Published : 05 Oct 2017 10:40 AM
Last Updated : 05 Oct 2017 10:40 AM
விடுமுறைக் காலங்களில் குமரி மாவட்டத்தில் ஆம்னி பேருந்துகளில் கட்டணம் அபரிமிதமாக உயர்த்தி வசூலிக்கப்படுகிறது. வரும் தீபாவளிக்கு ஆன்லைன் முன்பதிவுக்கு கட்டணம் வெளிப்படையாக உயர்த்தப்பட்டுள்ளது.
ஆயுதபூஜை விடுமுறைக்குப் பின் கடந்த 2-ம் தேதி மாலையில் நாகர்கோவிலில் இருந்து சென்னை புறப்பட்ட ஆம்னி பேருந்துகளில் ரூ. 3 ஆயிரம், ரூ. 3,500 என கட்டணம் உயர்த்தப்பட்டது. இதற்கு பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அன்று ஆம்னி பேருந்துகளை ஆய்வு செய்து, விதிமுறையை மீறிய பேருந்துகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. அபராதமும் விதிக்கப்பட்டது. ஆனால், அபராதம் விதித்து நோட்டீஸ் வழங்கிய பேருந்துகள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. அபராதம் விதிக்கப்பட்ட பேருந்துகளை பேச்சுவார்த்தை மூலம் அதிகாரிகள் விடுவித்துள்ளனர்.
இந்நிலையில், தீபாவளி பண்டிகைக்கான ஆன்லைனில் முன்பதிவுக் கட்டணம் வெளிப்படையாக ரூ. 3 ஆயிரம் வரை வசூலிக்கப்படுகிறது. எனினும், பயணிகள் போட்டிபோட்டு முன்பதிவு செய்கின்றனர். அதிகாரிகள் இதனைக் கட்டுப்படுத்தவும் இல்லை.
கட்டுப்படுத்த வாய்ப்பில்லை
`தி இந்து’விடம், நாகர்கோவில் வட்டார போக்குவரத்து அதிகாரி ரஜினிகாந்த் கூறியதாவது:
ஒவ்வொரு சீஸன் மற்றும் சனி, ஞாயிறு நாட்களில் ஆம்னி பேருந்துகளை, வட்டார போக்குவரத்து அலுவலக ஊழியர்கள் கண்காணித்து வருகிறோம். தற்போது அதிக கட்டணம் வசூல் செய்ததாக நோட்டீஸ் கொடுக்கப்பட்டு அபராதம் விதிக்கப்பட்ட பேருந்துகள் மீது முறையான நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. மாவட்ட ஆட்சியர் இதற்கான நடவடிக்கை மேற்கொள்வார். ஆன்லைன் புக்கிங்கில் அதிக கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு வசூல் செய்தாலும், அதை வட்டார போக்குவரத்து அதிகாரிகளால் கட்டுப்படுத்த முடியாது. நாகர்கோவிலில் இருந்து புறப்படும் ஆம்னி பேருந்துகளுக்கு சென்னை, திருவனந்தபுரம், பெங்களூரு மற்றும் பிற மாநிலங்களில் முன்பதிவு செய்கிறார்கள். எனவே, ஆன்லைன் புக்கிங் மீதான நடவடிக்கை சாத்தியமில்லை, என்றார்.
ஆலோசனைக் கூட்டம்
ஆம்னி பேருந்து கட்டணத்தை வரைமுறைப்படுத்தும் வகையில் பேருந்து உரிமையாளர்கள், புக்கிங் ஏஜன்டுகள், காவல்துறை, போக்குவரத்து அதிகாரிகள் பங்குபெறும் ஆலோசனைக் கூட்டம் நாகர்கோவிலில் 9-ம் தேதி நடைபெறவுள்ளது. தீபாவளி சீஸனின் போது, ஆம்னி பேருந்து நிலையத்தில் புகார் பெட்டி, வைக்கப்பட உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT