Published : 19 Jun 2023 06:52 PM
Last Updated : 19 Jun 2023 06:52 PM
வேலூர்: வேலூர் பழைய பேருந்து நிலையத்தையொட்டி அமைந்துள்ள அரசு டாஸ்மாக் மதுபானக் கடைகளில் விதிகளை மீறி விற்பனை செய்யப்படும் மதுபாட்டில்களால் மண்டி தெருவில் பாதி இடம் மதுபானக் கூடமாக மாறி அங்கு சட்டம் - ஒழுங்கு சீர்குலையும் நிலை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள், வியாபாரிகள் குற்றஞ்சாட்டி யுள்ளனர்.
தமிழ்நாடு அரசுக்கு அதிக வருவாய் ஈட்டித்தரும் துறைகளில் ‘டாஸ்மாக்’ முக்கிய இடத்தை பிடித்துள்ளது. ஆண்டுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் வருவாயை டாஸ்மாக் கடைகள் வாரி குவிப்பதால் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை ஆண்டு தோறும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
மது பாட்டில்களின் விலை ஏறினாலும் அதன் விற்பனை குறைந்தபாடில்லை. மதுபோதைக்கு அடிமையாவோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டேதான் உள்ளது. 21 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மது பாட்டில்கள் விற்பனை செய்யக்கூடாது என்ற உத்தரவு அமலில் இருந்தாலும், அந்த விதிமுறைகளை அரசு டாஸ்மாக் கடைகள் பின்பற்றுவதில்லை.
டாஸ்மாக் மதுபானக்கடைகள் பகல் 12 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 10 மணி வரை இயங்கி வருகிறது. இதில், கடைகள் மூடப்படும் நேரத்தில் மதுபானம் வாங்கு பவர்கள், மதுபானக் கடைகளின் முன்பும், சாலையோரத்தின் அருகில் உள்ள பொதுவான இடங்களில் அமர்ந்து மது அருந்துவதும், அங்கு பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் நிகழ்வுகள் தமிழ்நாட்டில் பல இடங்களில் நிகழ்ந்து வருகின்றன.
அதில் வேலூர் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள அரசு டாஸ் மாக் மதுபானக் கடைகளால் அங்குள்ள பொதுமக்களுக்கு பல்வேறு தொந்தரவுகள் தொடர்ந்து வருவது வேதனையளிப்பதாக உள்ளது. வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பழைய பேருந்து நிலையத்தையொட்டி இரண்டு டாஸ்மாக் மதுபானக்கடைகள் உள்ளன.
இங்கு டாஸ்மாக் கடைகள் திறந்து, மூடப்பட்ட பிறகும் விதிமுறைகளை மீறி மதுபானம் விற்பனை செய்யப்படுகிறது. இரவு 10 மணிக்கு பிறகும் இந்த இடத்தில் மதுபான வகைகள் எவ்வளவு வேண்டுமானாலும் கிடைப்பதால் நகரின் பல்வேறு இடங்களில் இருந்து மது குடிப்பவர்களின் வருகை அதிகரிக்கிறது.
டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை வாங்கும் மது குடிப்பவர்கள் மண்டி தெரு முகப்பிலேயே பொதுவான இடங்களில் அமர்ந்து அங்கேயே மது வகைகளை வெட்ட வெளியில் அருந்துகின்றனர். மது வகைகளை அருந்திய பிறகு காலி மதுபாட்டில்கள், வாட்டர் பாட்டில்கள், உணவு கழிவுகளை சாலையிலேயே வீசிவிட்டு செல்வதால் அங்கு வியாபாரம் நடத்தி வரும் வியா பாரிகள் தினம் ஒரு பிரச்சினையை எதிர்க்கொள் கின்றனர்.
மது குடிப்பவர்களின் தொல்லையால் ஒரு சில வியாபாரிகள் தங்களது கடைகளை மாலை 6 மணிக்கே மூடிவிட்டு செல்லும் நிலையும் மண்டி தெருவில் நடந்து வருகிறது. பழைய பேருந்து நிலையத்தையொட்டி மண்டி தெரு அமைந்துள்ளதால் மது குடிப் பவர்களின் ரகளையால் பேருந்துக்காக வரும் பயணிகளும் பல இன்னல்களை சந்திக்க வேண்டியுள்ளது.
பொது இடங் களில் மது அருந்துவது சட்டப்படி குற்றச் செயலாகும். எனவே, டாஸ்மாக் மதுபானக் கடைகள் மற்றும் மதுக்கூடங்களை மூடிய பிறகு, பொது இடங்களில் மது அருந்து வதை முறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை ஒரு புறம் இருந்தாலும், மது குடிப்போரை கட்டுப்படுத்த வேண்டிய காவல் துறையினரோ, இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் கைக்கட்டி வேடிக்கை பார்ப்பது பொதுமக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் நகரின் முக்கிய பகுதிகளில் ஒன்றாக திகழும் மண்டி தெருவில் நூற்றுக் கணக்கான வியாபாரிகள் வணிகம் செய்து வருகின்றனர். வேலூர் மாவட்டத்தில் கடைக் கோடியில் உள்ள மக்கள் மற்றும் நகரில் உள்ள பெரும்பாலான மக்கள் தங்கள் வீடு களுக்கு தேவையான பொருட்களை வாங்க மண்டி தெருவுக்கு தான் வருகின்றனர்.
அவ்வாறு வரும் மக்கள் அங்குள்ள மதுபானக் கடைகளாலும், அனுமதியில்லாமல் இயங்கி வரும் மதுக்கூடங்களாலும், மது குடிப்போரின் அடாவடியால் பல துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். இதையெல்லாம் காவல்துறையினர் கட்டுப்படுத்த வேண்டும், மண்டி தெருவில் சாலையோரங்களில் அமர்ந்து மது அருந்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து வேலூர் சரக டிஐஜி முனைவர் முத்துசாமி, ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் கூறும்போது, ‘‘இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கவனத்துக்கு கொண்டு சென்று, நடவடிக்கை எடுக்கப்படும். திறந்த வெளியில் மது அருந்துபவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் மற்றும் பயணிகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT