Published : 17 Jun 2023 05:35 AM
Last Updated : 17 Jun 2023 05:35 AM
தஞ்சாவூர்: காவிரி டெல்டா மாவட்டங்களின் பாசனத்துக்காக கல்லணையிலிருந்து நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு நேற்று தண்ணீர் திறந்துவைத்தார். இதில், 6 மாவட்ட ஆட்சியர்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
காவிரி டெல்டா மாவட்டங்களின் பாசனத்துக்காக மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 12-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தண்ணீர் திறந்துவைத்தார். இந்த தண்ணீர் தஞ்சாவூர் மாவட்ட எல்லையான கல்லணைக்கு நேற்று வந்து சேர்ந்தது.
இதையடுத்து, அங்கு நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், விநாயகர், ஆஞ்சநேயர், காவிரித் தாய் சிலைகளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.
பின்னர், அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் மக்கள் பிரதிநிதிகள், அதிகாரிகள், விவசாயிகள் ஊர்வலமாகச் சென்று முதலில் காவிரியிலும், தொடர்ந்து வெண்ணாறு, கல்லணைக் கால்வாய், கொள்ளிடம் ஆகிய ஆறுகளிலும் தண்ணீரைத் திறந்துவிட்டனர். அப்போது, விவசாயம் செழிக்க வேண்டி பூக்களையும், நவதானியங்களையும் ஆற்றில் தூவினர்.
தொடக்கத்தில், காவிரி, வெண்ணாறு, கொள்ளிடத்தில் தலா 500 கனஅடியும், கல்லணைக் கால்வாயில் 100 கனஅடியும் தண்ணீர் திறந்துவிடப்பட்டது.
இந்த நிகழ்வில் எம்.பி.க்கள் எஸ்.எஸ்.பழநிமாணிக்கம், செ.ராமலிங்கம், சு.கல்யாணசுந்தரம், எம்எல்ஏ-க்கள் துரை.சந்திரசேகரன், கா.அண்ணாதுரை, மாவட்ட ஆட்சியர்கள் தீபக் ஜேக்கப் (தஞ்சாவூர்), பிரதீப் குமார் (திருச்சி), ஏ.பி.மகாபாரதி (மயிலாடுதுறை), சாருஸ்ரீ (திருவாரூர்), ஜானி டாம் வர்கீஸ் (நாகை), மெர்சி ரம்யா (புதுக்கோட்டை), நீர்வள ஆதாரத் துறை தலைமைப் பொறியாளர் ராமமூர்த்தி, கண்காணிப்புப் பொறியாளர் முருகேசன் மற்றும் முன்னோடி விவசாயிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கே.என்.நேரு கூறியதாவது: கல்லணையிலிருந்து திறக்கப்பட்டுள்ள நீரை விவசாயிகள் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும். டெல்டா மாவட்டங்களில் துார்வரும் பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்துள்ளன. கடைமடைக்கு தண்ணீர் சென்றடைவதற்குள், 100 சதவீதப் பணிகள் முடிவடைந்துவிடும். தேவைக்கு ஏற்ப தண்ணீர் திறப்பு படிப்படியாக அதிகரிக்கப்படும்.
இந்தப் பாசனத்தின் மூலம், தஞ்சாவூர் மாவட்டத்தில் 1.08 லட்சம் ஏக்கர், திருவாரூர் மாவட்டத்தில் 92,214 ஏக்கர், நாகை மாவட்டத்தில் 22,805 ஏக்கர், மயிலாடுதுறை மாவட்டத்தில் 93,750 ஏக்கர், கடலூர் மாவட்டத்தில் 24,976 ஏக்கர் என மொத்தம் 3.42 லட்சம் ஏக்கரில் குறுவைசாகுபடி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்குத் தேவைப்படும் அளவுக்கு, கூட்டுறவுத் துறை மூலம் கடனுதவிகள் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT