Last Updated : 22 Oct, 2017 11:11 AM

 

Published : 22 Oct 2017 11:11 AM
Last Updated : 22 Oct 2017 11:11 AM

சட்டவிரோத கழிவுநீர் இணைப்பால் கொசு உற்பத்தி பண்ணையாக மாறிய சென்னை மழைநீர் வடிகால் கால்வாய்

ஆயிரக்கணக்கான சட்டவிரோத கழிவுநீர் இணைப்பால் ஆண்டு முழுவதும் தண்ணீர் தேங்கி நிரந்தர கொசு உற்பத்தி பண்ணையாகிவிட்டன மழைநீர் வடிகால் கால்வாய்கள்.

1,894 கிலோ மீட்டர் நீளம்

சென்னையில் 1,894 கிலோ மீட்டர் நீளத்துக்கு மழைநீர் வடிகால்கள் உள்ளன. மேலும் பல பகுதிகளில் மழைநீர் வடிகால் கால்வாய் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மழை நீர் தங்குதடையின்றி கடலுக்குச் செல்வதற்காக கூவம், அடையாறு, பக்கிங்காம் கால்வாய், ஓட்டேரி நல்லா, கொடுங்கையூர் கால்வாய், கேப்டன் காட்டன் கால்வாய், விருகம்பாக்கம் கால்வாய் போன்ற பெரிய மற்றும் சிறிய நீர்வழித்தடங்களுடன் மழைநீர் வடிகால் கால்வாய்கள் இணைக்கப்பட்டுள் ளன.

மழைக் காலங்களில் வெள்ளம் ஏற்படுவதைத் தடுப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள மழைநீர் வடிகால் கால்வாய்களில் மழைக் காலங்களில் மட்டும் தண்ணீர் செல்ல வேண்டும். மற்ற காலங்களில் இந்த கால்வாய்கள் வறண்டுதான் இருக்க வேண்டும். ஆனால், சென்னையில் உள்ள சுமார் 60 சதவீதம் மழைநீர் வடிகால் கால்வாய்களில் கழிவுநீர் தேங்கியிருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. மாநகரில் அதிக கொசு உற்பத்தியாவதற்கு இதுவும் முக்கியக் காரணம்.

சட்டவிரோத இணைப்புகள்

தேநீர் கடைகள், சிறிய, பெரிய ஓட்டல்கள், சாதாரண கட்டிடம், குடியிருப்புகள், வணிக கட்டிடங்கள் ஆகியவற்றின் கழிவுநீர் மழைநீர் வடிகால் கால்வாய்களில் செல்லும் வகையில் சட்டவிரோதமாக குழாய்கள் இணைக்கப்பட்டிருப்பதால்தான் இந்த அவல நிலை. இதுபோன்ற சட்டவிரோத கழிவுநீர் இணைப்புகள் லட்சக்கணக்கில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

சட்டவிரோத இணைப்புகளை முழுமையாக அடைக்காததால் மழைநீர் மட்டுமே செல்ல வேண்டிய மழைநீர் வடிகால் கால்வாய்களில் ஆண்டு முழுவதும் கழிவுநீர் ஓடிக்கொண்டிருக்கிறது.

அதனால் மழைநீர் வடிகால் கால்வாய்கள் நிரந்தர கொசு உற்பத்தி பண்ணைகளாகிவிட்டன. இந்தக் கால்வாய்களை சென்னை மாநகராட்சி முறை யாக தூர்வாரி பராமரிப்பதில்லை என்று பொதுமக்களும் குற்றம்சாட்டுகின்றனர்.

“மழைநீர் கால்வாயில் ஒரு மேன்ஹோலுக்கும் (ஆள்நுழைவுப் பகுதி) மற்றொரு மேன்ஹோலுக்கும் இடையே 10 முதல் 15 அடி இடைவெளி இருக்கிறது. ஒரு மேன்ஹோல் வழியாக இறங்கி கை எவ்வளவு தூரம் போகுமோ அந்த அளவு மட்டும் தூர்வாருகின்றனர். மறுமுனையிலும் இதேநிலைதான். இதனால் மேன்ஹோல்களுக்கு இடையே தேங்கியிருக்கும் மண் முழுமையாக அள்ளப்படாததால் கழிவுநீர் தேங்குகிறது” என்கின் றனர்.

நவீன இயந்திரங்கள்

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறும்போது, “டெங்கு காய்ச்சல் தீவிரமடைந்துள்ளதாலும், வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்க இருப்பதாலும் மழைநீர் வடிகால் கால்வாய்களை வரும் 31-ம் தேதிக்குள் தூர்வாருவதற்கு சுமார் ரூ.10 கோடிக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. மழைநீர் வடிகால் கால்வாயை முழுமையாக தூர்வாருவதற்கு நவீன இயந்திரங்கள் வாங்க உள்ளோம்.

மேலும் சட்டவிரோத கழிவுநீர் இணைப்புக்கான அபராதத் தொகையை கணிசமாக அதிகரிக்க அரசிடம் அனுமதி கேட்டுள்ளோம். நவீன இயந்திரங்கள் வாங்கிய பிறகும் சட்டவிரோத இணைப்புக்கு அதிக அபராதத் தொகை விதித்த பிறகும்தான் மழைநீர் வடிகால் கால்வாய்களில் கழிவுநீர் தேங்குவதை முற்றிலுமாகத் தடுக்க முடியும்” என்றார்.

“இந்த 2 பணிகளும் இப்போதைக்கு முடிவதாகத் தெரியவில்லை. எனவே, வடகிழக்கு பருவமழையின்போது வெள்ள நீரைத் தடுப்பதும், உடனடியாக கொசு உற்பத்தியைக் கட்டுப்படுத்துவதும் சாத்தியம் இல்லை என்கின்றனர் விவரம் தெரிந்தவர்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x