Published : 19 Jun 2023 02:08 PM
Last Updated : 19 Jun 2023 02:08 PM
சென்னை: மழை காரணமாக சென்னையில் பெரிய அளவில் எந்த பாதிப்பும் இல்லை என்று கூடுதல் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்தார்.
சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் உள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில் மழை பாதிப்புகளை நகராட்சி நிர்வாகத்துறை கூடுதல் தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளரிடம் பேசிய அவர், "சென்னையில் 10.3 செ.மீ மழை பெய்துள்ளது. சில இடங்களில் 14 முதல் 15 செ.மீ மழை பெய்துள்ளது ஆலந்தூர், மீனம்பாக்கம், நுங்கம்பாக்கம் பகுதியில் அதிகமாக மழை பெய்துள்ளது.
சென்னையில் பெரிய அளவில் எந்த பாதிப்பும் இல்லை. கட்டுப்பாட்டு மையத்துக்கு புகார்கள் வந்துள்ளன. புகார்கள் வந்தவுடன் அதனை சரி செய்து வருகிறார்கள். கிண்டி நகர்ப்புற சதுக்க சுரங்கப் பாதையில் மின் மோட்டார் பழுது காரணமாக தண்ணீரை உடனடியாக வெளியேற்ற இயலவில்லை. தற்போது நீரை வெளியேற்றும் பணி நடந்து வருகிறது
சுமார் 25 இடங்களில் பம்புகள் மூலம் தண்ணீரை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. சென்னையில் உள்ள 22 சுரங்கப்பாதைகளில், கணேசபுரம் சுரங்கப்பாதையில் மட்டுமே தண்ணீர் தேங்கியுள்ளது. அயனாவரம் பகுதிகளில் தண்ணீர் நிற்கிறது. அங்கு மழை நீர் வடிகால் பணிக்கான டெண்டர் விடப்பட்டுள்ளது.
பணிகள் விரைவில் முடிக்கப்படும். சென்னை மாநகராட்சி பகுதியில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகள் மற்றும் சாலை அமைக்கும் பணிகள் வரும் வடகிழக்கு பருவமழைக்கு முன்னால் முடிக்கப்படும்." என்று கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT