Last Updated : 23 Oct, 2017 12:50 PM

 

Published : 23 Oct 2017 12:50 PM
Last Updated : 23 Oct 2017 12:50 PM

கந்துவட்டி சட்டப்படி குற்றம்; மக்கள் புகார் அளிக்க உதவி மையம் அமைக்கப்படும்: நெல்லை ஆட்சியர்

கந்துவட்டி சட்டப்படி குற்றம். கந்துவட்டி கொடுமைகள் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்க உதவி மையம் அமைக்கப்படும் என நெல்லை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.

நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கந்துவட்டி கொடுமையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தீக்குளித்தனர். தீக்குளித்த 4 பேரும் நெல்லை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் மாவட்ட ஆட்சியர் மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்வையிட்டார்.

பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், "தீக்குளித்த 4 பேருக்கும் 70%க்கும் மேல் காயம் ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளிக்குமாறு அறிவுறுத்தியுள்ளேன்.

இசக்கிமுத்துவின் சொந்த கிராமத்துக்கு போலீஸ் தனிப்படை விரைந்துள்ளது. விசாரணையில் புகாரில் உண்மை இருப்பது உறுதியானால் சம்பந்தப்பட்டவர்கள் மீது உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

நெல்லை மாவட்டத்தில் கந்துவட்டி பிரச்சினை நிலவுவதாக தகவல்கள் வருகின்றன. கந்துவட்டி சட்டப்படி குற்றச்செயலாகும். பொதுமக்களும் கந்துவட்டிக்குள் சிக்கிக் கொள்ள வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

கந்துவட்டி கொடுமையை ஒழிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படும். வருவாய் துறை, காவல்துறை உதவியுடன் தனிக்குழு அமைக்கப்படும். உதவி மையம் அமைக்கப்பட்டு பிரத்யேக தொலைபேசி எண் அறிவிக்கப்படும்.

மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இதுபோன்ற தீக்குளிப்பு சம்பவங்களைத் தடுக்க நுழைவாயிலிலேயே போலீஸார் தீவிர சோதனையில் ஈடுபடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது" என்றார்.

தொடர்ச்சியாக 4-வது சம்பவம்:

கடந்த சில வாரங்களாகவே நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் தீக்குளிப்பு முயற்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

அண்மையில் விவசாயி ஒருவர் பயிர்க் காப்பீட்டுத் தொகை வராததையடுத்து தீக்குளிக்க முயன்றார். இதேபோல், ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் நில அபகரிப்புப் புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனத் தீக்குளிக்க முயன்றார்.

இன்று காலை தென்காசி கீழப்புளியூரைச் சேர்ந்தவர் நில அபகரிப்புப் புகார் கூறி தீக்குளிக்க முயன்றார். முதல் மூன்று சம்பவங்களிலும் காவல்துறையினர் தீக்குளிப்பு முயற்சியைத் தடுத்து நிறுத்தினர். ஆனால், இன்றைய சம்பவத்தில் ஈடுபட்ட இசக்கிமுத்து குடும்பத்தினர் ஆட்சியர் வளாகத்துக்குள் சென்றுவிட்டதால் போலீஸாரால் உடனடியாக தடுக்க முடியவில்லை எனக் கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x