Published : 18 Oct 2017 10:45 AM
Last Updated : 18 Oct 2017 10:45 AM

‘டெங்கு’ அபாயத்தில் 40 சதவீதம் மக்கள்: உலக சுகாதார நிறுவனம் அதிர்ச்சி தகவல்

உலகளவில் 40 சதவீதம் மக்கள் ‘டெங்கு’ அபாயத்தில் இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. ‘டெங்கு’ மரணங்கள் தொடர்ந்து நிகழ்வதால் காய்ச்சல் வந்தாலே மக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.

எனினும், தமிழக சுகாதாரத்துறையோ எல்லா மரணங்களும் டெங்குவால் ஏற்படவில்லை என்று மறுத்து வருகிறது.

இதுகுறித்து சுகாதாரத்துறை துணை இயக்குநர் அர்ஜூன்குமார் கூறியதாவது: பொதுவாக, கிராமப்புறங்களில் காய்ச்சல் கண்டாலே மருந்துக் கடைகளில் மாத்திரை வாங்கி சாப்பிடும் வழக்கம் அதிகமாக இருக்கிறது. அதுபோல, வீட்டுக்கே தேடி வந்து ஊசி போடும் போலி மருத்துவர்களையும் நாடுகின்றனர். இப்படி இரண்டு, மூன்று நாட்கள் ஊசி, மாத்திரை என கை வைத்தியம் பார்த்துவிட்டு கடைசியாக காய்ச்சல் குறையாத பட்சத்தில், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு வரும்போது நோயாளிக்கு நீர்ச்சத்து மிகவும் குறைந்துபோய் மற்ற நோய்களும் வர ஆரம்பிக்கின்றன.

தட்டணுக்கள் குறைந்தாலே ‘டெங்கு’ காய்ச்சல் என்கின்றனர். அது தவறு. தட்டணுக்கள் பலமுறையில் குறைய வாய்ப்பிருக்கிறது. பொதுவாக, தட்டணுக்கள் உடலில் சராசரியாக 1 ½ லட்சம் முதல் 4 லட்சம் வரை இருக்க வேண்டும். ஆனால், வைரஸ் காய்ச்சல் வந்தாலே தட்டணுக்கள் எண்ணிக்கை குறையும். அதனால், தட்டணுக்கள் குறைந்தால் பயப்பட வேண்டாம். தட்டணுக்கள் 10 ஆயிரத்துக்கு குறைவாகச் சென்றால்தான் உயிருக்கு ஆபத்து ஏற்படும். சில நேரம் 70 ஆயிரம், 80 ஆயிரத்துக்கு தட்டணுக்கள் எண்ணிக்கை வந்து செல்லும். ஒருநாள் குறையும், மறுநாள் மீ்ண்டும் கூடும்.

தட்டணுக்கள் குறையாமல் இருக்க நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். தட்டணுக்கள் குறைந்துவிட்டாலே டெங்கு என்றும் அர்த்தமாகிவிடாது. டெங்கு காய்ச்சல் வந்தாலும் பீதியடையத் தேவையில்லை. அதற்காக எந்த காய்ச்சலையும் எளிதாக எடுத்துக் கொள்ளக் கூடாது. காய்ச்சல் வந்தவுடனே நேரடியாக மருத்துவரை அணுக வேண்டும் என்றார்.

காந்திகிராம பல்கலைக்கழக கல்வியியல் துறைத் தலைவரும், கல்வியாளருமான ஏ. ஜாகீதா பேகம் கூறியதாவது: தமிழகத்தில் கடந்த நான்கு ஆண்டுகளாகவே குறிப்பிட்ட மாதங்களில் டெங்கு தொடர்ந்து பரவுகிறது.

தற்போது 40 சதவீதம் உலக மக்கள் டெங்கு காய்ச்சலுக்கு ஆளாகும் ஆபத்தான நிலையில் இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் (WHO) கூறுகிறது. அதனால், இந்த காய்ச்சலை ஒழிக்க உலகளவில் மிக அதிகப்படியான ஆய்வுகள் தேவைப்படுகின்றன.

டெங்கு என்பது மெதுவாக பரவக்கூடிய நோய் அல்ல. திடீரென நூற்றுக்கணக்கான மக்களுக்கு ஒரே நேரத்தில் பரவக்கூடியது. டெங்கு பரவுவதற்கான காலநிலை முக்கிய காரணம். டெங்கு கொசுக்களின் உற்பத்தி மழை, குளிர், வெப்பநிலையை பொறுத்தது. காலநிலை, டெங்கு இறப்பு, கொசுக்களின் உற்பத்தி, இவற்றையெல்லாம் கணக்கிட்டு டெங்கு எவ்வாறு, எங்கே அதிகமாக பரவும் என்பதை அறிய முடியும். டெங்கு காய்ச்சலை கண்டறியக்கூடிய வழிமுறைகளை பராகுவே, சிங்கப்பூர், இலங்கை போன்ற நாடுகள் பின்பற்றுகின்றன. இதை நாமும் பின்பற்றி டெங்கு கொசுக்களை ஒழிக்கக்கூடிய நவீன தொழில்நுட்ப முறைகளைக் கண்டறிய வேண்டும். கல்வி, ஆய்வு நிறுவனங்களிலும் ‘டெங்கு’ ஆய்வுக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x