Published : 18 Jun 2023 02:41 PM
Last Updated : 18 Jun 2023 02:41 PM
ஈரோடு: அந்தியூர் - பர்கூர் சாலையில் கனரக வாகனப் போக்குவரத்து மற்றும் சாலை விரிவாக்கம் காரணமாக பருவமழைக் காலங்களில் மண் சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளதாக மலைக் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் இருந்து பண்ணாரி - திம்பம் வழியாகவும், அந்தியூர் - பர்கூர் வழியாகவும் கர்நாடகாவைச் சென்றடைய சாலைகள் உள்ளன. இதில், அந்தியூரில் இருந்து பர்கூர் மலைப்பாதை வழியாக கர்நாடக மாநில எல்லையான கர்கேகண்டி சென்று, கொள்ளேகால், மைசூரு சென்றடையலாம்.
அந்தியூரில் வனப்பகுதி தொடங்கும் வறட்டுப்பள்ளத்தில் தொடங்கி, தமிழக எல்லையான கர்கேகண்டி வரையிலான 42 கிமீ தூர சாலை, ரூ.80 கோடி மதிப்பீட்டில், இரு ஆண்டுகளுக்கு முன்பு அகலப்படுத்தப்பட்டது. இந்த சாலை விரிவாக்கம் வாகன ஓட்டிகளுக்கு பலன் அளிப்பதற்கு பதிலாக, பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து பர்கூர் சுற்றுவட்டார மலைக்கிராம மக்கள் கூறியதாவது: அந்தியூர் - பர்கூர் சாலை அகலப்படுத்தப்பட்டதன் விளைவாக அதிக பாரம் ஏற்றிய கனரக வாகனப் போக்குவரத்து அதிகரித்து, பர்கூர் மலையின் இயற்கைச் சூழல் பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும், சாலை விரிவாக்கத்தின்போது மரங்கள் வெட்டப்பட்டதோடு, இயந்திரங்களின் பயன்பாடு, பாறைகள் வெடி வைத்து தகர்க்கப்பட்டது போன்ற காரணங்களால், மண்ணின் தன்மையில் மாற்றம் ஏற்பட்டு, பாறைகள், மண்சரிவு ஏற்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. கடந்த 2021-ம் ஆண்டு பெய்த மழையின்போது, ஒரே மாதத்தில் அடுத்தடுத்து 6 முறை மண்சரிவும், சாலைகளில் பிளவும் ஏற்பட்டது.
இதனால், பர்கூர் ஊராட்சியைச் சுற்றியுள்ள 32 மலைக்கிராம மக்கள் போக்குவரத்து வசதியின்றி துண்டிக்கப்படும் நிலை ஏற்பட்டது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி திம்பம் சாலையில் இரவு நேர போக்குவரத்துக்கு அனுமதி இல்லை என்பதாலும், போக்குவரத்து நெரிசல் குறைவு என்பதாலும், கர்நாடகா செல்வதற்கு, அந்தியூர் - பர்கூர் சாலையில் அதிக எண்ணிக்கையிலான கனரக வாகனங்கள் பயணிக்கின்றன. 24 மணி நேரமும் போக்குவரத்து தொடர்வதால், சாலையின் தாங்கும் திறன் பாதிப்படைந்து, சாலை வலுவிழந்து காணப்படுகிறது.
இது குறித்து தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்க மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் வி.பி.குணசேகரன் கூறியதாவது: பர்கூர் மலைச் சாலையின் தன்மை குறித்து முறையாக திட்டமிடாததாலும், தொழில்நுட்ப குறைபாடுகளாலும், மண் சரிவுகள் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. மழைநீர் வழிந்தோட போதுமான வடிகால்களை அமைக்காததால், மழை வெள்ளம் சாலையை மூழ்கடித்து ஓடி, பல இடங்களில் சாலையை அரித்துச் செல்கிறது.
இந்த சாலை விரிவாக்கத்துக்கு முன்பாக பர்கூர் மலைக்கிராம மக்களின் வாகனங்கள் உள்ளிட்ட மிகக் குறைந்த வாகனப் போக்குவரத்தே இருந்தது. ஆனால் தற்போது, 22 சக்கரங்களுடன் கூடிய கனரக வாகனங்கள் இந்த சாலையை பயன்படுத்தி கர்நாடகா சென்று வருகின்றன. கல்குவாரிகளில் இருந்து கல், சிமென்ட், கம்பிகள், கோழித்தீவனம், சர்க்கரை, மரங்கள் என அதிக பாரம் ஏற்றிய வாகனங்கள் இந்த சாலையில் பயணிப்பதால், மண்ணின் தன்மை பாதிக்கப்பட்டுள்ளது.
தற்போது பருவமழை தொடங்கவுள்ளதால், அந்தியூர் - பர்கூர் சாலையில் மண் சரிவு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. மண் சரிவு, பாறைகள் உருண்டு சாலையில் விழுதல் போன்ற விபத்து அபாயங்கள் உள்ளன. எனவே, வனத்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை இணைந்து மண்சரிவுக்கான வாய்ப்புகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.
முதல்கட்டமாக, அந்தியூர் மற்றும் கர்கேகண்டி பகுதியில் சோதனைச் சாவடிகள் அமைத்து, அதிக எடை கொண்ட பாரம் ஏற்றிய வாகனங்கள், நீளமான கனரக வாகனங்களை இந்த சாலையில் இயக்க தடை விதிக்க வேண்டும். சாலையை முறையாக பராமரித்து, மழைநீர் சாலைகளில் ஓடாமல் இருக்க வடிகால் வசதிகளை சீர் செய்ய வேண்டும், என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT