்பட்டது.
இந்நிகழ்வில் புதுச்சேரி பொறுப்பாளரும், கர்நாடக அமைச்சருமான தினேஷ் குண்டுராவ் பேசியதாவது: தற்போது கர்நாடக அமைச்சராக இருப்பதால், மேலிடப் பொறுப்பாளர் புதுச்சேரிக்கு புதியவர் நியமிக்கப்படுவார். நாடாளுமன்றத் தேர்தலுக்கு 8 மாதங்களே உள்ளன. அதற்கு தயாராகி வெல்ல வேண்டும். அதற்கான முன்தயாரிப்பை இன்று துவக்கியுள்ளோம். அனைவரின் ஒத்துழைப்பும் ஆதரவும் தேவை. கர்நாடக காங்கிரஸில் பெரிய தலைவர்கள் இருக்கின்றனர். வேறுபாடுகளும் இருந்தன. அனைத்து வேறுபாடுகளையும் விட்டு, விட்டு வெல்வதை குறிக்கோளாக்கி ஒற்றுமையாக செயல்பட்டு வென்றோம். மோடி, அமித் ஷா பலமுறை வந்தாலும் ஒன்றும் செய்ய முடியவில்லை.
அதேபோல் புதுச்சேரியிலும் ஒற்றுமையாக வேலை செய்தால் வெல்லலாம். அதுதான் முக்கியம். நாடாளுமன்றத் தேர்தல் மட்டுமில்லாமல் சட்டப்பேரவைத் தேர்தலிலும் வென்று புதுச்சேரியில் ஆட்சியமைக்கலாம். தென்னிந்தியாவில் புதுச்சேரியில் மட்டுமே கூட்டணி ஆட்சியில் பாஜகவுள்ளது. நாம் ஒற்றுமையாக இருந்தால் நாடாளுமன்றத் தேர்தலில் தென்னிந்தியாவில் ஒரு இடத்தில் கூட பாஜக வர விடாமல் செய்ய முடியும். ராகுல் பிரதமராக வேண்டும் என்ற இலக்கு இருந்தால் அதை சாதிக்க முடியும். பாஜகவை வெல்ல முடியும் என்று நாங்கள் கர்நாடகத்தில் நம்பி ஒற்றுமையாக பணியாற்றி வென்றோம். காங்கிரஸ் கண்டிப்பாக நாடாளுமன்றத் தேர்தலில் வெல்ல முடியும் என்று குறிப்பிட்டார்.
முன்னாள் முதல்வர் நாராயணசாமி பேசுகையில், "கர்நாடகத்தில் காங்கிரஸ் வென்று புதுவெள்ளம் பாய்ச்சப்பட்டுள்ளது. கிரண்பேடி புதுச்சேரி செய்ததுபோல் தமிழகத்தில் தற்போது நடக்கிறது. மோடிக்கு அமலாக்கத்துறை, வருமானவரித்துறை, சிபிஐதான் பலமாக உள்ளது. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் அமைச்சர்களை சிறைக்கு அனுப்புவதும், ஆதாரமற்ற பொய் குற்றச்சாட்டுகளை வைத்து எதிர்க்கட்சிகளை மிரட்டுகிறார்கள்.
இதற்கு முடிவுக்கட்ட எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும். புதுச்சேரியில் பலம் பொருந்திய கட்சி காங்கிரஸ்தான். ஏற்கெனவே நாம் ஏமாந்துள்ளோம். அதுபோல் ஏமாறக்கூடாது. நாடாளுமன்றத் தேர்தலில் புதுச்சேரியில் காங்கிரஸ் மட்டுமே நிற்கவேண்டும். திமுக புதுச்சேரியில் கூட்டணி கட்சி. நாகபாம்பை விட பாஜகவினர் கொடியவர்கள். நாகத்தை அடிப்பதை விட பாஜகவினரை அடிக்க வேண்டும்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT