Published : 19 Jun 2023 08:53 AM
Last Updated : 19 Jun 2023 08:53 AM
சென்னை: சென்னையில் 27 ஆண்டுகளுக்குப் பின்னர் ஜூன் மாதத்தில் கனமழை பெய்துள்ளதாக தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களில் நேற்று தொடங்கிய மழை விடிய விடிய கொட்டித் தீர்த்தது. விடிந்த பின்னர் மழை நீடித்து வருகிறது.
இந்நிலையில் ஜூன் மாதத்தில் பெய்த இந்த மழை குறித்து தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் 'தமிழ்நாடு வெதர்மேன்' என்ற தனது சமூக வலைதள பக்கத்தில் சுவாரஸ்யத் தகவலைப் பகிர்ந்துள்ளார்.
அதில் அவர், "1991, 1996 ஆண்டுகளுக்குப் பின்னர் இப்போது 2023 ஜூன் மாதத்தில் மழை பெய்துள்ளது. 27 ஆண்டுகளுக்குப் பின்னர் ஜூன் மாதத்தில் சென்னை மற்றும் வட கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்துள்ளது. கடலில் இருந்து நகர்ந்துவரும் மேகக்கூட்டங்கள் காரணமாக மழை பெய்து வருகிறது.
வரலாறு காணாத வெப்ப அலை வீசிய பின்னர் இயற்கை அதை சமன் செய்வதற்காக இது போன்ற மழை பெய்வது வழக்கம். ஆனாலும் கடலில் இருந்து மழை மேகங்கள் வருவதைப் பார்ப்பது கனவு போன்றது.
1996க்குப் பின்னர் சென்னையில் ஜூன் மாதத்தில் பள்ளிகளுக்கு மழை விடுமுறை விடப்பட்டுள்ளது. 1996 ஜூன் மாதத்தில் பள்ளிகளுக்கு ஒரு வாரத்துக்கு மழை விடுமுறை விடப்பட்டது என்பது நினைவுகூரத்தக்கது" என்று பதிவிட்டுள்ளார்.
1913-ல் புகார் கூறலாம்: இதற்கிடையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் காலை 10 மணி வரையிலும் மழை நீடிக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தொடர்மழை காரணமாக சென்னையில் மழை நீர் தேக்கம் போன்ற புகார்களுக்கு மக்கள் 1913 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று மாநகராட்சி துணை ஆணையர் தெரிவித்துள்ளார்.
இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு: தமிழகத்தில் இன்று (ஜூன் 19) காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்படினம், திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களிலும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடியுடன் கூட கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், நாளை ஜூன் 20, 21 மற்றும் 22 தேதிகளில் ஆங்காங்கே இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT