Published : 25 Oct 2017 10:35 AM
Last Updated : 25 Oct 2017 10:35 AM
கந்துவட்டியை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இதற்காக வங்கிகள் மூலம் எளிமையான நுண்கடன் வழங்கி வருகின்றன.
இருப்பினும் நடைபாதை வியாபாரிகள், குறுந்தொழில் செய்பவர்கள் அந்தக் கடன்களை வாங்காமல் கந்துவட்டிக்கு கடன்களை பெறுகின்றனர். வட்டிக்கு வட்டி போட்டு கந்து வட்டிக்காரர்கள் தங்களை சுரண்டினாலும் சிறு வியாபாரிகள் இவர்களை நாடிச் செல்கின்றனர். இதற்கு அவர்கள் சொல்லும் காரணம், எந்த நேரத்தில் கேட்டாலும் கடன் கிடைக்கிறது என்பதுதான்.
இதுகுறித்து சென்னையை சேர்ந்த சில வியாபாரிகள் கூறியதாவது:
கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி கடை நடத்தும் மாரிமுத்து: நான் கடந்த 10 ஆண்டுகளாக இங்கு காய்கறி வியாபாரம் செய்கிறேன். வியாபாரத் தேவைக்காக வாரத்துக்கு ரூ.10 ஆயிரம் கந்துவட்டிக்காரர்களிடம் கடன் வாங்குவேன். தினமும் வட்டியுடன் சேர்த்து ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்துகிறேன். வட்டி அதிகமாக வாங்குகிறார்கள் என்று தெரிந்தேதான் வாங்குகிறேன். வங்கிக்கு கடன் வாங்கச் சென்றால் பல்வேறு ஆவணங்களைக் கேட்கின்றனர். அத்துடன் தேவையின்றி அலைய விடுகின்றனர். தினமும் வங்கிக்கு அலைந்தால் வியாபாரம் பாதிக்கிறது. எனவே, வேறு வழியின்றி கந்துவட்டிக்கு கடன் வாங்கி வியாபாரம் செய்கிறேன்.
அதே பகுதியில் பூ வியாபாரம் செய்யும் ஒரு பெண்: நான் வியாபாரத்துக்காக தினமும் தண்டல் மூலம் கடன் வாங்குகிறேன். தினமும் காலையில் 900 ரூபாய் கடன் வாங்கி மாலையில் அதற்கு 100 ரூபாய் வட்டியுடன் சேர்த்து ஆயிரம் ரூபாய் திருப்பிச் செலுத்துவேன். ஒருநாள் தவணைத் தொகை செலுத்தத் தவறினால் மறுநாள் வட்டிக்கு வட்டி சேர்த்து கட்ட வேண்டும். தவறினால் அடியாட்கள் வந்து மிரட்டுவார்கள். இப்பகுதியில் நாங்கள் வியாபாரம் செய்ய விடமாட்டார்கள்.
சிந்தாதிரிப்பேட்டை மீன் மார்க்கெட்டில் வியாபாரம் செய்யும் முத்துசாமி: வியாபாரத்தை தொடங்கிய நாள் முதல் தினமும் வட்டி கட்டி வருகிறேன். தண்டல், கந்துவட்டி, மீட்டர் வட்டி, ரன் வட்டி என அனைத்து வட்டிகளையும் வாங்கிவிட்டேன். நான் வியாபாரத்தில் லாபம் சம்பாதித்த தொகையைவிட வட்டி கட்டிய தொகைதான் அதிகம்..
சிறு வியாபாரிகளுக்கு வழங்கப்படும் கடன் விவரம் குறித்து, முன்னோடி வங்கி அதிகாரி ஒருவர் கூறியதாவது:
நடைபாதை வியாபாரிகள், சிறு, குறு வியாபாரிகளை கந்துவட்டிக் கொடுமையில் இருந்து காப்பதற்காக மத்திய அரசு கடந்த 2015-ம் ஆண்டு ‘முத்ரா’ என்ற வங்கிக் கடன் திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
இத்திட்டத்தில், எவ்வித பிணைத் தொகையும் இன்றி வழங்கப்படும் கடன் நடைபாதை வியாபாரிகள், குறு வியாபாரிகள், வீடுகளில் மாவு அரைத்து விற்பவர்கள், பங்க் கடை நடத்தி வருபவர்கள், தள்ளுவண்டியில் வியாபாரம் செய்பவர்கள் உள்ளிட்டோருக்கு வழங்கப்படுகிறது.
‘சிஷு’ திட்டத்தின் கீழ் ரூ.50 ஆயிரம் வரையும், ‘கிஷோர்’ திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரையும், ‘தருண்’ திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சம் வரையும் குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படுகிறது. கடன் பெற விரும்புவோர் தங்களது ஆதார் அட்டை, புகைப்படம், முகவரிக்கான சான்றுகளை மட்டும் காண்பித்தால் போதுமானது. அவர்களுக்கு கடன் வழங்கப்படும்.
தவிர, படித்த வேலையில்லாத இளைஞர்கள், பட்டதாரி இளைஞர்கள் மற்றும் ‘நீட்ஸ்’ திட்டத்தின் கீழ் புதிய தொழில் முனைவோர்களுக்கும் பல்வேறு கடன்கள் வழங்கப்படுகின்றன.
கடன் வாங்குவதில் வியாபாரிகள் காட்டும் ஆர்வம் அதைத் திருப்பிக் கட்டுவதில் செலுத்துவதில்லை. இதனால், வங்கி மேலாளர்கள் உண்மையாக திருப்பி செலுத்தும் நபர்களுக்குக்கூட கடன் வழங்கத் தயங்குகின்றனர்.
மேலும், மேலாளர்கள் தாங்கள் வழங்கிய கடனை திருப்பி வசூலிக்கவில்லை எனில் அவர்கள்தான் பொறுப்பேற்க வேண்டி உள்ளது.
எனவே, முறையான ஆவணங்களுடனும், வாங்கிய கடனை சரியாக திருப்பிச் செலுத்துவேன் என்ற மன உறுதியுடன் வந்தால் கடன் வழங்க வங்கிகள் தயாராக உள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT