Published : 18 Oct 2017 07:53 AM
Last Updated : 18 Oct 2017 07:53 AM
கொரட்டூரில் ரயில்வே தண்டவாளத்தைக் கடக்க ரூ.20 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் சுரங்கப்பாதை கட்டுமானப் பணிகள் கடந்த 4 ஆண்டுகளாக ஆமை வேகத்தில் நடந்து வருவதால், இப்பகுதி மக்கள் அச்சத்துடன் தண்டவாளத்தைக் கடந்து செல்கின்றனர்.
ரூ.20 கோடி மதிப்பீட்டில்...
சென்னை - அரக்கோணம் ரயில் மார்க்கத்தில் கொரட்டூர் ரயில் நிலையம் உள்ளது. இந்த மார்க்கத்தில் உள்ள 4 ரயில் வழிப்பாதைகளில் இரண்டில் புறநகர் மின்சார ரயில்களும், மற்ற இருவழிகளில் எக்ஸ்பிரஸ் ரயில்களும் சென்று வருகின்றன. தினமும் 140-க்கும் மேற்பட்ட ரயில்கள் இவ்வழியே இயக்கப்படுகின்றன. இதன் வடக்குப் பகுதியி்ல் பாலாஜி நகர், சீனிவாசபுரம், வெங்கடேசநகர், லட்சுமி நகர் என 25-க்கும் மேற்பட்ட பகுதிகள் உள்ளன. இங்குள்ள ரயில்வே கேட் அடிக்கடி மூடப்பட்டதால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர். இதனால் கடந்த 2013-ல் இந்த ரயில்வே கேட் நிரந்தரமாக அகற்றப்பட்டு ரூ.20 கோடி செலவில் இப்பகுதியில் சுரங்கப்பாதை கட்டும் பணி தொடங்கியது.
தற்போது சுரங்கப்பாதையின் மையப்பகுதியை ரயில்வே துறை முடித்து விட்டது. ஆனால் இணைப்புச்சாலை அமைக்கும் பணியை மாநில நெடுஞ்சாலைத் துறை கடந்த 4 ஆண்டுகளாகக் கிடப்பில் போட்டுள்ளது. இத னால் பள்ளத்தில் மழைநீர் தேங்கி அப்பகுதியில் கொசுத் தொல்லை யும் அதிகரித்து வருகிறது.
அவசர காலங்களில் அவதி
இதுதொடர்பாக கொரட்டூர் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீவித்யா ‘தி இந்து’விடம் கூறுகையில், ‘‘ஆமை வேகத்தில் நகர்ந்து வரும் சுரங்கப் பணியால் 100 மீ்ட்டர் தூரத்தை 5 கி.மீ. தூரம் சுற்றிச் செல்ல வேண்டியுள்ளது. ரயில் வருவது தெரியாமல் தண்டவாளத்தைக் கடப்பவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. இதனால் அச்சத்துடனேயே தண்டவாளத்தைக் கடக்கிறோம். ஆம்புலன்ஸ், தீயணைப்பு வண்டி கூட அவசர நேரங்களில் இப்பகுதிக்கு வரமுடியாது. இதனால் மாணவர்கள், பெண்கள், முதியவர்கள் என அனைத்து தரப்பினரும் அவதிப்படுகின்றனர்’’ என்றார்.
இதுகுறித்து ரயில்வே கட்டுமானப் பிரிவு அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘எங்களது பணியை நாங்கள் முடித்து விட்டோம். இனி அடுத்தகட்டமாக மாநில நெடுஞ்சாலைத் துறைதான் சாலை அமைக்கும் பணியைத் தொடங்க வேண்டும். இணைப்புச் சாலையை விரைவாக அமைக்கும்படி மாநில நெடுஞ்சாலைத் துறையினரிடம் நாங்களும் வலியுறுத்தியுள்ளோம்’’ என்றனர்.
நிலம் கையகப்படுத்துவதில்...
மாநில நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘சாலை அமைக்க நிலம் கையகப்படுத்துவதில் சில சட்டச் சிக்கல்கள் உள்ளன. அவற்றைக் களைந்து விரைவில் சாலை அமைக்கப்படும்’’ என்றனர்.
இந்த சுரங்கப்பாதை பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வரவேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கை யாக உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT