Published : 04 Oct 2017 11:39 AM
Last Updated : 04 Oct 2017 11:39 AM
சுதந்திரப் போராட்ட வீரர் திருப்பூர் குமரன் பிறந்தநாள், அரசு விழாவாக இன்று கொண்டாடப்படுகிறது. 10 ஆண்டு கால கோரிக்கையை ஏற்று இவ்விழாவைக் கொண்டாடும் அரசு, அவரது பெயரில் சென்னிமலையில் நினைவு மண்டபம் அமைக்க வேண்டும் என அவரது உறவினர்களும், தேசபக்தர்களும் வலியுறுத்தியுள்ளனர்.
தேசியக் கொடியைக் காக்க தன்உயிர் நீத்த சுதந்திரப் போராட்ட வீரர் திருப்பூர் குமரன், ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் பிறந்தவர். சுதந்திரத்திற்காக பாடுபட்ட தலைவர்களைப் பெருமைப்படுத்தும் வகையில், தமிழக அரசு அவர்களது பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாடுவது போல், திருப்பூர் குமரன் பிறந்தநாளையும் அரசு விழாவாக கொண்டாட வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக தொடர்ந்து வந்தது. இந்த கோரிக்கையை ஏற்கும் வகையில், திருப்பூர் குமரனின் பிறந்தநாள் (அக்டோபர் 4-ம் தேதி) அரசு விழாவாக கொண்டாடப்படும் என சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதையடுத்து இன்று (4-ம் தேதி) சென்னிமலையில் திருப்பூர் குமரன் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது.
இவ்விழாவில், அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.சி.கருப்பணன், உடுமலை ராதாகிருஷ்ணன், கடம்பூர் ராஜூ, சேவூர் எஸ்.ராமச்சந்திரன் , ஆட்சியர் எஸ்.பிரபாகர் மற்றும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்கவுள்ளனர். இவ்விழவில், கொடிகாத்த குமரன் பிறந்த இடத்தில் அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்துவதோடு, குமரன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தவுள்ளனர். திருப்பூர் குமரனின் வாழ்க்கை வரலாறு தொடர்பான கண்காட்சியையும் அமைச்சர்கள் தொடங்கி வைக்கவுள்ளனர்.
தங்களது பல ஆண்டுகால கோரிக்கை நிறைவேற்றப்பட்டதால் குமரனின் உறவினர்களும், தேசபக்தர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தீரன் சின்னமலைக்கு ஓடாநிலையில் மணிமண்டபம் கட்டியது போல, திருப்பூர் குமரனுக்கும் சென்னிமலையில் மணி மண்டபம் கட்ட வேண்டும் என்றும் அவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக, திருப்பூர் குமரனின் தம்பி ஆறுமுகத்தின் மகன் அண்ணாதுரை ‘தி இந்து’விடம் கூறியதாவது:
திருப்பூர் குமரன் பிறந்து வாழ்ந்த வீடு சென்னிமலையில் உள்ளது. மணிமண்டபம் கட்ட அந்த வீட்டினை வழங்க தயாராக உள்ளோம். குமரனுக்கு மணி மண்டபம் கட்ட வேண்டும் என்பதற்காக, காங்கேயம் எம்.எல்.ஏ.க்களாக இருந்த ராஜ்குமார் மன்றாடியார், செல்வி முருகேசன், விடியல் சேகர், என்.எஸ்.என். நடராஜ், தனியரசு உள்பட பலரிடம் கோரிக்கை வைத்துள்ளேன். மணிமண்டபம் கட்ட இந்த இடம் போதாது எனில், சென்னிமலையில் வேறு எந்த இடத்தில் மணிமண்டபம் அமைந்தாலும் மகிழ்ச்சியடைவோம்.
அதேபோல், காமராஜர் முதல்வராக இருந்தபோது, 1961-ல் திருப்பூர் குமரன் குடும்பத்திற்கு என கொடுமுடி காசிபாளையம் பிரிவு பகுதியில் 10 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டது. அந்த நிலத்திற்கு செல்லும் வழியில் உள்ள குறுகிய பாலத்தை விரிவு படுத்தி கட்ட வேண்டும். திருப்பூர் குமரன் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாட முயற்சி எடுத்த ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. தென்னரசு மற்றும் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம், என்றார்.
சென்னிமலையில் உள்ள குமரன் சிலையை தொடர்ந்து பராமரிக்கவும், மணி மண்டப முயற்சிகளைத் தொடரவும் தியாகி குமரன் நினைவு அறக்கட்டளை அமைக்க அவரது உறவினர்கள் மற்றும் தேச பக்தர்கள் முடிவு செய்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT