Published : 18 Jun 2023 04:02 AM
Last Updated : 18 Jun 2023 04:02 AM
சென்னை: சென்னை நந்தம்பாக்கத்தில் ரூ.116 கோடியில் நிதிநுட்ப நகரம், ரூ.254 கோடியில் நிதிநுட்ப கோபுரம் என்ற அடுக்குமாடிக் கட்டிடம் கட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று அடிக்கல் நாட்டினார்.
தமிழக அரசின் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தால் நந்தம்பாக்கத்தில் ரூ.116 கோடியில், 56 ஏக்கர் பரப்பில் நிதிநுட்ப நகரம், ரூ.254 கோடியில் 5.6 லட்சம் சதுரஅடி பரப்பில் சர்வதேச தரத்திலான நிதிநுட்பக் கோபுரம் என்ற அடுக்குமாடிக் கட்டிடம் கட்டப் படுகிறது.
இதையொட்டி, நந்தம்பாக்கத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், புதிய கட்டிடங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். இதில், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, தா.மோ.அன்பரசன், செஞ்சி கே.எஸ்.மஸ்தான், டி.ஆர்.பி.ராஜா, சட்டப்பேரவை உறுப்பினர் இ.கருணாநிதி, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறைச் செயலர் ச.கிருஷ்ணன், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவன மேலாண் இயக்குநர் ஜெயஸ்ரீ முரளிதரன், செயல் இயக்குநர் வி.ஜெயச்சந்திர பானு ரெட்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: தொழில் துறையில் தமிழகம் பல்வேறு சாதனைகளைப் புரிந்து வருகிறது. மின்னணு மயமாக்கப்பட்ட நிதிச் சேவைகள் அனைத்தும் ஏழை மக்களைச் சென்றடையவேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது.
கரோனா காலத்தில் அதிகரிக்கத் தொடங்கிய மின்னணு வங்கிச் சேவைகளின் பயன்பாடு, தற்போது பன்மடங்கு அதிகரித்துள்ளது. தற்போதைய சூழலில், ஏடிஎம்-ல் பணம் எடுப்பதைவிட, செல்போன் மூலமாக நடைபெறும் பரிவர்த்தனைகள் அதிகமாகும். பெரும்பாலான வங்கிகள் முழு டிஜிட்டல் மயமாகிவிட்டன. இதை அடிப்படையாகக் கொண்டுதான், நமது எதிர்காலத் திட்டமிடுதல்கள் இருக்க வேண்டும்.
தற்போது தகவல் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவைகள், மின்னணுவியல், புத்தாக்கம் மற்றும் புத்தொழில் நிறுவனங்கள் தமிழகத்தில் பெரும் வளர்ச்சி பெற்றுள்ளன. பாரம்பரியமாக செயல்பட்டு வரும் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனச் சேவைகளை, நவீனத் தொழில்நுட்பத்துடன் ஒருங்கிணைக்கும் நிதிநுட்பத் துறையும் தமிழகத்தில் வளர்ச்சியடைந்து வருகிறது.
தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஏற்ப, நமது இளைஞர்களின் திறன்களை வளர்த்து, மாநிலத்தை முன்னேற்றுவதில் நாங்கள் கவனமாக இருக்கிறோம். அதன் ஒரு பகுதியாகத்தான் ‘நான் முதல்வன்’ திட்டம் மூலம் இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. மேலும், நிதிநுட்பத் துறையில் அதிக முதலீடுகளை ஈர்க்கவும் முயற்சி மேற்கொண்டு வருகிறோம்.
2025-ம் ஆண்டுக்குள் தமிழகத்தை நிதிநுட்ப நிறுவனங்களின் உலகளா விய மையமாக மாற்றக்கூடிய வகையில் `தமிழ்நாடு நிதிநுட்பக் கொள்கை' என்ற சிறப்புக் கொள்கையை வெளியிட்டேன். ரூ.50 கோடிக்கு மேல் முதலீடு மேற்கொள்ளும் நிதிநுட்ப நிறுவனங்களுக்கு பல்வேறு சலுகைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
தொழில் துறை வழிகாட்டி நிறு வனத்தில், தனி நிதிநுட்பப் பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. தொழில் துறை அமைச்சர் தலைமையில் நிதிநுட்ப ஆட்சிமன்றக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த வரிசையில், சென்னையில் நிதிநுட்ப நகரம் மூலம் ரூ.12 ஆயிரம் கோடி முதலீடுகளை ஈர்த்து, 80 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பும், நிதிநுட்ப கோபுரம் மூலம் ரூ.1,000 கோடிக்கும் மேலாக முதலீடுகள் ஈர்க்கப்பட்டு, 7 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்புகளும் உருவாக் கப்படும்.
அடுத்த தலைமுறைத் தொழில்நுட்பநிதிச் சேவைகள் மற்றும் அவை தொடர்பான செயல்பாடுகளின் மையமாக இந்த நிதிநுட்ப நகரம் செயல்படும். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT