Published : 16 Jun 2023 08:54 PM
Last Updated : 16 Jun 2023 08:54 PM
சென்னை: சத்தியமங்கலத்தில் 5 புலிகளை வேட்டையாடிய சம்பவத்தின் பின்னணியில் இருப்பது யார் என விசாரிக்கப்பட்டதா? என்று கேள்வி எழுப்பிய சென்னை உயர் நீதிமன்றம், இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களுடன் ஆஜராக, புலன் விசாரணை அதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு வனப்பாதுகாப்பு மற்றும் வனவிலங்குகள் வேட்டையாடுவதைத் தடுப்பது தொடர்பான வழக்குகள் நீதிபதிகள் என்.சதீஷ்குமார் மற்றும் டி.பரதசக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தன. அப்போது, மனுதாரர்கள் தரப்பில், வட இந்தியாவைச் சேர்ந்த பவாரியா கும்பலைச் சேர்ந்தவர்கள்தான் புலி வேட்டையில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்பட்டது.
அரசுத் தரப்பில், சத்தியமங்கலத்தில் 5 புலிகள் வேட்டையாடப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட ராஜஸ்தானைச் சேர்ந்த ஆறு பேருக்கு எதிரான வழக்கில் புலன் விசாரணை முடிந்து விட்டதாகவும், விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அரசுத் தரப்பு விளக்கத்துக்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், புலி வேட்டையின் பின்னணியில் யாரெல்லாம் இருக்கிறார்கள்? அவற்றின் தோல், பற்கள், நகங்கள் யாருக்கு விற்கப்பட்டன? இதில் சர்வதேச தொடர்பு இருக்கிறதா என விசாரிக்கப்பட்டதா என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்வி எழுப்பினர்.
இதற்கு அரசுத் தரப்பில் எந்த பதிலும் தெரிவிக்கப்படவில்லை. இதையடுத்து, இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களுடன் ஜூலை 5ம் தேதி ஆஜராகும்படி, புலன் விசாரணை அதிகாரிக்கும், வனக்குற்றத் தடுப்புப் பிரிவு அதிகாரிக்கும் உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஜூலை 5ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT