Published : 21 Oct 2017 10:21 AM
Last Updated : 21 Oct 2017 10:21 AM
மது அருந்துபவர்கள் பிளாஸ்டிக் டம்ளர், குடிநீர் பாக்கெட் போன்றவற்றை தெருவில் வீசுவதாலும், சுற்றுப்புறத்தை திறந்தவெளி கழிப்பிடமாக மாற்றுவதாலும் சுற்றுச்சூழலும், சுகாதாரமும் பெரிதும் பாதிக்கப்படுகின்றன. ஸ்மார்ட் சிட்டி திட்டங்களுக்கு இது பெரும் சவாலாக உள்ளது.
நாட்டின் மொத்த மக்கள்தொகையில் 50 சதவீதம் பேர் நகர்ப் புறங்களில் வசிக்கின்றனர். இதனால், நகர்ப்புறங்களை மேம் படுத்தும் நோக்கில், ஸ்மார்ட் நகரங்களாக மாற்றுவதற்காக 98 மாநகரங்களை மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் துறை தேர்வு செய்துள்ளது. தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 12 மாநகரங்கள் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
ஸ்மார்ட் சிட்டி திட்டங் களுக்காக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாநகராட்சிகளுக்கு மத்திய, மாநில அரசுகள் இணைந்து ரூ.1,212 கோடி ஒதுக்கியுள்ளன. அதைத் தொடர்ந்து, சென்னை ஸ்மார்ட் சிட்டி நிறுவனம் தொடங்கப்பட்டு, அதன் மூலமாக தி.நகர் பகுதியில் மேற்கொள்ளப்பட உள்ள சில திட்டங்களுக்கு ரூ.72 கோடியில் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு, விரைவில் பணிகள் தொடங்கப்பட உள்ளன.
இதுபோன்ற திட்டங்களுக்கு தமிழகத்தில் பெரும் சவாலாக இருப்பது டாஸ்மாக் கடைகளும், அதன் வாடிக்கையாளர்களும்தான்.
நகர்ப் பகுதிகளில் இயங்கும் டாஸ்மாக் கடைகளில், மதுவை வாங்குபவர்கள், அதே பகுதியில் அமர்ந்து மது அருந்துகின்றனர். தாங்கள் பயன்படுத்தும் பிளாஸ்டிக் டம்ளர், குடிநீர் பாக்கெட், தின்பண்டங்களின் பிளாஸ்டிக் உறைகள் ஆகியவற்றை அங்கேயே வீசுகின்றனர். மாநகராட்சி துப்புரவு தொழிலாளர்களோ, அவற்றை முறைப்படி அப்புறப்படுத்தாமல், அங்கேயே தீயிட்டு கொளுத்தி சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்துகின்றனர்.
சுற்றுச்சூழல் சீர்கேடு ஒரு பக்கம் என்றால், சுகாதாரச் சீர்கேடு இன்னொரு பக்கம். மதுக்கடையின் சுற்றுப்புற பகுதிகள் அனைத்தும் திறந்தவெளி சிறுநீர் கழிப்பிடங்களாக மாறிப்போயிருக்கின்றன. இதனால் டாஸ்மாக் இருக்கும் பகுதிகள் அனைத்தும் சுகாதார சீர்கேட்டுக்கு உள்ளாகியுள்ளன. இதுபற்றி துறை சார்ந்தவர்கள், ஆர்வலர்கள் கூறிய தாவது:
தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கத் தலைவர் பொ.செல்லபாண்டியன்: தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வு சட்ட விதிகளின்படியே மதுக்கூடங்கள் செயல்பட வேண்டும். மதுக்கூடங்களில் சிலர் தன்னிலை மறந்து எச்சில் துப்புவது, வாந்தி எடுப்பது போன்றவை தவிர்க்க முடியாதது. அதை துப்புரவுப் பணியாளர்களைக் கொண்டு உடனுக்குடன் அகற்ற வேண்டும். அங்கு உருவாகும் உணவுக் குப்பைகளையும் அகற்ற வேண்டும். போதிய கழிவறை வசதிகளை ஏற்படுத்தி, முறையாக பராமரிக்க வேண்டும். இந்த விதிகள் பின்பற்றப்படுவதில்லை. அங்கு உணவுப் பொருட்கள் அதிக விலைக்கு விற்கப்படுகின்றன. அவை சுகாதாரமாகவும் இருப்பதில்லை. இதனாலேயே, பலரும் பொது இடங்களில் மது அருந்துகின்றனர். இதனால் சூழல் கேடு, சுகாதாரக் கேடு ஏற்படுகிறது. மதுக்கடைகளால் ஆண்டுக்கு ரூ.26 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கிறது. மது பாட்டில் உடைந்தால், காப்பீடு உள்ளது. இவ்வளவு வருவாய் ஈட்டித் தரும் மது நுகர்வோருக்கு எந்த காப்பீடும் இல்லை.
தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்க (ஏஐடியுசி) தலை வர் டி.தனசேகர்: அனைத்து மதுக்கூடங்களும் அரசியல்வாதிகள், குண்டர்களிடம் உள்ளன. அதனால் அதிகாரிகள் கண்டுகொள்வது இல்லை. நடவடிக்கை எடுப்பதில்லை. மதுக்கடைகள், மதுக்கூடங்களில் போதிய காற்றோட்ட வசதி இல்லை. எந்த மதுக்கடையிலும் கழிவறை வசதி இல்லை. எனவே, இதுதொடர்பாக நீதிபதி தலைமையில் குழு அமைத்து, ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
மதுக்கடைகளுக்கு தொழில் உரிமத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதால், மாநகராட்சி, நகராட்சிகளுக்கு டாஸ் மாக் கடைகளால் எந்த வகையி லும் வருவாய் கிடைப்பதில்லை. அதனால், மது குடிப்போரால் ஏற்படும் பாதிப்புகளை மாநகராட்சி நிர்வாகங்கள் சரி செய்வதில்லை.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், நகரங்களை பொலிவுறு நகரங்களாக மாற்ற நடவடிக்கை எடுத்துவரும் நிலையில், அதைக் கெடுக்கும் விதமாக மது குடிப்போர் செயல்படுவது, ஸ்மார்ட் சிட்டி திட்டங்களுக்கு பெரும் சவாலாக உள்ளது.
இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, மதுக்கடைகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த கோணத்தில் நாங்கள் யோசிக்கவில்லை. அதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். இதுபற்றி டாஸ்மாக் அதிகாரி களிடம் கேட்டபோது, பதில் அளிக்க மறுத்துவிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT