Published : 20 Oct 2017 06:02 PM
Last Updated : 20 Oct 2017 06:02 PM

பழநியில் கந்தசஷ்டி விழா காப்புகட்டுதலுடன் துவங்கியது: விரதத்தை துவங்கிய பக்தர்கள்

 

பழநி தண்டாயுதபாணிசுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு காப்புக்கட்டும் நிகழ்ச்சி நேற்று உச்சிகால பூஜையைத் தொடர்ந்து நடைபெற்றது. சுவாமிக்கு காப்பு கட்டிய பிறகு ஏராளமான பக்தர்கள் தங்கள் கைகளில் காப்பு கட்டி விரதம் இருக்கத் துவங்கினர்.

திண்டுக்கல் மாவட்டம் பழநியிலுள்ள மலைக்கோயில் எனப்படும் தண்டாயுதபாணிசுவாமி கோயிலில் கந்தசஷ்டிவிழா நேற்று துவங்கியது. விழாவின் துவக்கமாக உச்சிகால பூஜை முடிந்தவுடன் மலைக்கோயிலில் உள்ள விநாயகர், சின்னக்குமாரர், சண்முகர், துவாரபாலகர்களுக்கு காப்புகட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

பட்டத்து குருக்கள் அமிர்தலிங்கம் சுவாமிக்கு காப்புகட்டினார். கோயில் இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் மேனகா மற்றும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

மலைக்கோயிலில் காப்புக் கட்டியவுடன், ஊர்க்கோயில் என அழைக்கப்படும் பெரியநாயகியம்மன் கோயிலில் சோமாஸ்கந்தர், முத்துக்குமாரசுவாமி, வள்ளி, தெய்வானை ஆகியோருக்கு காப்புக்கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து திருஆவினன்குடியில் மூலவருக்கு காப்புக் கட்டும் வைபவம் நடைபெற்றது.

காப்புகட்டுதல் நிகழ்ச்சியில் பங்கேற்ற பக்தர்கள் தங்கள் கைகளில் காப்புக் கயிறு கட்டிக்கொண்டனர். பக்தர்கள் நேற்று துவங்கி ஒரு வாரம் வரை சஷ்டி விரதம் கடைப்பிடிப்பார்கள்.

கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு சுவாமிக்கு தினமும் காலையும் மாலையும் அபிஷேக, ஆராதனைகள் நடைபெறும். தினமும் சமயசொற்பொழிவுகள் மற்றும் கலைநிகழ்ச்சிகளுக்கு கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் அக்டோபர் 25 ம் தேதி கிரிவீதிகளில் நடைபெறுகிறது. இதையடுத்து மறுநாள், திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறும்.

இன்று நடந்த காப்புக் கட்டும் வைபவத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x