Last Updated : 11 Oct, 2017 06:22 AM

 

Published : 11 Oct 2017 06:22 AM
Last Updated : 11 Oct 2017 06:22 AM

டெங்கு தீவிரமாக பரவிவரும் நிலையில் கொசுக்களை ஒழிக்க அரசு பூச்சியியல் வல்லுநர்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்படுமா?

தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 555 பேர் என மத்திய சுகாதாரத்துறைக்கு,கொசுக்களால் பரவும் மத்திய அரசின் நோய்க் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் தமிழக பொறுப்பு மருத்துவர் கல்பனா பரூவா தெரிவித்துள்ளார்.

மேலும், டெங்குவைக் கட்டுப்படுத்த மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் 13 ஆலோசனைகளையும் அறிக்கையாக அளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் டெங்கு, மலேரியா, யானைக்கால், சிக்குன்குனியா, மூளைக் காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு நோய்களை ஏற்படுத்தும் கொசுக்களை ஒழிக்க தீவிரம் காட்ட முன்வராதது ஏன் என பூச்சியியல் வல்லுநர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

இதுதொடர்பாக மாநில பூச்சியியல் வல்லுநர்களின் அசோஸியேசன் நிர்வாகி ஒருவர் கூறும்போது, ‘தற்போது மாவட்டம் முழுவதும் 155 பூச்சியியல் வல்லுநர்களே உள்ளனர். இவர்களை உள்ளடக்கி மாவட்டந்தோறும் தலா ஒரு முதுநிலை மற்றும் இளநிலை பூச்சியியல் வல்லுநர்கள் பணியாற்றுகின்றனர். இது தவிர்த்து 9 மண்டல பூச்சியியல் வல்லுநர் குழுவும் செயல்படுகிறது. இவர்கள் ஒவ்வொரு மாவட்டமாகச் சென்று, கொசுவின் அடர்த்தியைக் கண்டறிந்து, அதிக கொசு அடர்த்தி உள்ள பகுதிகளில் கொசு ஒழிப்புப் பணியில் ஈடுபடுவர். தமிழக அரசின் அனைத்துத் துறை பணியாளர்களைக் காட்டிலும், டெபுடேஷனில் அதிக நாட்கள் வெளியூர் செல்வது பூச்சியியல் வல்லுநர்களே.

தற்போதுள்ள சூழலில் பூச்சியியல் வல்லுநர்களின் தேவை அதிகரித்துள்ளது. மாவட்டத்துக்கு ஒருவர் என்ற நிலையை மாற்றி, வட்டத்துக்கு ஒரு இளநிலை பூச்சியியல் வல்லுநரை நியமிப்பதோடு, சுகாதாரத் துறையில் இருந்து இத்துறையை பிரித்து, தனித் துறையாக மாற்றினால்தான் டெங்கு உள்ளிட்ட கொசுவினால் ஏற்படும் அனைத்து நோய்களையும் கட்டுப்படுத்த முடியும். நாங்கள் கொடுக்கும் அறிக்கையை சுகாதாரத்துறையினர் முழுமையாக ஏற்பது கிடையாது. ஒவ்வொரு மாவட்டத்திலும் பூச்சியியல் வல்லுநர், அந்தந்த மாவட்ட ஆட்சியரிடம் அறிக்கை அளிக்கும் நிலையை ஏற்படுத்தப்பட வேண்டும்’ என்றார்.

இதுதொடர்பாக பொது சுகாதாரத்துறை இயக்குநர் டாக்டர் கே.குழந்தைசாமியிடம் கேட்டபோது, ‘பூச்சியியல் வல்லுநர்களின் நியமனத்தை அதிகரிக்க அரசு திட்டமிட்டுள்ளது. நகராட்சி அளவில் பூச்சியியல் வல்லுநர்களை நியமிக்கவும் ஆலோசித்து வருகிறோம். மேலும் ஓய்வுபெற்ற பூச்சியியல் வல்லுநர்கள், சுகாதாரத்துறை ஆய்வாளர்களை தற்போது களப்பணியில் ஈடுபடுத்தியுள்ளோம்’ என்றார்.

தற்போதுள்ள பிரச்சினையின் வீரியம் கருதி, கூடுதலாக பூச்சியல் வல்லுநர்களை நியமிப்பதும், அவர்களை முறையாக நிர்வகித்து கொசுக்கள் ஒழிப்பில் தீவிரம் காட்டுவதும், டெங்கு ஒழிப்பு நடவடிக்கையின் முக்கியப் பங்காக இருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x