Published : 19 Jun 2023 08:09 AM
Last Updated : 19 Jun 2023 08:09 AM
சென்னை: சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் பல்வேறு பகுதிகளில் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மழை தொடரும் நிலையில், பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கோடைக் காலத்தில் தமிழகத்தின் உள் பகுதியில் வெப்பம் அதிகரித்தாலும் கடலோரப் பகுதியான சென்னை, புறநகர் பகுதிகளில் வெப்பம் சற்று குறைவாகவே இருக்கும். ஆனால், இந்த ஆண்டு கடந்த மே மாதம் முதல் ஜூன் 16-ம் தேதிவரை சென்னை, புறநகரில் வெயில் சுட்டெரித்தது.
கடந்த மே மாதம் வங்கக் கடலில் உருவான `மொக்கா' புயல், ஜூன் மாதத்தில் அரபிக் கடலில் உருவான `பிப்பர்ஜாய்' புயல் ஆகியவற்றின் தாக்கத்தாலேயே சென்னை போன்ற கடலோர மாவட்டங்கள் மற்றும் அவற்றை ஒட்டிய உள் மாவட்டங்களில் உயர் வெப்ப நிலை நிலவியதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வழக்கமாக ஜூன் முதல் வாரத்தில் தென்மேற்கு பருவமழை கேரளாவில் தொடங்கியதும், வலுவான மேற்கு திசைக் காற்று தமிழகம் நோக்கி வீசி மழையை வரவழைக்கும். அதன் மூலம் கோடைக் கால வெப்பம் குறையத் தொடங்கும். ஆனால் அரபிக் கடலில் நிலவிய பிப்பர்ஜாய் புயலால் தென்மேற்கு பருவக் காற்றும் வலுவாக இல்லாததால், அது கரையைக் கடக்கும் வரை சென்னை, புறநகரில் வெயில் வாட்டி வதைத்தது.
இரவு நேரங்களிலும் காற்று வீசாமல் பொதுமக்கள் புழுக்கத்தில் அவதிப்பட்டு வந்தனர். கடந்த வெள்ளிக்கிழமையன்று கூட சென்னை நுங்கம்பாக்கம், புறநகர் பகுதியான மீனம்பாக்கம் ஆகிய இடங்களில் தலா 106 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில்பதிவாகி இருந்தது.
பலத்த காற்றுடன் சாரல்: பிப்பர்ஜாய் புயல் குஜராத் அருகே கரையைக் கடந்த நிலையில், நேற்று அதிகாலை முதலே வானத்தில் கருமேகங்கள் சூழ்ந்து, சென்னை மாநகரே இருண்டு கிடந்தது. காலை 7 மணி அளவில் லேசான தூரலாக மழை தொடங்கியது. பின்னர் படிப்படியாக பலத்த காற்றுடன் சாரல் மழை பெய்தது. சென்னை, புறநகரில் பரவலாகப் பெய்த மழையால், காலை நேரத்தில் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாயினர்.
விடிய விடிய மழை: நேற்று மாலைக்குப் பிறகு மழை சற்று ஓய்ந்திருந்த நிலையில், இரவுக்கு மேல் சென்னை மாநகரம் முழுவதும் இடியுடன் கூடிய கனமழை விடிய விடிய கொட்டித் தீர்த்தது. இதனால் சென்னையின் பல்வேறு பகுதிகளில் மரங்கள் சாய்ந்தன. ஈக்காட்டுத்தாங்கல் பகுதியில் உள்ள பிரதான சாலையில் 40 வருட பழமையான மரம் ஒன்று வேரோடு சாய்ந்ததில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. கிண்டி, வேளச்சேரி, வடபழனி உள்ளிட்ட பகுதிகள் சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளன. சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டிய விமானங்கள் கனமழை காரணமாக பெங்களூருவுக்கு திருப்பிவிடப்பட்டுள்ளன.
சென்னையில் அதிகபட்சமாக மீனம்பாக்கத்தில் 14 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதே போல திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, ஆகிய மாவட்டங்களில் இரவு முழுவதும் மழை பெய்துள்ளது.
பள்ளிகளுக்கு விடுமுறை: காலையிலும் மழை விடாமல் நீடிப்பதால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய 6 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (ஜூன் 19) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
13 மாவட்டங்களில் இன்று கனமழை: தமிழகத்தில் டெல்டா மாவட்டங்கள், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 13 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரை கண்ணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகம், புதுச்சேரியில் இன்று (ஜூன் 19) பெரும்பாலான இடங்களிலும், 20, 21, 22-ம் தேதிகளில் சில இடங்களிலும் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இன்று தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்கள் மற்றும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும்.
மன்னார்வளைகுடா, தென் தமிழக கடலோரப் பகுதிகள், அதை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் இன்று மணிக்கு 45-55 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 65 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும். அதேபோல, வடதமிழகம், தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகள், தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகள், இலங்கை கடலோரப் பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 40-45 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT