Published : 11 Oct 2017 08:32 PM
Last Updated : 11 Oct 2017 08:32 PM
கடைவீதி தெருக்களிலும், சாலையோரங்களிலும் சுற்றித்திரியும் கால்நடைகளை ஒவ்வொரு நகரங்களிலும் பார்த்திருக்கிறோம். அதனால் மக்களுக்கு ஏற்படும் துன்ப துயரங்களையும் கேள்விப்பட்டிருக்கிறோம். இதில் எல்லாம் விதிவிலக்காக தெருவோர கால்நடைகள் ஓய்வெடுக்கும் கண்காட்சி மையமாக காட்சியளித்துக் கொண்டிருக்கிறது மேட்டுப்பாளையம் பவானி பழைய பாலம்.
மலையரசியின் ராணி என வர்ணிக்கப்படும் ஊட்டிக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு நுழைவுவாயிலாக விளங்கும் நீலகிரி மலையடிவாரப்பகுதியாக விளங்குவது கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகரம். காரமடை, சிறுமுகை, மேட்டுப்பாளையம் என மூன்று வனச்சரகங்களுக்கு நடுவே அமைந்துள்ள இந்த நகரத்திற்கு நீலகிரிக்கு செல்லம் சுற்றுலா பயணிகள் வருகை மட்டுமல்ல, நீலகிரி மாவட்டத்தில் விளையும் பெரும்பான்மை காய்கறிகளும் இங்கேதான் வருகிறது. முட்டைக்கோஸ், நூல்கோஸ், கேரட், பீட்ரூட் உள்ளிட்ட காய்கறிகள் பல்லாயிரம் லாரிகளில் இங்கே கொண்டு வந்து இறக்கப்பட்டு, தரம் பிரித்து வியாபாரிகளுக்கு கொடுக்கப்படுகிறது.
பிறகே அவை தமிழகத்தின் சென்னை, மதுரை, திருச்சி உள்ளிட்ட நகரங்களுக்கு மட்டுமல்லாது கர்நாடகம், கேரளம், ஆந்திரா மாநிலங்களுக்கும் செல்கின்றன. இந்த காய்கறிகள் அனைத்தும் இங்குள்ள காந்தி மைதானம் அருகில் உள்ள கடைவீதிக்குத்தான் வருகின்றன. இங்குள்ள நூற்றுக்கணக்கான காய்கறி மண்டிகள் தரம்பிரிக்கப்படும் காய்கறிகளில் அழுகியவை டன் கணக்கில் வெளியே கொட்டப்படுகின்றன. இவை தவிர முட்டைக்கோஸ், காலிபிளவர் போன்றவற்றின் இலை பாகங்களும் டன் கணக்கில் கழிவுகளாக விடப்படுகின்றன.
இவற்றில் ஓரளவுக்கு உள்ள இலை தழைகளை மாடு, ஆடு வளர்ப்போர் விலைக்கு வாங்கி சென்று தன் கால்நடைகளுக்கு இடுகின்றனர். இவர்களும் வாங்காத காய்கறி கழிவுகளை தெருவில் சுற்றித்திரியும் ஆடு மாடுகள் சாப்பிடுகின்றன. இப்படித்திரியும் கால்நடைகள் எல்லாமே நன்றாக சாப்பிட்டு விட்டு அருகில் உள்ள பழைய பவானி பாலத்தில் மதிய வாக்கில் ஓய்வெடுக்கின்றன.
பெரும்பான்மை கால்நடைகள் இதையே தன் தொழுவமாக ஆக்கி தங்கியும் விடுகின்றன. தெருவில் சுற்றும் இந்த கால்நடைகளின் சொந்தக்காரர்கள் காலை மற்றும் மாலை நேரங்களில் இங்கேயே வந்து பால் கறந்து செல்வதும் உண்டு என்கிறார்கள் இப்பகுதி பொதுமக்கள். வெளிமாவட்டங்களிலிருந்தும், வெளிமாநிலங்களிலிருந்து மட்டுமல்லாது வெளிநாடுகளிலிருந்தும் வரும் சுற்றுலா பயணிகள் இந்த கண்கொள்ளாக்காட்சியை பார்த்து செல்வதுடன் வீடியோ, புகைப்படங்கள் எடுத்து செல்வதும் நடக்கிறது என்கின்றனர் அவர்கள்.
இதுகுறித்து மேட்டுப்பாளையத்தை சேர்ந்த வெள்ளியங்கிரி கூறுகையில், ''இந்த பவானி ஆற்றுப் பாலம் கோத்தகிரி, ஊட்டி சாலை பிரியும் இடத்தில் அமைந்துள்ளது. இந்த மாடுகள் தங்கும் பாலம் மிகவும் குறுகிய பாலம். நீண்டகாலமாக வாகனங்கள் ஓடி பழுதடைந்து நடுமையத்தில் வெடிப்பும் ஏற்பட்டு விட்டது. தவிர இந்த பாலத்தில் வாகனப் போக்குவரத்து நடந்து வந்தபோது வாகனங்கள் கடும் நெரிசலில் சிக்கி நகரும் நிலையும் இருந்தது. அதையடுத்தே பக்கத்தில் புதிய பாலத்தை கட்டியது அரசு. அந்தப் பாலம் புழக்கத்திற்கு வந்த பிறகு பழையபாலத்தை அகற்றாமல் அப்படியே விட்டுவிட்டது. நாளடைவில் பக்கத்தில் உள்ள காய்கறி கழிவுகள் கொண்டு வந்து இடமாக இது மாற்றப்பட்டுவிட்டது.
அதை சாப்பிட வரும் தெருவோரக் கால்நடைகள் இங்கே தங்குவதும் வழக்கமாக மாறி விட்டது. இதற்கிடையே காந்தி மைதானத்தில் இருந்த கோஸ் மண்டி அன்னூர் சாலைக்கு சென்றுவிட்டது. அப்பவும் உருளைக்கிழங்கு உள்ளிட்ட மற்ற காய்கறி மண்டிகள் இங்கேதான் இருக்கிறது. அதனால் தெருவோரக் கால்நடைகள் அங்கும் இங்குமாக மாறி மாறி திரிகின்றன. ஓய்வெடுக்கும் நேரத்தில் பவ்யமாக அசைபோட்டு நிற்கும் இந்த மாடுகள் எல்லாம் பசித்த நேரத்தில் சாலைகளிலும், மண்டிகளிலும் மட்டுமல்ல பேருந்து நிலையத்திலும் ஏராளமாக சுற்றித்திரிகின்றன. இதனால் விபத்துகளும், வாகன நெருக்கடிகளும் ஏற்படுகிறது. அதை ஒழுங்கு செய்யாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் நகராட்சி அதிகாரிகள்!'' என தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT