Published : 21 Oct 2017 11:13 AM
Last Updated : 21 Oct 2017 11:13 AM
தீபாவளியை கொண்டாட மக்கள் வெடித்த பட்டாசுகளின் புகை கொசுக்களை விரட்டுவதில் பெரும்பங்காற்றி, கொசுக்களால் ஏற்படும் நோய்களில் இருந்து மக்களை காக்க உதவியுள்ளது.
தமிழகத்தில் டெங்கு உள்ளிட்ட காய்ச்சல்களால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு சிலர் உயிரிழந்தும் வருகின்ற நிலையில் மாநிலம் முழுவதும் டெங்கு காய்ச்சலை தடுக்க அரசு பல்வேறு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வீடுகளுக்கு உள்ளாட்சி அமைப்புகள் மூலம் கொசு ஒழிப்பு பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கொசுக் கள் உற்பத்தியாகும் வகையில் செயல்படும் நிறுவனங்கள், தனி நபர்களுக்கு உள்ளாட்சி அமைப்புகள் அபராதம் விதித்து வருகின்றன.
கொசுக்களை கட்டுப்படுத்த வழக்கமாக உள்ளாட்சி அமைப்புகள் மாலை மற்றும் இரவு நேரங்களில் கொசுவைக் கட்டுப்படுத்தும் புகை மருந்து அடிப்பது வழக்கம்.
புகை மூட்டம் போட்டும் பொதுமக்கள் கொசுக்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள்.
தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு வெடிப்பதால் நகரமே புகை மண்டலமாக மாறி காற்று மற்றும் சுற்றுச்சூழல் மாசுபட்டுவரும் நிலையில், தீபாவளி பண்டிகைக்கு அனைத்து பகுதிகளிலும் ஒரே நேரத்தில் அதிகளவில் பட்டாசுகள் வெடிக்கப்படுவதால் அதில் இருந்து அதிகளவில் வெளியாகும் புகையால் கொசுக்கள் பெருமளவில் விரட்டப்படுகின்றன.
உள்ளாட்சி அமைப்புகளால் அடிக்கப்படும் கொசு மருந்து புகையை விட தீபாவளி பண்டிகைக்கு வெடிக்கப்படும் பட்டாசுகளால் ஏற்படும் புகை அளவு பன்மடங்கு அதிகம் என்பதால் இது தீவிர கொசு விரட்டியாக அமைந்து விடுகிறது.
கொசுக்களால் ஏற்படும் காய்ச்சல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், தீபாவளி பண்டிகையைக் கொண்டாட மக்கள் வெடித்த பட்டாசுகளால் ஏற்பட்ட புகை கொசுக்களை விரட்ட பேருதவியாக அமைந்துள்ளது. இதனால் காய்ச்சல் பாதிப்பு ஏற்படுவது பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
நிகழாண்டு சென்னை, மதுரை, திருச்சி உள்ளிட்ட நகரங்களில் பட்டாசு வெடித்ததால் புகை மண்டலம் ஏற்பட்டு காற்று மாசுபட்டாலும் கொசுக்களை விரட்டுவதிலும் பெரும் பங்காற்றி உள்ளதை மறுக்க முடியாது.
இதுகுறித்து உள்ளாட்சி அமைப்பின் நல அலுவலர் ஒருவர் கூறியபோது, “தீபாவளி பண்டிகையின்போது வெடிக்கப்படும் பட்டாசுகளால் புகை மண்டலம் ஏற்பட்டு காற்று மாசுபட்டாலும், பட்டாசுப் புகை கொசுக்களை விரட்டுவதில் பெரும் பங்காற்றுவதை மறுக்க முடியாது. இதை கடந்த 2004, 2006, 2016 உள்ளிட்ட ஆண்டுகளில் கண்கூடாக உணர முடிந்தது” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT