Published : 17 Jun 2023 05:16 AM
Last Updated : 17 Jun 2023 05:16 AM
சென்னை: அதிமுகவை முதல்வர் ஸ்டாலின் சீண்டி பார்க்கக் கூடாது என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட வீடியோ பதிவில் கூறி யிருப்பதாவது: அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை கைது செய்துள்ள நிலையில், அதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் பல்வேறு கருத்துகளை தெரிவித்துள்ளார். அதிமுக தொடர்பாகவும், என்னைப் பற்றியும் சில கருத்துகளை கூறியுள்ளார்.
திமுக அரசின் 2 ஆண்டுகால ஆட்சியில் எல்லா துறையிலும் வளர்ச்சி என்று முதல்வர் கூறுகிறார். எல்லா துறைகளிலும் ஊழல்தான் வளர்ச்சி பெற்றுள்ளது. எல்லா வகையிலும் பணம். அது ஒன்றுதான் குறிக்கோள். அதை பொறுத்துக்கொள்ள முடியாமல்தான், அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், ரூ.30 ஆயிரம் கோடியை வைத்துக் கொண்டு, என்ன செய்வது என்று தெரியாமல் உதயநிதியும், சபரீசனும் தடுமாறி வருவதாக ஆடியோ ஒன்றில் தெரிவித்திருந்தார்.
தமிழகத்தில் 6 ஆயிரம் மதுபானக் கடைகள் உள்ளன. அதில் 5 ஆயிரத்து 600 பார்கள் உள்ளன. அதில் 3 ஆயிரத்து 500 பார்களுக்கு டெண்டர் விடப்படவில்லை. இந்த முறைகேடான பார்களில் இருந்து வரும் வருமானம் முதல்வரிடம் சென்றது. அந்த ரூ.30 ஆயிரம் கோடியில் பெரும்பாலான பணம், செந்தில் பாலாஜி மூலமாக வந்ததாகக் கூறப்படுகிறது.
இதை செந்தில் பாலாஜி அமலாக்கத் துறையிடம் தெரிவித்து விடுவார் என்ற அச்சத்தில் பதறிப்போய், முதல்வர் ஸ்டாலினும், அமைச்சர்களும் செந்தில் பாலாஜியை ஓமந்தூரார் மருத்துவமனையில் பார்க்கின்றனர். அப்படி தெரிவித்து விட்டால் தனது குடும்பமும், அரசியல் வாழ்க்கையும் பூஜ்ஜியமாகிவிடும் என்பதால் பதறிப்போய் பார்த்துள்ளார்.
திமுகவைச் சேர்ந்த எம்எல்ஏ வீட்டில் வருமானவரித் துறை சோதனை நடத்தியபோதும், 2ஜி ஊழல் வழக்கில் ஆ.ராசாவும், கனிமொழியும் கைது செய்யப்பட்டபோதும் எந்த ஆர்ப்பட்டமும் கிடையாது. தனது சகோதரியை திகார் சிறைக்கு சென்றுகூட ஸ்டாலின் பார்க்கவில்லை. ஆனால் செந்தில் பாலாஜியை கைது செய்தபோது, இவ்வளவு பதற்றம் எதற்காக?
எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலின், பொதுக்கூட்டத்தில் பேசியபோது, போக்குவரத் துறையில் வேலைவாங்கித் தருவதாக பணம் பெற்றுக்கொண்டு ஏமாற்றியதால் செந்தில் பாலாஜி மீது 48 பேர் புகார் கொடுத்துள்ளனர் என்று பேசினார். இன்று எப்படி செந்தில் பாலாஜி நல்லவராகி விட்டார்.
அதிமுகவை முதல்வர் ஸ்டாலின் சீண்டி பார்க்கக் கூடாது. அதிமுகவை எந்த காலத்திலும் திமுகவால் என்றும் செய்ய இயலாது. இந்த இயக்கத்தை யாராலும்அழிக்க முடியாது. இந்த ஊழலுக்கு திமுக கூட்டணி கட்சிகள் துணைபோக வேண்டாம்.
அதிமுகவை பாஜகவின் அடிமை என்று முதல்வர் கூறி இருக்கிறார். இதே பாஜகவுடன் 1999-ம்ஆண்டு கூட்டணி வைத்து, அமைச்சரவையில் திமுக இடம்பெற்றது. அதிமுகவினர் யாரும் எந்த கட்சிக்கும் அடிமையானவர்கள் இல்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT