Published : 17 Jun 2023 03:09 PM
Last Updated : 17 Jun 2023 03:09 PM

சாத்தனூரில் குடிநீர் வழங்க வலியுறுத்தி  காலி குடங்களுடன் பொது மக்கள் சாலை மறியல்

குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் குடிநீர் வழங்க வலியுறுத்தி கிராம மக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சாத்தனூரில் உள்ள 7 தெருக்களில் சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு அங்குள்ள 7 மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த 2022-ம் ஆண்டு மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் ரூ.50 லட்சம் மதிப்பில் வீடுகள் தோறும் குடிநீர் இணைப்புக்கான பணிகள் தொடங்கின.

ஆனால், அந்தப் பணிகள் தரமாகவும், தண்ணீர் செல்வதற்கான குழாய்களை முறையாக மேற்கொள்ளாதது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை கிராம மக்கள் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் எந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படாமல் இருந்த நிலையில், கடந்த 10 நாட்களாக குடிநீர் வழங்குவது நிறுத்தப்பட்டது.

இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள், அந்த கிராமத்தைச் சேர்ந்த வெண்ணிலா தலைமையில், ஆடுதுறை- தரங்கம்பாடி சாலை, சாத்தனூரில் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து வந்த திருவிடைமருதூர் காவல் ஆய்வாளர் ராஜேஷ், திருநீலக்குடி காவல் உதவி ஆய்வாளர் முருகானந்தம் மற்றும் போலீஸார், அந்த இடத்துக்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம், குடிநீர் வழங்குவதற்காக நடவடிக்கை உடனடியாக மேற்கொள்ளப்படும் என உறுதிளித்ததின் பேரில் சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

இதனால் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது தொடர்பாக வெண்ணிலா கூறியது, " ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் நடைபெற்ற பணிகள் தரமானதாக அமைக்காதது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்திடம் புகாரளிக்கப்பட்டது.

ஆனால் நடவடிக்கை மேற்கொள்ளப்படாமல் இருந்ததால்,கடந்த 10 நாட்களாக குடிநீர் வழங்குவது நிறுத்தப்பட்டது. இதனால் சுமார் 2 கி.மீ.தூரம் சென்று குடிநீர் எடுத்து வரவேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டோம். எனவே, சாத்தனூர் பகுதிக்கு தரமான குடிநீர் முறையாக வழங்காவிட்டால் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவோம்” எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x