Published : 19 Jun 2023 04:55 PM
Last Updated : 19 Jun 2023 04:55 PM
சென்னை: சென்னை - திருத்தணி - ரேணிகுண்டா சாலை பாடி, அம்பத்தூர், ஆவடி, திருநின்றவூர், திருவள்ளூர் வழியாகச் செல்கிறது. நாளுக்கு நாள் இச்சாலையில் போக்குவரத்து அதிகரித்து வருகிறது. ஆனால், சாலை குறுகலாக இருப்பதால் வாகன ஓட்டிகள் தினமும் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.
இதையடுத்து, இப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில், இச்சாலை சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையாக (எண்.205) தரம் உயர்த்தி, அகலப்படுத்த கடந்த 2007-ம் ஆண்டு தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதற்காக, பாடி முதல் திருப்பதி வரை, தேசிய நெடுஞ்சாலைத் துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது.
இதில், திருநின்றவூர் முதல் திருத்தணியை அடுத்ததமிழக எல்லையான அலமேலுமங்காபுரம் வரை முதற்கட்டமாக 68 கி.மீ. தூரம் வரையான சாலை விரிவாக்கப் பணியை தேசிய நெடுஞ்சாலைத் துறை மேற்கொண்டது. ஆனால், 2-ம் கட்டமாக, பாடி முதல் திருநின்றவூர் வரையிலான சாலையை விரிவாக்கம் செய்யமுடியவில்லை.
சாலை விரிவாக்கத்துக்குத் தேவையான நிலத்தை கையகப்படுத்த முடியாததால், தேசிய நெடுஞ்சாலைத் துறை இச்சாலையை விரிவாக்கம் செய்ய மறுத்து விட்டது. இதையடுத்து, 2013-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, சென்னை - திருப்பதி (சிடிஎச்) சாலைரூ.168 கோடி செலவில் ஆறுவழிச் சாலையாக மாற்றப்படும் என அறிவித்தார்.
இதையடுத்து, 2014-ம் ஆண்டு அந்தச் சாலை மாநில நெடுஞ்சாலைத் துறைக்கு மாற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து, முதற்கட்டமாக ரூ.98 கோடி மதிப்பீட்டில், நான்கு வழிச் சாலை அமைப்பதற்கான பணிகள் தொடங்கின. ஆனால், சாலையின் இருபுறமும் உள்ளஏராளமான கடைகள், வீடுகள், வர்த்தக நிறுவனங்கள் உள்ளிட்ட கட்டிடங்களை அகற்ற, பொதுமக்களும், வணிகர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அத்துடன், சில குறுக்கீடுகளும் இருந்ததால் இப்பணிகள் கிடப்பில் போடப்பட்டன. இந்நிலையில், தற்போது பதவியேற்றுள்ள திமுக அரசு, சென்னை - திருத்தணி -ரேணிகுண்டா சாலை விரிவாக்கத் திட்டத்தின் கீழ் பாடி முதல் திருநின்றவூர் வரை 6 வழிச் சாலையாக விரிவாக்கம் செய்யும் பணிகளை தொடங்கி உள்ளது.
இதன்படி, சென்னை பாடியில் இருந்து அம்பத்தூர், ஆவடி, திருநின்றவூர் ஆகிய பகுதிகளில் சாலையை விரிவாக்கம் செய்வதற்காக நிலம் கையகப்படுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது. ஆனால், இப்பணி மிகவும் ஆமை வேகத்தில் நடை பெற்று வருகிறது.
இது குறித்து, அம்பத்தூர், பிருத்திவாக்கம் பகுதியைச் சேர்ந்த கே.முரளி என்பவர் கூறியதாவது: இச்சாலையில் போதிய அளவு போக்குவரத்து போலீஸார் பணியில் ஈடுபடுத்தப்படாததால் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. குறிப்பாக, அம்பத்தூர் ஓ.டி., கனரா வங்கி, அம்பத்தூர் எஸ்டேட்,பாடி, ஆவடி பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் நடை பாதைகளை ஆக்கிரமித்து கடைகளை வைத்துள்ளனர். எனவே, பொதுமக்களின் நலன் கருதி உடனடியாக சாலையைவிரிவாக்கம் செய்ய வேண்டும். இவ்வாறு கூறினார்.
இது குறித்து, தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் வடசென்னை மேற்கு மாவட்ட செயலாளரான அம்பத்தூரை சேர்ந்த கே.முகம்மது கூறியதாவது: பாடி- திருநின்றவூர் சாலை விரிவாக்கத்துக்கு வணிகர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறப்படுவது முற்றிலும் தவறான தகவல். உண்மையில், சாலை விரிவாக்கத்தை வணிகர்கள் வரவேற்கின்றனர்.
இச்சாலை தொடக்கத்தில் 250 அடியாக அகலப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. தேசிய நெடுஞ்சாலைகள், புறவழி மற்றும் வெளிவட்டச் சாலைகள் மட்டுமே அந்த அளவுக்கு அகலப்படுத்த வேண்டும். ஊருக்குள் செல்லும் சாலைகள் அந்த அளவுக்கு அகலப்படுத்தக் கூடாது என நாங்கள் தெரிவித்தோம்.
தற்போது இச்சாலை 100 அடி அளவுக்கு மட்டுமே விரிவுபடுத்தப்பட உள்ளது. எனவே இதை வியாபாரிகள் எதிர்க்கவில்லை. மேலும், இழப்பீட்டுத் தொகையும் 3 மடங்கு அதிகரித்து வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதையும் நாங்கள் வரவேற்கிறோம். இவ்வாறு கூறினார்.
இது குறித்து, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, பாடி - திருநின்றவூர் சாலை 6 வழிச் சாலையாக அகலப்படுத்துவதற்கான நிலம் கையகப்படும் பணி தற்போது 50 சதவீதம் நிறைவடைந்துள்ளது. மீதமுள்ள பணி நிறைவடைய இன்னும் ஓராண்டுக்கு மேல் ஆகலாம் என தெரிகிறது. அதன்பிறகே சாலை விரிவாக்கம் செய்யும் பணி தொடங்கப்படும் என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT