Published : 30 Oct 2017 01:58 PM
Last Updated : 30 Oct 2017 01:58 PM
பிளக்ஸ் பேனர்களில் உயிருடன் இருப்பவர்களின் புகைப்படங்கள் இடம் பெறக்கூடாது என்ற உயர் நீதிமன்ற உத்தரவை மதுரையில் அதிமுகவினர் பின்பற்றுவது வரவேற்பை பெற்றுள்ளது.
சமீபத்தில் உயர் நீதிமன்றத்தில், தனிநபர் தொடர்ந்த பொதுநலன் வழக்கில், அரசியல் கட்சியினர் வைக்கும் பிளக்ஸ் பேனர்களில் உயிருடன் இருப்பவர்களின் புகைப்படம் இடம் பெறுவதை தடுக்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தார்.
இம்மனுவை விசாரித்த நீதிபதி எஸ். வைத்தியநாதன், அரசியல் கட்சியினர் பொது இடங்களில் வைக்கும் பிளக்ஸ் பேனர்களில் உயிருடன் இருப்பவர் புகைப்படங்கள் இடம் பெற தடை விதித்து உத்தரவிட்டார். இந்த உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற அமர்வு, தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்தது. இந்த உத்தரவை திமுக உள்ளிட்ட சில கட்சியினர் வரவேற்றுள்ளனர்.
இதற்கிடையில், சில நாட்களுக்கு முன் திருச்சியில் நடந்த எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவையொட்டி அதிமுகவினர் வைத்திருந்த பிளக்ஸ் பேனர்களில் உயிருடன் இருக்கும் சிலரது படங்கள் இடம் பெற்றிருந்தன. இது பற்றிய தகவல் நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. நீதிமன்ற கண்டிப்புக்குப் பிறகு, சர்ச்சைக்குரிய அதிமுக பேனர்கள் அகற்றப்பட்டன. சில நாளுக்கு முன், சங்கரன்கோவிலில் அதிமுகவினர் வைத்திருந்த பேனர்களில் உயிரோடு இருப்பவர்களின் படங்களை இடம் பெற செய்த அக்கட்சியினர் மீது காவல்துறை வழக்கு பதிந்தது.
இந்நிலையில் மருதுபாண்டியர், தேவர் ஜெயந்தி, குரு பூஜையையொட்டி மதுரை நகர், புறநகர் பகுதிகளில் பல்வேறு இடங்களில் அமைச்சர்கள் மற்றும் அதிமுகவினர் பெரிய பிளக்ஸ் பேனர்களை வைத்துள்ளனர். பெரும்பாலான பேனர்களில் பெரியார், அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்கள் மட்டுமே இடம் பெற்றிருந்தன. பேனர்கள் வைத்தவர்களின் பெயர், கட்சியின் பொறுப்புகள் இடம் பெற்றிருந்தன. இதன்மூலம் நீதிமன்ற உத்தரவை அதிமுகவினர் பின்பற்றுவது, அக்கட்சியிலும், சமூக ஆர்வலர்கள் மத்தியிலும் வரவேற்பை பெற்றுள்ளது.
அதிமுக நிர்வாகி ஒருவர் கூறியதாவது: உயிருடன் இருப்பவர்களின் படம் பேனர்களில் இடம்பெறக் கூடாது என உயர் நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு, பெரும்பாலும் யாரும் தங்களது புகைப்படங்களை இடம் பெறச் செய்வதில்லை. மறைந்த தலைவர்களின் புகைப்படங்களை மட்டுமே போடுகிறோம் மீறினால் வழக்கு பதியப்படும் என்பதால் நீதிமன்ற உத்தரவை பின்பற்றுகிறோம். இதுதொடர்பாக கட்சியினருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT