Published : 28 Oct 2017 09:43 AM
Last Updated : 28 Oct 2017 09:43 AM
போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் சென்னையில் பறக்கும் ரயில் திட்டம் கொண்டு வரப்பட்டது. சென்னை கடற்கரை முதல் பரங்கிமலை வழியாக எண்ணூர் வரையில் 4 கட்டமாக இத்திட்டத்தை படிப் படியாக நிறைவேற்ற திட்டமிடப்பட்டது. முதல் கட்டமாக சென்னை கடற்கரை – மயிலாப்பூர் இடையே பறக்கும் ரயில் சேவை 1997-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இரண்டாம் கட்டமாக மயிலாப்பூர் - வேளச்சேரி இடையே 2007-ம் ஆண்டு ரயில்கள் இயக்கப்பட்டன.
3-வது கட்டமாக வேளச்சேரி – பரங்கிமலை இணைக்கும் பறக் கும் ரயில் திட்டப்பணி 2008-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
ஆதம்பாக்கம், தில்லை கங்கா நகரில் அப்பகுதி மக்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்ததால், இத்திட்டம் சில ஆண்டுகளாக கிடப்பில் இருந்தது. தற்போது, இப்பிரச்சினைக்கு நீதிமன்றம் மூலம் தீர்வு காணப்பட்டுள்ளது. எனவே, அடுத்த ஆண்டுக்குள் பணிகள் முடிக்கப்பட்டு ரயில் சேவை தொடங்கப்படும் என தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, நிலம் கையகப்படுத்துதல், முதலீடு அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் அடுத்தடுத்து மேற்கொள்ள வேண்டிய பறக்கும் ரயில் திட்டம் கிடப்பில் இருக்கிறது. கிடப்பில் உள்ள பறக்கும் ரயில் திட்டத்தை ரயில்வே மீண்டும் செயல்படுத்த வேண்டுமென வடசென்னை வளர்ச்சி குழு சார்பில் பிரதமர் அலுவலகத்துக்கு கடந்த மாதம் கோரிக்கை மனு அளித்தது.
இந்த மனுவை விசாரித்த பிரதமர் அலுவலகம், இத்திட்டத்தின் தற்போதைய நிலை குறித்து அறிக்கை வழங்க வேண்டுமென ரயில்வே துறையின் கட்டமைப்பு பிரிவுக்கு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக வடசென்னை வளர்ச்சி குழுவின் தலைவர் ஆர்.சரவணபெருமாள் ‘தி இந்து’ விடம் கூறியதாவது: பறக்கும் ரயில் திட்டம் தென்சென்னை – வடசென்னை பகுதிகளை இணைக்கும் வகையில் உருவாக்கப்பட்டது. இத்திட்டம் கால்வாய் பகுதிகள் ஓரமாக நிறைவேற்றுவதால், குடியிருப்பு பகுதி மக்களுக்கு பெரிய பாதிப்பு இல்லை. தற்போது சென்னை கடற்கரை – வேளச்சேரி வரை மட்டுமே பறக்கும் ரயில் சேவை உள்ளது. அடுத்த ஆண்டில் இந்த சேவை பரங்கிமலை வரையில் கிடைக் கும் என ரயில்வே அதிகாரிகள் கூறுகின்றனர்.
ஆனால், பரங்கிமலை – நெற்குன்றம் – பாடி – வில்லிவாக்கம் – மாத்தூர் – எண்ணூர் வரையிலான பறக்கும் ரயில் திட்டத்தை ரயில்வே கிடப்பில் போட்டுள்ளது.
இத்திட்டம் செயல்படுத்தினால் வடசென்னையில் போக்குவரத்து நெரிசல் குறையும், சாலை விபத்துக்களையும் குறைக்க முடியும். மெட்ரோ ரயிலை ஒப்பிடும்போது கட்டணமும் குறைவு என்பதால் லட்சக்கணக்கான மக்கள் பயன்படுத்துவார்கள். இத்திட்டத்தை விரைவுப்படுத்த வேண்டுமென பிரதமர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளோம்.
அதன்படி, இத்திட்டம் குறித்து ஆய்வு நடத்திட, பிரதமர் அலுவலகம் ரயில்வே துறைக்கு உத்தரவிட்டுள்ளது. எனவே, இத்திட்டத்தை ரயில்வே விரைவாக செயல்படுத்தும் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT