Published : 17 Jun 2023 03:56 AM
Last Updated : 17 Jun 2023 03:56 AM
சென்னை: இதய அறுவை சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை, அமலாக்கத்துறை அதிகாரிகள் அந்த மருத்துவமனையிலேயே 8 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி, உயர் நீதிமன்ற உத்தரவுப்படி தற்போது சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்னும் சில நாட்களில் அங்கு அவருக்கு இதய பைபாஸ் அறுவை சிகிச்சை செய்வதற்கான பணிகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில், செந்தில் பாலாஜியை 15 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க கோரி, அமலாக்கத் துறை சார்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
விசாரணை அதிகாரியான அமலாக்கத் துறை துணை இயக்குநர் கார்த்திக் தாசரி தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது: செந்தில் பாலாஜியின் வீட்டில் சோதனைக்கு சென்றபோது, அமைச்சர் என்ற தொனியில் அமலாக்கத் துறை அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்து, விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்துவிட்டார். அன்றைய தினம் நடைபயிற்சிக்கு சென்றபோது நன்கு ஆரோக்கியத்துடன் இருந்த அவர் திடீரென நெஞ்சுவலி என்று கூறி, அரசு மருத்துவமனையில் சேர்ந்துள்ளார்.
போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது, அரசு போக்குவரத்து கழகங்களில் பல்வேறு முறைகேடுகளை செய்து தகுதியற்ற பலருக்கு பணிநியமனம் வழங்கியுள்ளார். அவர் சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் உள்ளன. அவரை வெளியே விட்டால், சாட்சிகளை கலைத்து விடுவார். அவரை காவலில் எடுத்து விசாரித்தால் மட்டுமே உண்மை தெரியவரும். எனவே, அவரை 15 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கோரப்பட்டிருந்தது. இதேபோல, ஜாமீன்கோரி செந்தில் பாலாஜி தரப்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டது.
சென்னை முதன்மை அமர்வு நீதிபதி எஸ்.அல்லி முன்பு இந்த மனுக்கள் மீதான விசாரணை நேற்று முன்தினம் மாலை நடந்தது.
அப்போது, செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, வழக்கறிஞர் சரவணன் ஆகியோரும், அமலாக்கத் துறை சார்பில் மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏஆர்எல் சுந்தரேசன் மற்றும் அமலாக்கத் துறையின் சிறப்பு அரசு வழக்கறிஞர் என்.ரமேஷ் ஆகியோரும் ஆஜராகி வாதிட்டனர்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அல்லி, இந்த மனுக்கள் மீதான தீர்ப்பை நேற்றைக்கு தள்ளிவைத்தார்.
அதன்படி, நீதிபதி அல்லி முன்புஅமலாக்கத் துறை சார்பில் வழக்கறிஞர் என்.ரமேஷ், செந்தில் பாலாஜிதரப்பில் வழக்கறிஞர் சரவணன் ஆகியோர் நேற்று மாலை ஆஜராகினர். காணொலி வாயிலாக செந்தில் பாலாஜியும் ஆஜர்படுத்தப்பட்டார்.
இதையடுத்து நீதிபதி அல்லி பிறப்பித்த உத்தரவு: தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை அதிகாரிகள் 8 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்கலாம். அதிகாரிகள் அந்த மருத்துவமனையிலேயே விசாரணையை தொடர வேண்டும்.
விசாரணை முடிந்த பிறகு, அவரைஜூன் 23-ம் தேதி மாலை 3 மணிக்குகாணொலி காட்சி வாயிலாக ஆஜர்படுத்த வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார். செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கோரிய மனுவை தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டார்.
இடையூறு இருந்தால்..: செந்தில் பாலாஜி தரப்பில் வழக்கறிஞர் சரவணன் ஆஜராகி, ‘‘அவருக்கு 3 நாட்களில் பைபாஸ் அறுவை சிகிச்சைசெய்யப்பட உள்ளது. இந்த சூழலில்காவலில் எடுத்து விசாரிக்க அனுமதித்தால், அமலாக்கத் துறையினரால் அவருக்கு இடையூறு ஏற்படாது என்பதற்கு என்ன உத்தரவாதம் உள்ளது’’ என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு நீதிபதி, ‘‘விசாரணையின்போது, இடையூறு இருப்பதாக கருதினால், தாராளமாக நீதிமன்றத்தை அணுகலாம்’’ என்றார்.
அமலாக்கத் துறைக்கு பல்வேறு நிபந்தனைகள்: செந்தில் பாலாஜியை 8 நாள் காவலில் எடுத்து விசாரிக்கும் அமலாக்கத் துறைக்கு பல்வேறு நிபந்தனைகளை அமர்வு நீதிமன்றம் விதித்துள்ளது.
அதன் விவரம்:
> மருத்துவமனையைவிட்டு அவரை வேறு எங்கும் அழைத்துச் செல்லக் கூடாது. அவருக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்.
> அவரது உடல்நிலை குறித்து அறிந்து, அவருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களின் ஒப்புதல் பெற்றே விசாரிக்க வேண்டும்.
> அவருக்கோ, சிகிச்சைக்கோ இடையூறு, துன்புறுத்தல், அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதத்தில் விசாரணை இருக்க கூடாது.
> அவருக்கு தேவையான உணவு வழங்கப்பட வேண்டும்.
> விசாரணையின்போது குடும்ப உறுப்பினர்கள் அவரை சந்திக்க அனுமதிக்க வேண்டும். இவ்வாறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT