Published : 02 Oct 2017 07:31 AM
Last Updated : 02 Oct 2017 07:31 AM
சென்னை மாநகராட்சியில் குப்பைகளை, மக்கும் குப்பை, மக்கா குப்பை என 100 சதவீதம் வகை பிரித்து பெறும் திட்டத்தை, ஆர்வம் இன்றி, கடமைக்காக செயல்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
குப்பைகளை கையாள்வது உள்ளாட்சி அமைப்புகளுக்கு பெரும் சவாலாக உள்ளது. போதிய இடம் கிடைக்காமல், மக்கள் வசிப்பிடம், நீர்நிலைகளில் குப்பைகளை கொட்டி உள்ளாட்சி அமைப்புகள் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்தி வருகின்றன. அது தொடர்பான வழக்குகளும் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் அதிகரித்து வருகின்றன. இதற்கு தீர்வு காண, மத்திய அரசு கடந்த 2014-ல் தூய்மை இந்தியா இயக்கத்தை தொடங்கி குப்பை மேலாண்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.
அதன்படி, குப்பை உருவாகும் இடத்திலேயே வகை பிரித்து பெறுவது, உகந்த குப்பையை மறு சுழற்சி செய்வது, உணவு கழிவிலிருந்து சமையல் காஸ் மற்றும் இயற்கை உரம் தயாரிப்பது என பல்வேறு பணிகளை மேற்கொள்ளுமாறு உள்ளாட்சி அமைப்புகளை மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது. இவ்வாறு செய்வதன் மூலம் குப்பை கொட்டும் வளாகங்களுக்கு வரும் குப்பை வெகுவாக குறைந்துவிடும். அதற்காக கடந்த 2016-ல் திடக்கழிவு மேலாண்மை விதிகளும் உருவாக்கப்பட்டுள்ளன.
426 சதுர கிலோமீட்டர்
சென்னை மாநகராட்சி 426 சதுர கிலோமீட்டர் பரப்பளவுக்கு விரிவடைந்துள்ளது. அதற்கு ஏற்ற வாறு உருவாகும் குப்பையின் அளவும் அதிகரித்துள்ளது. தற்போது தினமும் 5,500 டன் குப்பை உற்பத்தியாகிறது. இதை சேகரித்து, குப்பை கொட்டும் வளாகங்களுக்கு கொண்டு செல்வது வரை தினமும் ரூ.1 கோடி செலவிடப்படுகிறது.
மத்திய அரசு தொடர்ந்து, அறிவுறுத்தி வருவதால், சென்னை மாநகராட்சியில், மணலி மண்டலத்தில் உள்ள அதிகாரிகளின் ஆர்வம் காரணமாக, கடந்த 2 ஆண்டுகளில் 100 சதவீதம் குப்பை வகை பிரித்து பெறப்படுவது உறுதி செய்யப்பட் டுள்ளது.
இந்நிலையில், அக்டோபர் 2-ம் தேதி முதல், மாநகராட்சி முழுவதும் 100 சதவீதம் குப்பைகளை வகை பிரித்து பெறும் இலக்கை எட்டும் விதமாக பொதுமக்கள் அனைவரும் குப்பைகளை வகை பிரித்து வழங்க வேண்டும் என்று மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த அனுப்பப்படும் துப்புரவு பணியாளர்கள், அப்பணியை ஈடுபாட்டுடன் செய்வ தில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
துண்டு பிரசுரம் பற்றாக்குறை
இதுதொடர்பாக மாநகராட்சியின் 36-வது வார்டைச் சேர்ந்த பொதுமக்கள் கூறும்போது, ஒரு கட்டிடத்தில் 5-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. விழிப்புணர்வு பணியாளர்கள், ஒரு துண்டு பிரசுரத்தை ஒருவரிடம் கொடுத்துவிட்டு, இனி குப்பைகளை வகை பிரித்து வழங்க வேண்டும் என்று அனைத்து குடும்பங்களுக்கும் கூறிவிடுமாறு வலியுறுத்துகின்றனர். ஒவ்வொரு குடும்பத்தையும் இவர்கள் சந்திப்பதில்லை. குடும்பத்துக்கு ஒரு துண்டு பிரசுரத்தை வழங்குமாறு கேட்டால், துண்டு பிரசுரம் பற்றாக்குறை என்கின்றனர். இந்த பணியாளர்கள், இப்பணியை ஈடுபாட்டுடன் செய்யவில்லை. மாநகராட்சியும் இதில் கவனம் செலுத்தவில்லை. மத்திய அரசின் நிர்பந்தத்தால், ஆர்வமும் ஈடுபாடும் இன்றி கடமைக்காகவே செயல்படுத்தவதாக தெரிகிறது என்றனர்.
விழிப்புணர்வு ஏற்படுத்துதல்
இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ஏற்கெனவே போதுமான துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டுள்ளன. துண்டு பிரசுரங்கள் தேவையெனில் கேட்டு பெறலாம் எனவும் துப்புரவு பணியாளர்கள், அதிகாரிகளுடன் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தவும் உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்படும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT