Published : 23 Oct 2017 12:27 PM
Last Updated : 23 Oct 2017 12:27 PM
பழைய இரும்புப் பொருட்களைக் கொண்டு உருவாக்கப்பட்டு, தூத்துக்குடி ரோச் பூங்காவில் நிறுவப்பட்டுள்ள கடல்வாழ் உயிரினச் சிற்பங்கள் பார்வையாளர்களைப் பெரிதும் கவர்கின்றன.
தூத்துக்குடி தெற்குக் கடற்கரைச் சாலையில் கடற்கரையோரம் அமைந்துள்ளது ரோச் பூங்கா. தூத்துக்குடி மாநகர மக்களின் முக்கிய பொழுதுபோக்கு இடங்களில் ஒன்றாகத் திகழும் இப்பூங்கா, அண்மைக் காலமாக பொலிவிழந்து காணப்பட்டது. பூங்காவில் இருந்த விளையாட்டு உபகரணங்கள் உடைந்த நிலையில் காணப்பட்டதாலும், எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாததாலும் பொதுமக்கள் இங்கு செல்லத் தயங்கினர்.
ஆனால், கடந்த சில வாரங்களாக ரோச் பூங்காவுக்கு செல்வோரை, அங்கு உருவாக்கப்பட்டு வரும் கலைநயம் மிக்க சிற்பங்கள் வரவேற்கின்றன. இதனால் தற்போது இங்கு வரும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
கடல்வாழ் உயிரினங்கள்
பூங்காவில் ஆங்காங்கே காணப்படும் மீன், சுறா, கடல் குதிரை, கடல் கன்னி, டைனோசர், டால்பின் ஆகியவற்றின் தத்ரூபமானச் சிற்பங்கள் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்கின்றன. இச்சிற்பங்களை உருவாக்கும் பணி இன்னும் முடிவடையவில்லை. இருந்த போதும் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. காரணம்,இவை அனைத்தும் பழைய இரும்புப் பொருட்களைக் கொண்டு உருவாக்கப்பட்டவை. தினமும் ஏராளமானோர் இங்கு வந்து சிற்பங்களை பார்த்து ரசிப்பதுடன் அவற்றின் அருகில் நின்று 'செல்பி' எடுத்துக் கொள்கின்றனர்.
15 சிற்பங்கள்
இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் ஆல்பி ஜான் வர்கீஸ் கூறும்போது,
‘‘ரோச் பூங்காவில் பழைய இரும்புப் பொருட்களைக் கொண்டு சுறா மீன், நீலத் திமிங்கலம், கடல் குதிரை, நண்டு, டால்பின், கடல் ஆமை, முதலை, ஆக்டோபஸ், கடல் கன்னி, படகோட்டி, தூத்துக்குடி மாவட்டத்தின் இலச்சினையான சிப்பிக்குள் முத்து ஆகிய 15 சிற்பங்கள் அமைக்கப்படுகின்றன. ஆந்திராவைச் சேர்ந்த கலைஞர்கள் இப்பணியைச் செய்து வருகின்றனர். இப்பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளன.
கடந்த 15 நாட்களுக்கு முன் ரோச் பூங்காவில் பழைய இரும்புப் பொருட்களில் இருந்து சிற்பங்களை உருவாக்குவது தொடர்பான தேசியப் பயிற்சிப் பட்டறை நடத்தப்பட்டது. அப்போது தான் இந்தப் பணி ஆந்திராவைச் சேர்ந்த குழுவினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
தூத்துக்குடி மாநகர மக்கள் முழுமையாக பொழுதுபோக்கும் வகையில் ரோச் பூங்கா முற்றிலும் சீரமைக்கப்படவுள்ளது. ப் பணிகள் அனைத்தும் 6 மாதங்களில் முடிவடையும்.
மேலும், தூத்துக்குடி மாநகராட்சியை அழகுபடுத்தும் நடவடிக்கையாக நகரில் உள்ள அரசு கட்டிடச் சுவர்களில் இம்மாவட்டத்தின் வரலாறு, இயற்கை வளத்தை மையப்படுத்தி வண்ண ஓவியங்கள் வரையப்பட்டு வருகின்றன. இதன் மூலம் தேவையற்ற சுவரொட்டிகள் ஒட்டுவது தடுக்கப்பட்டுள்ளது’’ என்றார் அவர்.
13 டன் பொருட்கள்
சிற்பங்களை உருவாக்கும் குழுவின் ஒருங்கிணைப்பாளரான ஆந்திர மாநிலம், விஜயவாடாவை சேர்ந்த ஸ்ரீனிவாஸ் பதகண்ட்லா கூறும்போது, ‘‘இந்த சிற்பங்கள் இரும்பு சங்கிலிகள், பேரிங்குகள், சக்கரங்கள், ஷாக் அப்சர்வர்கள், டீசல், பெட்ரோல் டேங்குகள், கிளட்ச் பிளேட், ஸ்பிரிங்குகள் உள்ளிட்ட பழைய இரும்பு பொருட்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளன.
ஹைதராபாத், விசாகப்பட்டினம், விஜயவாடா, பரோடா மற்றும் சென்னையை சேர்ந்த கலைஞர்கள் இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த சிற்பங்களை உருவாக்க மொத்தம் 13 டன் பழைய இரும்பு பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் மதுரையில் இருந்து பழைய இரும்பு பொருட்களை வாங்கி வந்தோம். ஒரு டன் பழைய இரும்பு பொருட்களின் விலை சுமார் ரூ.33 ஆயிரம் ஆகும். இந்த சிற்பங்களுக்கு இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட வண்ணம் பூச முடிவு செய்துள்ளோம் என்றார் அவர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT